ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

அம்மா கேள்விகள்!

''அசத்தலான அம்மா கேரக்டர் இருக்கிறதா? கூப்பிடு சரண்யாவை'' என்கிற அளவுக்குப் பெரும்பாலான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துப் பாசமழை பொழிந்துகொண்டிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். இதுதான் சமயமென்று சரண்யாவுக்கு சில 'அம்மா’ கேள்விகளைத் தட்டிவிட்டேன்.

''உங்க அம்மா பற்றி...?'

''அம்மா பேர் சரோஜினிராஜ். பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளா என்றாலும், அடிப்படையில் அவங்க தமிழ்ப் பொண்ணு தான். விதம் விதமா சமைச்சு அசத்துவாங்க. பிரமாதமான டெய்லர். அவ்ளோ சூப்பரா தோட்டம் அமைப்பாங்க. ரொம்ப தைரியமான லேடி.'

''முதன் முதலா அம்மாவா நடிச்ச படம்?'

'' 'அலை’ படத்துல சிம்புவுக்கு அம்மாவா நடிச்சேன். அதுதான் ஆரம்பம்.'

''இனிமே 'அம்மா’ வேடம்தான்னு முடிவானபோது மனநிலை எப்படி இருந்தது?'

''நம்ப மாட்டீங்க. ரொம்ப திருப்தியா இருந்தது. பாதுகாப்பா உணர்ந்தேன். கிளாமரா நடிக்கத் தேவை இல்லை. கிசுகிசு பிரச்னை கிடையாது. ஹீரோக்களுக்கு அம்மாவா நடிக்கிறதால, மரியாதை அதிகமாகுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு.'

''நீங்க அம்மாவா நடிக்க ஆரம்பிச்சப்போ, உங்க கணவர் பொன்வண்ணன் எப்படி ஃபீல் பண்ணினார்?'

''அவருக்கும் ரொம்ப சந்தோஷம். கல்யாணத்துக்குப் பிறகு குழந்தைகள்னு ஆகி அஞ்சாறு வருஷம் நடிக்காமலே இருந்தேன். மறுபடியும் நடிக்க வாய்ப்பு வந்தபோது, 'இது உனக்கு ரெண்டாவது இன்னிங்ஸ்... சொல்லப்போனா, மரியாதையான இன்னிங்ஸ்’னு சொல்லி உற்சாகப்படுத்தினதே அவர்தான்.'

''ஹீரோ மகன்களில் இந்த அம்மாவுக்குப் பிடித்த மகன் யார்?'

''என்னால பதிலே சொல்ல முடியாத கேள்வி இது. எனக்கு ரெண்டு மகள்கள். ஆனா எத்தனையோ மகன்கள். அம்மாவா நடிக்கும்போது ஜஸ்ட் நடிச்சுட்டு மட்டும் வந்துடறது இல்ல. அம்மா என்ற உணர்வு நடிப்பையும் மீறி நிலைச்சுடும். அதனால நான் யார் யாருக்கெல்லாம் அம்மாவா படத்துல இருக்கேனோ, அவங்க எல்லாம் எனக்குப் பிடித்த என் மகன்கள்தான்.'

''பிடிச்ச அம்மா பாட்டு?'

''கொஞ்ச நாள் முன்பு வரைக்கும் மன்னன் படத்துல வந்த 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாட்டுதான். ஆனா இப்போ 'வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வரும் 'அம்மா நீ எங்கே அம்மா’ பாட்டுதான். காரணம் அது என் வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட பாட்டு. எனக்காக அம்மா கவலைப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்க இறந்த பிறகு எனக்கு ஒரு நல்ல மனிதரோட கல்யாணம் நடந்தது. நல்ல பிள்ளைகள் பிறந்தது. சினிமாவில் நல்ல கேரியர் அமைஞ்சது. அடுத்தடுத்து நல்லது எல்லாம் ஏதோ மிராக்கிள் மாதிரி நடந்தது.''

''அம்மா உணவகத்தில் பிடிச்ச ஐட்டம்?'

''அங்க போய் சாப்பிட முடியலையே. பார்சல் கொடுக்க மாட்டாங்களாமே. கூடிய சீக்கிரம் சாப்பிட்டுட்டு சொல்றேன்.'

''உங்க பிள்ளைகள் உங்களை அம்மானு கூப்பிடறாங்களா?  மம்மினு கூப்பிடறாங்களா?'

''அய்யே... போட்டு வாங்குறீங்களா?  எங்கேயும் எப்போவும் அம்மானுதான் கூப்பிடறாங்க... கூப்பிடுவாங்க!'

- சு.செ.குமரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!