ஹீரோவா? ஆளைவிடு சாமி!

காமெடியில் மட்டுமல்ல, குணச்சித்திர வேடத்திலும் தன்னால் அசத்தமுடியும் என்று 'அரிமா நம்பி'யில் நிரூபித்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். தொடர்ந்து 'உத்தமவில்லன்’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை’, விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் 'இந்தியா பாகிஸ்தான்’, எழில் இயக்கத்தில் ஒரு படம் என்று பிஸியாக இருந்தவரிடம் பேசினேன்.

''80-களிலேயே சினிமாவில் நடிச்சிருக்கீங்க. இடையில ஏன் ஆளையே காணோம்?'

''1987-ல 'திருமதி ஒரு வெகுமதி’ படத்துல ஒரு சில சீன்கள்ல தலை காட்டியிருப்பேன். அப்புறம் நடிக்கணும்னு ஆசைதான். எத்தனையோ இயக்குநர்கள்கிட்ட கேட்டுப் பார்த்துட்டேன். யாரும் வாய்ப்பு கொடுக்கலை. 'ஒரு படம் கொடுத்தீங்கனா, ஒரு படத்துல ஃப்ரீயா நடிச்சுத் தர்றேன்’னு கூட அறிவிச்சுப் பார்த்துட்டேன். ஒரு பிரயோஜனமும் இல்லை. அதனால டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா என்னோட கேரியரைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். அப்போதான், சின்னத்திரை வாய்ப்பு வந்தது. 'பட்டாபி’ கேரக்டர் இன்னைக்கு வரைக்கும் எல்லாரோட நினைவிலேயும் இருக்கும். அந்த அளவுக்கு சின்னத்திரையில என்னை நிரூபிச்சேன். சினிமா தாமதத்துக்கு நான் காரணம் கிடையாது.'

''இதுவரை நடித்ததில் ரொம்பப் பிடிச்ச கேரக்டர்?'

'' 'மொழி’ படத்துல ஆரம்பிச்சு, சமீபத்துல ரிலீஸான 'அரிமா நம்பி’ படத்துல நடிச்ச சின்ன கேரக்டர் வரை நான் நடிச்ச எல்லா கேரக்டருமே எனக்குப் பிடிச்ச கேரக்டர்தான். தவிர, ஒரு படத்துல எனக்கான கேரக்டர் எனக்கு நெருக்கமா, ரொம்பப் பிடிச்ச கேரக்டரா இருந்தா மட்டும்தான் நான் நடிக்கவே சம்மதிப்பேன்.'

''டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா இருக்கும்போது நடந்த சுவாரஸ்யங்கள்..?'

'ஜீஸஸ் ஆஃப் நாசரேத் (Jesus of Nazareth) டெலிஃபிலிமுக்கு நானும் நண்பர் ஒருவரும் டப்பிங் பேசிட்டு இருந்த சமயம். 'இவர்கள் ரோமன் மன்னருடைய போர் வீரர்கள்’னு நானும், 'தீர்க்கதரிசியைப் பிடித்துச் செல்ல வந்திருக்கிறார்கள்’னு நண்பரும் வசனங்களைப் பேசிட்டோம். 'கொஞ்சம் சாதாரணமான வார்த்தைகளாப் பேசலாமே?’னு வசனகர்த்தா சொல்ல நண்பரும் நானும் சரினு சொல்லி, அதே வசனத்தை சாதாரணமா பேசலாம்னு 'ரெடி’ சொன்னோம். 'இவங்க ரோமன் மன்னரோட வீரர்கள்’னு நான் சொல்ல, நண்பரோ 'தீர்க்கதரிசியைப் புடிச்சினு போக வந்திருக்காங்க’னு பேசுனாரே பார்க்கணும்? வசனகர்த்தா சிரிச்சு, சிரிச்சு டேபிள்லேயே சாஞ்சுட்டார். 'யோவ்... கலோக்கியலா பேசுய்யானா ஜீஸஸை மந்தைவெளிக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டீங்களே’னு அவரைக் கலாய்ச்சேன். இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு.'

''சரி... காமெடியன்களெல்லாம் ஹீரோ ஆகுற சீஸன் இது. உங்களை எப்போ ஹீரோவா பார்க்கலாம்?'

'தமிழ்நாட்டுல ஏற்கெனவே சுனாமி, இயற்கை இடர்பாடுகள், அதிர்ச்சி தரக்கூடிய சோக நிகழ்வுகள்னு பல சம்பவங்கள் நடந்து, நம்ம மக்கள் எல்லோரும் கதிகலங்கிப் போய் இருக்காங்க. இந்த நேரத்துல 'நீயும் ஹீரோவா நடிச்சு மக்களோட பிஞ்சு மனசை நச்சு நச்சுனு மிதிக்கணுமா?னு கேள்வி கேட்டு 'நீ நல்ல நடிகன்’னு பெயர் வாங்கினாலே போதும் பாஸ்கரா’னு என் மனசாட்சி அழுதுட்டு இருக்கு. இன்னைக்கு இல்லை, என்னைக்குமே ஹீரோவா நடிக்க மாட்டேன். பயப்படாதீங்க!'

- செந்தில்குமார்

படங்கள்: வி.செந்தில்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!