அங்கே கேமரா... இங்கே ஆக்‌ஷன்!

பாலிவுட்டின் பல மெகா பட்ஜெட் படங்களின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளரான நட்ராஜ், இப்போது 'சதுரங்க வேட்டை’ ஹீரோ. 'எப்படி பாஸ் இப்படி?''  என்றேன்.

'சின்ன வயசுல எனக்கு ரெண்டு விஷயத்தில் ஆர்வம் பாஸ். கிரிக்கெட். ஒளிப்பதிவு. கிரிக்கெட்ல நாம எல்லாம் வளரவே முடியாதுனு புரிஞ்சப்போ, கேமராதான் உலகம்னு முடிவு செஞ்சேன். பல பேர்கிட்ட உதவியாளரா இருந்து படம் பண்ண முயற்சி பண்ணினப்போ, மும்பையில் ஒரு டாக்குமென்ட்ரி படத்துக்கு பணியாற்ற வாய்ப்பு வந்தது. அதில் என் ஒளிப்பதிவு மும்பையில் பலரோட கவனத்தையும் கவர்ந்ததால், முதல் பட வாய்ப்பு இந்தியில் வந்தது. பிரபல இந்தி நடிகை பத்மினி கோலாப்பூரி தயாரிப்பில் அனுராக் காஷ்யப் இயக்கிய பாஞ்ச் (ஐந்து) படம் ரிலீஸ் ஆகவே இல்ல. அப்போதான் 'லாஸ்ட் டிரெய்ன் டு மகாகாளி’ குறும்படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணினேன். அது சோனி டி.வி-யின் ஃபைனல் கட் என்ற நிகழ்ச்சியில் வந்து பலரையும் கவர, நிறையப் படங்கள் வர ஆரம்பிச்சது. இதுவரை 15 படத்துக்கும் மேல பண்ணியாச்சு.''

''பெரும்பாலான இந்தி நடிகர் நடிகைகள் உங்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸாமே?''

''எல்லாம் தொழிலால் வந்த நட்புதான். அமிதாப் சார்கிட்ட எல்லாம் 'ஒரு நல்ல கதை வந்திருக்கு. கேளுங்க சார்’னா, 'அனுப்பி வைங்க நட்ராஜ். கேட்கிறேன்’னு சொல்வார். இதுக்கு நட்பு மட்டும் காரணம் இல்லை. அவரோட எளிய குணமும் ஒரு காரணம்.''

''இங்கே குறைஞ்ச சம்பளத்துக்கு நடிக்க செலவழிக்கிற நேரத்தை அங்கே இந்திப் படம் ஒளிப்பதிவு பண்ணினா, இன்னும் நீங்க நல்லா சம்பாதிக்கலாமே?''

''உண்மைதான். 'ஒளிப்பதிவாளரா பேர் வாங்கிட்டோம். அடுத்து சினிமாவில் என்ன பண்ணலாம்?’னு யோசிச்சேன். நடிப்பு சரியா வந்தது. 'நாளை’ என்ற படத்தில் ரிச்சர்டும் நானும் நடிச்சோம். 'மிளகா’ படத்தில் ஆக்ஷன் ஹீரோவா வந்தேன். 'முத்துக்கு முத்தாக’ படத்தில் கேரக்டர் ஹீரோக் கள்ல ஒருத்தரா வந்தேன். இப்போ 'சதுரங்க வேட்டை’ ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த ஹீரோவா பண்ணி இருக்கேன். ஆனா இப்படி நடிக்கிறதால, நான் ஒரு இந்திப் படத்தைக் கூட மிஸ் பண்ணியது இல்லை. நான் என்ன வருஷக்கணக்காவா படத்தில் நடிக்கப் போறேன். அதிகபட்சம் 40 நாள். கரெக்டா பிளான் பண்ணிட்டு, '40 நாள் என் சென்னைக்குப் போய் நடிச்சிட்டு வரேன்’னு சொன்னா, சந்தோஷமா அனுப்பிவைக்கிறாங்க. எனக்காகக் காத்திருக்காங்க. இன்னும் ரெண்டு நாளில் மும்பை கிளம்புறேன். நான் இந்தப் பேட்டியைக்கூட மும்பைலதான் படிப்பேன். அடுத்து சிம்புதேவன் டைரக்ஷன்ல விஜய் சார் நடிக்கிற படத்துக்கு கேமரா பண்றேன். அப்புறம் இந்திப் படம். எனக்கு ஒரு இழப்பும் இல்லை.''

''சரி... அப்படியே இந்தியிலேயும் நடிக்க...''

''நோ... நோ... நோ... அது சரிவராது. இந்தியில் நடிக்கணும்னா, இன்னும் சிவப்பா இருக்கணும். அப்புறம் பஞ்சாபியா இருக்கணும். தவிர நாம பேசுற இந்தி ஒளிப்பதிவு செய்ய ஓகே. நடிக்க உதவாது. அங்கே ஒளிப்பதிவாளர். இங்கே கூடுதலா நடிகர். அவ்வளவுதான்.'  

பார்ட்டி அநியாயத்துக்கு தெளிவு!

- சு.செ.குமரன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!