பொறந்ததுல இருந்தே ரஜினி ரசிகன்! | lollu saba jeeva, jeeva, லொள்ளு சபா ஜீவா, ஜீவா, மாப்பிள்ளை விநாயகர், ரஜினி, maappillai vinayagar, rajini

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (21/07/2014)

கடைசி தொடர்பு:11:37 (21/07/2014)

பொறந்ததுல இருந்தே ரஜினி ரசிகன்!

''நீங்க எப்படி சுத்திப் பார்த்தாலும் வெள்ளையைத் தவிர வேற கலர் தெரியாது. ரஜினி சாருக்கு மட்டுமில்ல... காமராஜருக்கும் நான் தீவிரமான ரசிகன். இங்கே பார்த்தீங்களா... எல்லாமே வெள்ளை கலர் கதர் சட்டைகள்'' என அலமாரியைத் திறந்து காட்டுகிறார் 'லொள்ளு சபா’ ஜீவா.  'மாப்பிள்ளை விநாயகர்’ படத்தின் நாயகன்!  

 

'' 'மாப்பிள்ளை விநாயகர்’ ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகியிருக்கும். இவ்வளவு வருஷமாவா ஷூட் பண்றீங்க?''

''இதுல நான் ஹீரோ மட்டும் கிடையாது. எக்ஸிகியூட்டிவ் புரொடியூஸரும் கூட. அதனால தான் கொஞ்சம் கவனமாகவே கால் வைக்க வேண்டியதா இருக்கு. இன்னும் 15 நாள் ஷூட்டிங்கை முடிச்சுட்டு, ஜூலை, ஆகஸ்ட்ல ரிலீஸ் பண்ணிடுவோம். தவிர, இன்னும் ரெண்டு படத்துலேயும் ஹீரோவா நடிக்கிறதுக்கான வாய்ப்பு வந்திருக்கு. புரியலையா? சினிமால என் ரவுண்டு ஆரம்பமாகிடுச்சு!''

''ரஜினி...?'' என முடிப்பதற்குள்...

''என்கிட்ட இது தவிர்க்க முடியாத கேள்விதான்! ஆனா, நான் ஸ்டைல், மிமிக்ரியில் மட்டும் ரஜினியை ஃபாலோ பண்ணலை. 'சந்திரமுகி’ படத்துல ஜோதிகாவுக்குள்ள சந்திரமுகி நுழையுற மாதிரி, நான் 5-வது படிக்கும்போதே எனக்குள்ள ரஜினி வந்துட்டார். மாறுவேடப் போட்டியில் எல்லோரும் நேரு, காந்தி, சுபாஷ் சந்திர போஸ் மாதிரி வேஷம் போட்டு நடந்தப்போ, நான் மட்டும் ரஜினி மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு தலையைச் சிலுப்பினவன். 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...’ பாட்டுக்கு நான் ஆடினதைப் பார்த்து, எங்க பக்கத்து பள்ளிக்கூட வாத்தியார் அவங்க ஸ்கூலுக்கும் வந்து ஆடச் சொல்லி அடம்பிடிச்சார். அப்புறம் 'லொள்ளு சபா’லயும் ரஜினி கேரக்டர்களா தொடந்து கிடைச்சது சந்தோஷம். இப்பவும், தலைவரோட ரசிகர்கள் எனக்கும் ரசிகர்களா இருக்காங்க. அவங்க வீட்டு விசேஷங்களுக்கு என்னைக் கூப்பிட்டு, 'நீங்க வந்தா, தலைவரே வந்த சந்தோஷம்’னு கூச்சப்படவெச்சுடுறாங்க. இது எனக்குப் பிடிச்சிருக்கு. பாத்தீங்களா... 'ரஜினி’னுதான் ஆரம்பிச்சீங்க... வார்த்தை கொட்டிக்கிட்டே இருக்கு. சௌந்தர்யா மேடம் என்னை 'அப்பாவோட ஜெராக்ஸ்’னு மத்தவங்ககிட்ட அறிமுகப்படுத்திவைக்கிறாங்கனா, அது தலைவர் மேல இருக்கிற வெறிதான் காரணம். ஐ லவ் தலைவர்''

''இவ்ளோ தீவிரமா இருக்கிறதைப் பார்த்து ரஜினி என்ன சொன்னார்?''

'''கோச்சடையான்’ படத்துல ரஜினி சாருக்குப் பதிலா மோஷன் கேப்சர்ல சில காட்சிகள் நடிச்சேன். என்னோட எல்லா மேனரிசங்களையும் அமைதியாப் பார்த்துக்கிட்டே இருப்பார். 'எவ்ளோ வருஷமா இந்த மாதிரி?’னு கேட்டார். பொறந்ததுல இருந்தே இப்படித்தான்னு பதில் சொன்னேன். இதையே 'மாப்பிள்ளை விநாயகர்’ படத்துல 'நான் பொழைப்புக்காக ரஜினி ரசிகன் இல்லைடா... பொறந்ததுல இருந்தே ரஜினி ரசிகன்’னு வசனம் வெச்சிருக்கிறதையும் சொன்னேன். அவருக்கே உரிய ஸ்டைல்ல சிரிச்சார். முக்கியமான விஷயம், 'கோச்சடையான்’ ஷூட்டிங்ல ஒவ்வொரு நாளும் தலைவரைப் பார்க்கிறப்போ, என்னோட ஆட்டோகிராஃப் போட்டு தினமும் ஒரு புத்தகத்தைப் பரிசா கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு 'எனக்கேவா?’னு அதிர்ந்து சிரிச்சார். என்னுடைய புத்தகங்களும் சரி, நானும் சரி... ரஜினி சாரோட 'குட் புக்’ல என்னைக்குமே இருப்போம்.''

''சின்னச் சின்ன கேரக்டர்ல சில படங்கள். தனி ஹீரோ. இதுல எதைத் தேர்வு செய்றதுனு ரொம்பவே தடுமாறிக்கிட்டு இருந்தீங்களோ?''

'''லொள்ளு சபா’ல என்னைப் பார்த்துட்டு, திடீர்னு சினிமாவுல பார்த்த ரசிகர்கள் 'இன்னொரு காமெடி நடிகர்’னு நினைச்சுட்டாங்க போல. ஆனா, நான் சினிமாவுக்கு வரும்போதே ஹீரோ ஆகணும்னுதான் வந்தேன். எத்தனை வருஷம் காத்திருக்கோம்கிறதைவிட, எதுக்காக காத்திருந்தோம்கிறதுதான் ரொம்ப முக்கியம். இடைவெளியை நிரப்பணும்னு கிடைக்கிற கேரக்டர்ல எல்லாம் நடிச்சுக்கிட்டு இருந்தா, நிரந்தரமான இடைவெளி கிடைச்சுடும். அதனாலதான் 'வாய்ப்புகளைத் தேடாதே, உருவாக்கு’னு ரஜினி சார் சொன்ன விஷயத்தைப் ஃபாலோ பண்ணி, நானே தயாரிக்கிற 'மாப்பிள்ளை விநாயகர்’ல ஹீரோவாகிட்டேன்.''

''சந்தானமும் நீங்களும் அண்ணன் - தம்பி மாதிரி. அவருமா உங்களுக்குக் கை கொடுக்கலை?''

''அதெல்லாம் மீடியாக்கள்ல வர்ற வதந்தி. 'மாப்பிள்ளை விநாயகர்’ படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி பண்ணினது சந்தானம்தான். பொதுவா அதிக உரிமையை நான் யார்கிட்டேயும் எடுத்துக்க மாட்டேன். ஆனா, சந்தானம் சாரைப் பொறுத்தவரை, நான் அவங்க வீட்டுப் பையன். நான் கேட்காமலேயே எனக்கு அவர் நிறைய சப்போர்ட் பண்ணியிருக்கார்.''

'' 'முந்தானை முடிச்சு’ படத்தோட 'பார்ட் 2’ தான் இந்தப் படமா?''

''எல்லோருமே இப்படியே எழுதிட்டாங்க. 'முந்தானை முடிச்சு’ படத்துல பாக்யராஜ்-ஊர்வசி தம்பதிக்கு இருந்த சின்னப் பையன் வளர்ந்து பெரியவனாயிட்டா எப்படி இருக்கும்கிற ஐடியாதான் இந்தப் படம். காமெடியும் சென்டிமென்ட்டும் கலந்த கதைக்கு எப்பவுமே ரசிகர்கள் இருக்கிறதனால இந்த ஐடியாவைப் பாராட்டினதோட, பாக்யராஜ் சாரும் ஊர்வசி மேடமும் நடிச்சுக் கொடுத்திருக்காங்க!''

- கே.ஜி.மணிகண்டன், படம்: வீ.நாகமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்