“ஐ’யம் பேக்!”

'சித்தி கொடுமை’! என்று சிம்பிள் மெயில் தட்டிவிட்டு தலைமறைவான அஞ்சலி, இதோ மீண்டும் வந்துவிட்டார்.

இடையில் 'அமெரிக்காவில் திருமணம்’, 'அரசியல்வாதி உறவினருடன் தஞ்சம்’, 'ரகசியக் காதலனுடன் பெங்களூரில் கஸ்டடி’ என ஏகப்பட்ட வதந்திகள். ஆனால், எதற்கும் பதில் அளிக்கவில்லை அஞ்சலி. கிண்ணென்று மீண்டும் வந்து கண்முன் நிற்கிறார்.

பிரியமான பால்ய சிநேகிதியாக 'கற்றது தமிழ்’ ஆனந்தி, குறும்புத் தோழியாக 'அங்காடி தெரு’ சேர்மக்கனி, அதட்டும் காதலியாக 'எங்கேயும் எப்போதும்’ மணிமேகலை... 'டூயட், டேட்டிங்’ ஹீரோயின்களிடையே அஞ்சலி நிச்சயம் 'சம்திங் ஸ்பெஷல்’தான்!

'அது கதை படமோ, கமர்ஷியல் படமோ கேக்கும்போதும் பார்க்கும்போதும் நல்லா இருக்கணும்!’ - இது மட்டுமே ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகும்போது அஞ்சலி யோசிக்கும் விஷயம்! அதனால்தான் எங்கெங்கோ சென்றாலும் மீண்டும் மீண்டும் தமிழ் சினிமா அவரை ஈர்த்துக்கொள்கிறது. அப்போதும் சரி... இப்போதும் சரி, அவரை பேட்டி என நெருங்குவதே கஷ்டம். ஆனால், பிடித்துப் பேசிவிட்டால், படபட பட்டாசுதான்!

சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவியுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை வந்தவரைச் சந்தித்தபோது, ''படம் பத்தி மட்டும் கேளுங்க...'' என்று அதட்டிவிட்டுத்தான் பேசினார்.

''களஞ்சியத்துக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை. ஏன் அவர் படத்துல நடிக்க மாட்டேனு...'' கேள்வியை முடிக்கும் முன்னரே,

''அவரோட படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னதுதான் பிரச்னை. இப்ப அது கோர்ட்ல இருக்கு. அதைப் பத்தி பேச வேணாமே!''

''உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?''

''தமிழ், தெலுங்கு, கன்னடம்னு கிட்டத்தட்ட தென்னிந்ததிய மொழி எல்லாத்துலயும் நடிச்சிட்டு இருக்கேன். அத்தனை மொழி சினிமாவிலும் எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அப்படி இருக்கிறப்ப, ரகசியமா கல்யாணம் பண்ற அளவுக்கு எனக்கு என்ன தேவை? ஆனா, நான் கொஞ்சம் பிரச்னையில இருந்தேன்ங்கிறது மட்டும் உண்மை. அதுல இருந்து இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளில வந்துட்டு இருக்கேன்!''

''உடல்ரீதியா உங்களுக்கு ஏதோ பிரச்னைனு சொன்னாங்களே?''

''நீங்களே பார்க்கிறீங்களே... உங்க முன்னாடிதானே உக்காந்துருக்கேன், ஆரோக்கியமாத்தானே இருக்கேன், ஒரு சீன் நடிச்சிட்டு வந்துதானே உங்ககூடப் பேசிட்டு இருக்கேன், உடம்பு முடியலைனா நடிக்க முடியுமா? பிடிக்காதவங்க ஆயிரத்தெட்டு விஷயம் பரப்புவாங்க. அவங்களுக்கு வேற வேலை இல்லை. அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா? அதான் நல்லபடியா வந்துட்டேன்ல. இனி நடக்கப்போறதைப் பத்தி மட்டும் பேசுவோம்!''

''இவ்ளோ இடைவெளிக்கு அப்புறம் இந்தப் படத்துல நடிக்கணும்னு எப்படி முடிவு எடுத்தீங்க?''

''இயக்குநர் சுராஜ் இந்தப் படத்துல நடிக்கணும்னு கேட்டார். 'என்ன கதை?’னு கேட்டேன். 'காமெடிதான் கதை. மத்தபடி கதையே இல்லைனுகூடச் சொல்லலாம்’னார். படத்துல என் கேரக்டர் பேரும் அஞ்சலிதான். ரீ-என்ட்ரியில முதல்ல ஜாலியான ஒரு படத்துல நடிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதான் உடனே கமிட் ஆகிட்டேன். தெலுங்குல 'கீதாஞ்சலி’, கன்னடத்துல புனித் ராஜ்குமார்கூட ஒரு படம்னு மொழிக்கு ஒண்ணா மூணு படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். செகண்ட் இன்னிங்ஸ்ல இன்னும் நிறைய ஸ்கோர் பண்ணணும்!'' என்கிறார் கண்களில் சிரிப்புடன்.

மேலும் பல ஆனந்தி, சேர்மக்கனி, மணிமேகலைகளுக்கு, வீ ஆர் வெயிட்டிங்!

- ம.கா.செந்தில்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!