“ஒன்றரைக் கோடி கடன்ஜி!” ‘என்னாது?’ விஜய் சேதுபதி | ஆரஞ்சு மிட்டாய், விஜய் சேதுபதி, vijay sethupathi , orange mittai

வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (23/07/2014)

கடைசி தொடர்பு:13:59 (23/07/2014)

“ஒன்றரைக் கோடி கடன்ஜி!” ‘என்னாது?’ விஜய் சேதுபதி

''நான் ரொம்ப ஆசைப்பட்டு நடிக்க ஆரம்பிச்ச படம் 'சங்குதேவன்’. ஆனா, அதை கமிட் பண்ணியிருக்கக் கூடாது. மூணு மாசமா வீட்ல சும்மா உட்காந்திருந்தேன். இப்போ ஒன்றரைக் கோடி ரூபாய் கடன் கட்டிக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. இதுக்கு மேல அதைப் பத்தி பேச வேண்டாமே...'' -  அதையும் சிரித்துக்கொண்டேதான் பேசுகிறார் விஜய் சேதுபதி.

அடுத்தடுத்து ஐந்து படங்களில் பரபரவென நடிப்பவர், தானே தயாரித்து நடிக்கும் 'ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு வசனமும் எழுதுகிறாராம். 'சங்குதேவன்’ சங்கடம் மறந்து சட்டென 'ஆரஞ்சு மிட்டாய்’ குதூகலத்துக்குத் தாவுகிறார்.

'' 'ஆரஞ்சு மிட்டாய்’னு சொன்னா புளிப்பும் இனிப்பும் கலந்த ஒரு டேஸ்ட் மனசுக்குள்ள பரவுதுல்ல... அதான் படம்! நான், 'சூது கவ்வும்’ ரமேஷ், 'பண்ணையாரும் பத்மினி’யும் கிளீனர் ஆறுமுகம்... மூணு பேரும் நடிக்கிறோம். என் கேரக்டருக்கு 55 வயசு. ஒரு நோயாளி. இனிப்பு, கசப்புனு வாழ்க்கையின் எந்தச் சூழலையும் ஒரே மாதிரி ரசிச்சு வாழ்ற ஒருத்தனோட ரெண்டு நாள் வாழ்க்கைதான் படம்.  வித்தியாசமான ஒரு ட்ரீட் வெச்சிருக்கார் இயக்குநர் பிஜு விஸ்வநாத்!''

''ஒரே வருஷத்துல மூணு ஹிட் கொடுத்தீங்க. ஆனா, அடுத்து நீங்க நடிச்ச ரெண்டு படங்களும் சரியாப் போகலை. அதைப் பத்தி கண்டுக்காம, இப்பவும் ஒரே நேரத்துல அஞ்சு  படத்துல நடிச்சுட்டு இருக்கீங்களே?''

''இடையில் நடந்த சில விஷயங்களை மறந்துட்டு, 'வன்மம்’, 'ஆரஞ்சு மிட்டாய்’, 'மெல்லிசை’, 'புறம்போக்கு’ 'வசந்த குமாரன்’னு வெரைட்டியான படங்கள் பண்ணிட்டு இருக்கேன். எப்பவும் என் வேலை எதுவோ, அதை மட்டும் ரசிச்சு உற்சாகமா செய்வேன். இப்போ நான் நடிச்சிட்டு இருக்கும் அஞ்சு படங்களுமே எனக்கு ரொம்ப முக்கியமான படங்கள். அதனால், ஒவ்வொரு நாளும் எனக்கு முக்கியம். அந்த வேலை பரபரப்பு, சில காயங்களுக்கு மருந்தா இருக்கு.

2012-ம் ஆண்டு வெற்றிகளுக்குப் பிறகு இருந்த சூழல் வேற... இன்னைக்கு இருக்கிற சூழல் வேற. ரெண்டே வருஷத்துல சினிமா எனக்கு நிறைய அனுபவங்களைக் கத்துக்குடுத்திருக்கு. அடுத்தடுத்து படங்கள் ஓடினதால, சினிமா தெரிஞ்ச மாதிரி இருந்துச்சு. ஆனா, இப்போ சினிமாவைக் கத்துக்கிறது அவ்வளவு ஈஸி இல்லைனு புரியுது. ரொம்ப முக்கியமா, சினிமாவுக்குள் இருக்கும் சில மனிதர்களைப் பத்தி இன்னும் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்!''

'' 'ரசனையான நடிகர்’னு பேர் வாங்கியிருக்கீங்க. ஆனா, அது மட்டுமே போதுமா? உங்கள் படங்களுக்கு இன்னும் பெரிய ஓப்பனிங் வேண்டாமா?''

'' 'நான் நடிக்கும் படங்களுக்குப் பெரிய ஓப்பனிங் இல்லை’னு சொல்லப்படுற குற்றச்சாட்டுக்கு நான்தான் காரணமானு எனக்குத் தெரியலை. எவ்வளவு பெரிய படம் எடுத்தாலும், அதுக்கு புரமோஷனும், நல்ல தியேட்டர்களும் முக்கியம். நல்லபடியா நடிச்சுக் குடுக்கிறதோட என் வேலைகள் முடிஞ்சிடுது. அப்புறம், அந்தப் படத்தை ரசிகர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது தயாரிப்பாளர் பொறுப்பு. இப்போ ஒரு ஹீரோவின் நடிப்பு, ஒரு இயக்குநரின் திறமை... இவற்றுக்கு ஈக்குவலா படத்தோட மார்கெட்டிங்கும்தான் வெற்றியைத் தீர்மானிக்குது. சரியான படத்தை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் ரிலீஸ் பண்ணணும். அதைக் கச்சிதமா பிளான் பண்ண வேண்டியது ஒரு தயாரிப்பாளரின் வேலை.

நான் நடிச்ச ஒரு படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆச்சு. அடுத்த புதன்கிழமை அந்தப் படத்தோட தயாரிப்பாளர்கிட்ட, 'ப்ளீஸ் சார்... நம்ம படத்துக்கு இன்னும் கொஞ்சம் போஸ்டர் ஒட்டுங்க; விளம்பரம் பண்ணுங்க’னு கெஞ்சினேன். இந்த விபத்து என் முதல் படத்தில் நடந்திருந்தா பரவாயில்லை. ஆனா, வரிசையா சில படங்கள் ஹிட் கொடுத்த பிறகு நடந்தா, எவ்வளவு வேதனையா இருக்கும்! இது என் தப்பா?''

''நீங்க நடிச்ச 'ரம்மி’, 'பண்ணையாரும் பத்மினியும்’ படங்கள் சரியா போகலைங்கிற வருத்தமா?''

'' 'பண்ணையாரும் பத்மினியும்’ எனக்கு ரொம்பப் பிடிச்சப் படம். ஆனா, அப்படி ஒரு படம் வந்துச்சானே இங்கே பலருக்குத் தெரியலை. அந்தப் படம் ஏன் ரீச் ஆகலைனு இப்போ வரை எனக்கும் புரியலை. ஆனா, அது என்னைக்குமே என் மனசுக்கு நெருக்கமான படம். அதை, நண்பன் அருண்குமார் எனக்குக் கொடுத்த பெருமையான வாய்ப்புனுதான் சொல்வேன். ஆனா, 'ரம்மி’ என் படம் கிடையாது. அந்தப் படம் பார்த்த எல்லாருக்குமே இது தெரியும். தவிர, அஞ்சு வருஷம் முன்னாடி கன்னடத்துல ஒரு படம் நடிச்சேன். அதுல நான் ஹீரோவும் கிடையாது; வில்லனும் கிடையாது. சில காட்சிகளில் வருவேன். ஆனா, 'விஜய் சேதுபதி நடித்த படம்’னு இப்போ அதை தமிழ்ல ரிலீஸ் பண்ற வேலை நடக்குது. அந்தப் படம் கன்னடத்துல ரிலீஸ் ஆச்சானுகூட எனக்குத் தெரியாது. ஒண்ணு... பப்ளிசிட்டி குடுக்கிறது கிடையாது... இல்லைன்னா தப்பான பப்ளிசிட்டி. இது தொடர்ந்து எனக்கு நடந்துட்டே இருந்தா, நான் என்னதான் பண்றது?''

''நண்பர்களுக்காக, சினிமாவுக்காகனு சம்பளம் முதற்கொண்டு நீங்க செய்யும் சில சமரசங்கள்தான், இந்த வருத்தங்களுக்குக் காரணமா?''

''எனக்கு ஏகப்பட்ட பணத்தேவை இருக்குங்க. அவ்ளோ கமிட்மென்ட்ஸ் வெச்சிருக்கேன். ஆனா, அந்தப் பணத்தை நான் தேடிப்பேன். அது விஷயம் இல்லை. நண்பனாகப் பழகி மிக மோசமான துரோகியா மாறின சிலர்தான், இந்த வருத்தங்களைப் பரிசளிச்சிருக்காங்க. நிறைய வலியும் வேதனையும் கலந்த அந்தக் கவலைகள் ஒவ்வொண்ணும் ஓர் அனுபவம். அவை, என்னை இனி சரியான முடிவு எடுக்க வைக்கும்!''

''முழுப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிற அளவுக்கு அசத்துறீங்க. ஆனாலும், ஏன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களிலேயே நடிக்கிறீங்க?''

''கதை என்ன சொல்லுதோ, அதை மட்டும்தான் கேட்பேன். 'வன்மம்’, 'இடம் பொருள் ஏவல்’... படங்களோட கதைகளுக்கு ரெண்டு ஹீரோக்கள்தான் செட் ஆகும். அவ்வளவு ஏன், ஜனநாதன் சார் இயக்கும் 'புறம்போக்கு’ கார்த்திகாவோடு சேர்ந்து நாலு ஹீரோ சப்ஜெக்ட் படம். கதைக்குத்தான் நடிகர்கள் என்பது என் நம்பிக்கை. ஆனா, இனி கொஞ்ச நாளைக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணியி ருக்கேன்!''

''எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய்... இப்படி டபுள் காம்பினேஷன்தான் ஒவ்வொரு சமயத்திலும் டிரெண்டிங்ல இருக்கும். அப்படி உங்களுக்குப் போட்டி யார்?''

''எனக்குத் தெரியாது. ஆனா, நான் யாரோடவும் போட்டிபோட விரும்பலை. என்னை யாராவது போட்டிக்குக் கூப்பிட்டா, நான் போகவும் மாட்டேன். 'உங்க சவாலுக்கு நான் வரலைஜி’னு சொல்லிடுவேன். சினிமா, நடிப்பு... ரெண்டையும் நான் நேசிச்சுச் சுவாசிக்கிறேன். மத்தவங்க படங்களை நான் கைதட்டி ரசிப்பேன். ஏன்னா, நான் முதல்ல ரசிகன்; அப்புறம்தான் நடிகன். இதுல போட்டிபோட என்ன இருக்கு? ஆனா, நீங்க போட்டிபோட்டுத்தான் ஆகணும்னு, விளையாட்டில் என்னைச் சேர்த்தா, ரெண்டு கையையும் தூக்கிட்டு, 'நான் தோத்துப்போயிட்டேன்’னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருவேன்... போதுமாஜி?''


- டி.அருள் எழிலன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்