“இப்போ, சினிமா ரொம்ப ஈஸி!” | burma, பர்மா

வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (26/07/2014)

கடைசி தொடர்பு:15:01 (26/07/2014)

“இப்போ, சினிமா ரொம்ப ஈஸி!”

'கோலிவுட்டின் சமீபத்திய ஹிட் டிரெண்ட்’ என்ன தெரியுமா? படத்தின் டீஸர், டிரெய்லரே 'நச் முத்திரை’ பதிக்க வேண்டும். அப்படி, 'கூகுள் மேப்ல பாத்தா அவன் வர்றது தெரிஞ்சிரும்ணே’ என டீஸரிலேயே எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாகக் கவனம் ஈர்க்கிறது 'பர்மா’!

'டீஸர் பார்த்துட்டு, இது காமெடிப் படம்னு நினைச்சுடாதீங்க. ரொம்ப சீரியஸ் படம் பாஸ்!'' என எடிட்டிங் டேபிளில் அமர்ந்தபடி சிரிக்கிறார் படத்தின் இயக்குநர் தரணிதரன். நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் சினிமா மேக்கிங் படித்தவர்.  

''கதை, பயங்கரமா வித்தியாசமா இருக்கும்னு சொல்லமாட்டேன். ஏன்னா, இப்போ அப்படிச் சொன்னாலே, ரொம்பப் பழசா இருக்கு. கார் சீஸிங்... இதான் படத்தோட கான்செப்ட். அதாவது, கடன்ல வாங்கின கார்களுக்குத் தவணை கட்டலைனா, அந்தக் கார்களை ஓனர்களுக்குத் தெரியாம ஓட்டிட்டு வந்துர்றது. அந்த வேலை பார்த்துட்டு இருந்த என் நண்பர் ஒருத்தர் சில விஷயங்களைச் சொன்னப்போ, அதை வெச்சு ஒரு சினிமாவே எடுக்கலாம்னு தோணுச்சு.

கார் வாங்க பேங்க்ல ஃபைனான்ஸ் வாங்கிட்டு, மூணு மாசம் தவணை கட்டலைனா,  'நீங்க லோன் கட்டாததால உங்க காரைக் கைப்பற்றப்போகிறோம்’னு பேங்க்ல இருந்து வீட்டுக்கு நோட்டீஸ் வரும். அப்புறம்தான் காரைப் பறிமுதல் பண்ணுவாங்க. மீதித் தொகையைக் கட்டிட்டுத்தான் காரை மீட்க முடியும். இதுதான் சட்டம். ஆனா, தனியார் நிதி நிறுவனங்களில் காருக்கு ஃபைனான்ஸ் வாங்கிட்டு கட்டலைனா, இந்தச் சட்டம் எல்லாம் செல்லாது. தவணை கட்டாதவங்க லிஸ்ட் சில ஏஜென்ட்களுக்குப் போகும். கூடவே வண்டிகளின் டூப்ளிகேட் சாவிகளும் போகும். 'இதுமாதிரி இந்த ஏரியால இந்தந்த வண்டிகளைத் தூக்கப்போறோம். அவங்க புகார் கொடுத்தா கண்டுக்காதீங்க’னு லோக்கல் போலீஸுக்குத் தகவல் போகும். அப்புறம் சம்பந்தப்பட்ட கார்களை ரகசியமாப் பின்தொடர்ந்து, சரியான சமயத்துல ஓட்டிட்டு வந்துருவாங்க. முன்னாடி, இப்படி தினமும் நூத்துக்கணக்கான கார்களைத் தூக்கிருவாங்க. இதுல பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கு. அதையெல்லாம் அங்கங்கே வெச்சு ஒரு சினிமாவுக்கான திரைக்கதை ரெடி பண்ணேன். கதை, திரைக்கதையைப் பகுதி பகுதியா விவரிக்கிற மாதிரி, ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷன் ரெடி பண்ணி, தயாரிப்பாளருக்குக் காமிச்சேன். அந்த பிரசன்டேஷன்லயே கதை மேலயும் என் மேலயும் அவருக்கு நம்பிக்கை வந்திருச்சு.

படத்துல ஹீரோ, ஒரு கார் சீஸர் (Seizer).  எனவே, கதைல கார் ஒரு முக்கியமான கேரக்டரா இருக்கும். அதனால ரொம்ப சொகுசான ஒரு பிராண்டட் கார் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. 'நாம ஏன் பி.எம்.டபிள்யூ கம்பெனியில் கேட்டுப் பார்க்கக் கூடாது?’னு யோசிச்சோம். ஒரு நண்பன் மூலமா அந்த நிறுவன உயர் அதிகாரிகளின் மெயில் ஐ.டி-களைப் பிடிச்சோம். எங்க படத்தைப் பத்தி எழுதிட்டு, இந்தக் கதைக்கு பி.எம்.டபிள்யூ கார் எவ்வளவு முக்கியம்னு மெயில்ல ரொம்ப விரிவா விளக்கியிருந்தோம். அதைப் படிச்சுட்டு எங்களை நேர்ல கூப்பிட்டுப் பேசினாங்க; முழுக் கதையையும் கேட்டாங்க. கதையில் காரோட அவசியம் புரிஞ்சுக்கிட்டு, 1.7 கோடி மதிப்புள்ள காரை படப்பிடிப்புக்குக் கொடுத்தாங்க. ஆரம்பிச்சதே தெரியலை. ஜாலி ரைடு மாதிரி முடிஞ்சிருச்சு ஷூட்டிங்!''  

''அறிமுக இயக்குநர், லோ பட்ஜட் படம்... ஆனா, அதுல் குல்கர்னியை எப்படிப் பிடிச்சீங்க?''

''ஆரம்பத்துல இருந்தே, 'இது நம்மால் முடியுமா?’னு நான் யோசிக்கவே இல்லை. 'கேட்டுத்தான் பார்ப்போமே...’னு நினைச்சுத்தான் பட வாய்ப்பில் இருந்து கார் வரை பாசிட்டிவ் எண்ணத்திலேயே அணுகினேன். அதே மாதிரிதான் அதுல் குல்கர்னி சாருக்கு போன் பண்ணி, 'எங்க படத்துல நடிக்கணும்’னு கேட்டேன். 'ஷூட்ல இருக்கேன். ஈவ்னிங் கூப்பிடுங்க’னு சொன்னவர், அவரே ஈவ்னிங் கூப்பிட்டார். விஷயத்தைச் சொல்லிட்டு கதையில் அவரோட போர்ஷனை மட்டும் மெயில் பண்ணேன். உடனே ஓகே சொல்லி, எங்க பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி, தன் சம்பளத்தையும் மாத்தி நடிச்சுக் கொடுத்தார்.

அவர் ரொம்ப புரொஃபஷனல். நான் ஏதாவது கரெக்ஷன் சொன்னா, 'எதுக்காக?’னு கேப்பார். நான் சொல்ற விளக்கம் சரியா இருந்தா, உடனே ஸாரி சொல்லிட்டு நடிச்சுக் கொடுப்பார். மத்தபடி இந்தப் படத்தில் எங்களுக்குக் கஷ்டம்னு எதுவுமே இல்லை.

படத்துக்கு இன்னொரு கார் வேணும்னு அடம்புடிச்சு மாடிஃபை பண்ணி ஒரு கான்டெசா கார் ரெடி பண்ணோம். அது திடீர் திடீர்னு ரிப்பேர் ஆகிடும். பாதி ஷாட்ல படுத்துரும். அது மட்டும்தான் ஒரே சிரமம். மத்தபடி நம்மக்கிட்ட சரக்கு நச்னு இருந்தா, இப்போ சினிமா எடுக்கிறது ரொம்ப ஈஸி பாஸ்!''


- ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்