காமெடி ஒரு முகம்... கல்வியாளர் மறுமுகம்! | jeyachandran, athu ithu ethu, ஜெயச்சந்திரன், அது இது எது

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (05/08/2014)

கடைசி தொடர்பு:17:50 (05/08/2014)

காமெடி ஒரு முகம்... கல்வியாளர் மறுமுகம்!

விஜய் டிவி 'அது இது எது’ நிகழ்ச்சியில் அதகளம் பண்ணும் ஜெயச்சந்திரனின் இன்னொரு முகம் ரொம்பவே ஆச்சர்யம். சமீபத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றி நடந்த 'நீயா நானா’வில் கல்வியாளர் என்கிற அடையாளத்தோடு சிறப்பு விருந்தினராக வந்து வெளுத்துக் கட்டினார்.

''பத்தாவது படிச்சுக்கிட்டு இருந்தபோதே மிமிக்ரி பண்ணுவேன். என் மாமா நாடகக் கலைஞரா இருந்தார். என்னோட கலை ஆர்வத்துக்குக் காரணம் அவர்தான். அதே மாதிரி சமூகத்தின் மேல் என்னோட பார்வையைப் பதியவெச்சது அப்பா. 'சமூகத்துக்காக ஏதாவது பண்றதுல எப்பவும் முன்னோடியா நிற்கணும்’னு சொன்னார். ஸ்கூல் படிச்சப்போ எனக்கு அறிவியல் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர், யாருக்குமே விடை தெரியாத கேள்விகளைப் பொறுக்கி எடுத்து வகுப்புக்குள்ள வருவார். 'கடவுள் எங்கே இருக்கார்? யார்?’னு அவர் கேட்டப்போ யாருமே பதில் சொல்லத் தெரியாம முழிச்சது இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கு. இவங்கதான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் விதையா இருந்திருக்காங்க.''

''என்னென்ன சமூகப் பணிகள்ல பங்கெடுக்கிறீங்க?''

'' 'டான் போஸ்கோ கம்யூனிகேஷன்’கிற அமைப்பில், மாற்று ஊடகங்களுக்கான பயிற்சி கொடுத்துட்டு இருந்தேன். 'சினிமாவில் ஜாதியம்’, 'பெண்களும் மெகாசீரியலும்’னு பல தலைப்புகள்ல கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்துறதுதான் என்னோட பொறுப்பு. அடுத்து 'தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொஸைட்டி’யில் வேலை. ஹெச்.ஐ.வி விழிப்பு உணர்வுக்காக பல விஷயங்களைப் பண்ணியிருக்கோம். 'ஹீரோ புரொஜெக்ட்ஸ்’ அமைப்பு மூலமாவும் இதைச் செஞ்சிருக் கேன். நான் விஜய் டி.வி-யில் 1998-ல் இருந்தே நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருந்தாலும், 'அது இது எது?’ல என்னை ஒரு காமெடியனா பார்த்த 'நீயா நானா?’ ஆண்டனி சாருக்கு என்னோட சமூக ஆர்வம் தெரியும். 'உங்களுக்கு இப்படி ஒரு முகமா?’னு யோசிச்சவர், சரியான நேரம் வந்தப்போ, 'நீயா நானா?’வுல கூப்பிட்டுக் கௌரவப்படுத்தினார்.''

''அடுக்கடுக்கா ஆச்சர்யப்படவைக்கிறீங்க. அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?''

''பி.ஹெச்.டி பண்றேன். மதுரையில் ஓர் அமைப்பு, பள்ளி மாணவர்களுக்காக 'நேர்மை கேன்டீன்’னு ஒண்ணு ஆரம்பிச்சிருந்தாங்க. ஆளே இல்லாத அந்தக் கடையில் உண்டியல் ஒண்ணு இருக்கும். மாணவர்கள் அவங்க எடுத்துக்கிற பொருளுக்கான நேர்மையான தொகையை உண்டியல்ல போட்டுடணும். ஆரம்பத்துல 1,000 ரூபாய் வர வேண்டிய தொகையில், 300 ரூபாய் மட்டுமே வந்தாலும் போகப்போக மாணவர்களோட குற்ற உணர்ச்சி அவங்களை நேர்மையானவங்களா மாத்தி, இப்போ 997 ரூபாய் கட்டாயம் வந்துடுதாம். இது என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. இலங்கையில் நடைபெற்ற போரா இருக்கட்டும், இப்போ பாலஸ்தீனத்தில் நடந்துட்டு இருக்கிற போரா இருக்கட்டும்... சக மனிதனின் அழிவைக் கண்ணால பார்க்கிற இந்த மாணவர்களுக்கெல்லாம் 'போர் நிறுத்தம் வேணும்’கிற மனநிலை வராதது ஏன்? இந்தச் சம்பவங்களுக்கெல்லாம் கொஞ்சமும் வருத்தமோ, கோபமோ வரலையே ஏன்...? முதல் உலகப் போர் இப்படி நடந்தது, இரண்டாம் உலகப் போர் இப்படி நடந்ததுனு பாடப்புத்தகத்தில் படிச்சோம். ஆனா, இப்போ இருக்கிற போர் ஏன் இவங்க பாடத்திட்டத்துல வரலை? இப்படிக் கல்விச் சூழலுக்கும் நமக்கும் ஓர் இடைவெளி இருக்கு. அந்த இடைவெளியை நீக்கணும். மாணவர்களுக்குத் தகுந்த பயிற்சி கொடுத்து, 'பயிற்சிக்குப் பின் மாணவர்களின் மனநிலை’, 'பயிற்சிக்கு முன் மாணவர்களின் மனநிலை’ இந்த இரண்டையும் பார்க்கணும். அப்போதான் 'தவறு எங்கே நடக்குது?’ங்கிறதுக்கான விடை கிடைக்கும்.''

கலக்குங்க ஜெயச்சந்திரன்!

- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close