நண்பேன் டா(க்!) | அப்புக்குட்டி, appukutty, எங்க காட்டுல மழை, enga kaattula mazhai

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (21/07/2014)

கடைசி தொடர்பு:13:42 (21/07/2014)

நண்பேன் டா(க்!)

து என்னமோ தெரியவில்லை. அப்புக்குட்டிக்கென்றே இப்படியான கேரக்டர்களைக் கொடுத்துவிடுகிறார்கள். 'அழகர்சாமியின் குதிரை’யில் குதிரை. 'குள்ளநரிக் கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜி அடுத்து இயக்கும் 'எங்க காட்டுல மழை’ படத்தில் அப்புக்குட்டிக்கு நண்பனாக நடிக்கிறது ஒரு நாய். படத்தில் வேறு யாருக்கும் பன்ச் டயலாக் இல்லை. ஆனால் டக்ளஸ் என்ற கதாபாத்திரப் பெயர்கொண்ட அந்த 'நாய்’கனுக்கு ஏகப்பட்ட பன்ச் டயலாக்காம். இப்படி குதிரைக்குட்டி, நாய்க்குட்டியோடு நடிக்கும் அப்புக்குட்டியின் அனுபவங்களைக் கேட்டேன்.

 

'அது பெரிய கொடுப்பினை அண்ணே. 'அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடிச்ச குதிரைக்கு நான் முதன் முதலா ஹலோ சொன்னபோது அது பதில் ஹலோ கனைக்கவே இல்ல. நானே அதுக்கு புல், கொள்ளு எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சேன். தொட்டியில் புண்ணாக்கு போட்டுக் கரைச்சு, அதைக் குடிக்கவைப்பேன். அது குடிக்கும்போது அதோட தலையை தடவிக் கொடுத்து லேசா சொறிஞ்சுவிட்டா, காலை மாத்தி மாத்தி ஆட்டி சந்தோஷப்படும்.

கடைசி நாள் ஷூட்டிங்ல குதிரையைப் பிரியும்போது அழுதுட்டேன். ரொம்ப நாள் அந்த ஏக்கம் இருந்தது. அதனால இப்போ 'எங்க காட்டுல மழை’ படத்துல இந்த டக்ளஸ்கூட நடிக்க ஆரம்பிச்சபோதே இதுகூட நெருங்கிப் பழகக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன். 'உங்ககூட அது ஒழுங்கா நடிக்கணும்னா நீங்க பழகித்தான் ஆகணும்’னு டைரக்டர் சொல்லிட்டார். அண்ணா நகர்ல இருக்கிற டக்ளஸ் வீட்டுக்கு நானே போனேன்.  அதுக்கு ஐஸ்கிரீம், சிக்கன் எல்லாம் வாங்கிக் கொடுத்து காக்கா புடிச்சேன். அது இஷ்டத்துக்கு அது போற போக்குல நாம கூடவே போகணும். அப்புறம்தான் புரிஞ்சது. நாம அதை வாக்கிங் கூட்டிட்டுப் போகல. அதுதான் நம்மளைக் கூட்டிட்டுப் போகுதுனு.

ஷூட்டிங் ஸ்பாட்ல அதைப் பார்த்த உடனே நான் அதுகிட்டே போய்  'ஹாய் ஹலோ’ சொல்லி கை குலுக்கி, இல்ல இல்ல... அதோட கால் குலுக்கிக் கொஞ்சணும். இல்லைனா உத்துப் பார்த்துட்டு அந்தாண்ட போயிடும். அப்புறம் கிட்டே போனாலும் வராது. தாஜா பண்ண ரொம்ப டைம் ஆகும். நல்ல மூடு இருந்தா கோவப்படாம வந்து நம்ம மேல ஏறி கொஞ்சும்.  இன்னும் ஷூட்டிங் பாக்கி இருக்கறதால ஒண்ணும் தெரியல. இதைப் பிரியும்போது மறுபடியும் ஃபீல் ஆயிடுவேன்னே தோணுது. அதுக மாதிரி அன்பு காட்ட மனுஷனுக்கு எங்கண்ணே தெரியுது?' என்கிறார் அப்புக்குட்டி.

ஹலோ புளூ கிராஸ்... உங்களுக்கு சரியான பிராண்ட் அம்பாசடர் அப்புகுட்டிதான்!

- சு.செ.குமரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்