“நானும் ஜோதிகாவும் சேர்ந்து நடிக்க ஒரு கண்டிஷன்!” அதிரடி அஞ்சான் அவதார் | அஞ்சான், சூர்யா, சமந்தா, லிங்குசாமி, நாகார்ஜூனா, anjaan, surya, lingusami, samantha, nagarjuna

வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (07/08/2014)

கடைசி தொடர்பு:14:06 (07/08/2014)

“நானும் ஜோதிகாவும் சேர்ந்து நடிக்க ஒரு கண்டிஷன்!” அதிரடி அஞ்சான் அவதார்

''நாகார்ஜுனா சார்கிட்ட பேசிட்டு  இருந்தப்ப, 'இது ஒரு சர்க்கிள்... நாங்க எல்லாருமே பாம்பே கதைகள்ல நடிச்சிருக்கோம். அப்படி ஒரு டிரெண்ட் எல்லா நடிகனுக்கும் ஒருகட்டத்தில் தன்னால அமையும்’னு சொன்னார். அப்படி எந்த பிளானும் இல்லாம, எனக்கும் தன்னால அமைஞ்சதுதான் 'அஞ்சான்’. பல வருஷங்களாப் பேசிட்டு இருந்த ஒரு புராஜெக்ட், மும்பையில் ஷூட் போனது யதார்த்தமா நடந்தது. மத்தபடி அவங்க பாம்பே சினிமா பண்ணிட்டாங்களேனு நான் பண்ணலை!'' - '' 'மங்காத்தா’வில் அஜித்துக்கு, 'துப்பாக்கி’யில் விஜய்க்கு ஹிட் கொடுத்த 'மும்பை’ ராசிதான், 'அஞ்சான்’ படப்பிடிப்பை அங்கேயே முழுக்க நடத்தியதா?'' என்ற கேள்விக்கு சூர்யாவின் பதில் இது!

''இப்படி ஹிட், கலெக்ஷன், ரசிகர்கள்னு எங்கேயும் எப்போதும் அஜித், விஜய்யுடன் நீங்க ஒப்பிடப்படுவதை எப்படி எடுத்துக்கிறீங்க?''

''தமிழ் சினிமா ஹீரோக்கள் பத்தின விகடன் கட்டுரையில் கலெக்ஷன்ல அவங்களுக்குச் சமமா நான் இருக்கேன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க. ஆனா, அவங்க ரெண்டு பேருமே என்னைவிட வயசுல, அனுபவத்துல சீனியர்ஸ். இப்போ அந்த இடத்துல அவங்க எஸ்டாபிளிஷ் ஆனதுக்குப் பின்னால அவங்களோட 25 வருஷ கடின உழைப்பு இருக்கு. அதுக்கான பலன்தான், அவ்வளவு பெரிய ஃபேன் ஃபாலோயிங். அது ஒரே ராத்திரியில் நடந்துடக்கூடிய விஷயம் இல்லை. இன்னொண்ணு, இப்படியான சில விஷயங்கள்னு எனக்கு எந்த இலக்கும் இல்லை. ஒவ்வொரு படத்துலயும் புதுசா ஏதாச்சும் கத்துக்கணும்னு பார்த்துப் பார்த்து புராஜெக்ட் பிடிக்கிறேன். அது இத்தனை வருஷம் கழிச்சு இந்த இடத்துல நிறுத்தும்னு எனக்கு எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்காமத்தான் டிராவல் பண்றேன். அதனால் அந்த ஒப்பீடுகள் என்னைக் கொஞ்சமும் சலனப்படுத்தாது!''

இப்போது சூர்யா நடிக்கும் 'அஞ்சான்’ அவரது கேரியரையும், தமிழ் சினிமா வசூல் ரெக்கார்டையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவிவரும் சூழலில் பேசினேன்...

'' லிங்குசாமி சார் ஸ்கிரிப்ட்ல இது வேற வெரைட்டி. ஒரு கேரக்டருக்கே எல்லா முக்கியத்துவமும் கொடுத்துடாமல், பரபரப்பான ஸ்கிரீன்ப்ளேதான் படத்தை லீட் பண்ணும். இதுக்கு முன்னாடி நான் நடிச்ச படங்கள் ஹீரோவோட பாயின்ட் ஆஃப் வியூல இருக்கும். ஆனா, 'அஞ்சான்’ல திரைக்கதைதான் சூப்பர் ஹீரோ. லிங்கு சார் எப்பவும் ரசிகர்களை டைட்டா வைச்சுக்க மாட்டார். ரிலாக்ஸா வெச்சிருப்பார். திடீர்னு ஒரு ஸ்பார்க் கிளம்பி, பரபரனு ஸ்பீடு எடுக்கும் படம். இந்தப் படத்துல அந்த வேகம் ரொம்ப ஜாஸ்தி!''

''லுக், மேனரிசம்ல பளிச் வித்தியாசம் காட்டியிருக்கீங்க. 'இந்தப் படத்துக்காக இப்படித்தான் தயாரானேன்’னு ஏதாவது சுவாரஸ்யம் சொல்ல முடியுமா?''

''ஒரு புத்தகத்தை முழுசா படிச்சேன். மும்பை என் மாமியார் ஊர். நான் அடிக்கடி போற ஊர்தான். ஆனா, இந்தப் படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி லிங்கு சார், Dongri To Dubai: Six Decades of The Mumbai Mafia’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். மும்பை நிழல் உலக தாதாக்களின் வளர்ச்சி, வாழ்க்கையைப் பத்தின புத்தகம். அதைப் படிச்சதும் மும்பையை வேற கலர்ல பார்க்கத் தோணுச்சு. 1960-களில் இருந்து மும்பை யார் கன்ட்ரோல்ல இருந்தது, பஞ்சாபி, பாகிஸ்தானி, தமிழன்... இவங்க கையில இருந்து தாவூத் இப்ராஹிம் கட்டுப்பாட்டுக்கு எப்படி வந்தது, கான்ஸ்டபிள் மகன் தாவூத் இப்ராஹிம் எப்படி ஒரு டான் ஆனார்னு ஒவ்வொரு எபிஸோடுமே ஒரு ஆக்ஷன் ப்ளாக். அந்தப் புத்தகத்தின் ஃபீல் படத்தோட ஸ்கிரிப்ட்ல நிறைய இடத்தில் இருக்கும். படத்தில் என் பிரசன்ஸ் கிட்டத்தட்ட ஒரு டான் மாதிரியே இருக்கணும்னு, ஏறக்குறைய ஏழு மாசமா ரஃப் அண்ட் டஃப்பான ஒரு மூட்லயே இருந்தேன்!''

''உங்க படங்களை விநியோகம் பண்ண ஏற்கெனவே ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இருக்கும்போது, '2டி’னு ஏன் தனியா ஒரு தயாரிப்பு நிறுவனம்?''

''ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் முதலில் கார்த்தியின் நண்பர்; தூரத்து உறவினர். இப்போ ஒரு சம்பந்தம் மூலம் ரொம்ப நெருங்கிட்டார். இந்த 15 வருஷங்களா சினிமாவுல நாங்க எல்லாருமே வளர்ந்திருக்கோம். என் ரசனையிலான சினிமாக்களை அந்த பேனர்ல ஃபோர்ஸ் பண்ண விரும்பலை. 'நாமளே சொந்த ரிஸ்க்ல பண்ணலாமே’னு உருவாக்கினதுதான் இந்தச் சின்ன தயாரிப்பு நிறுவனம். இதோட லாப, நஷ்டங்கள் எல்லாத்துக்கும் நானேதான் பொறுப்பு. அந்தச் சுதந்திரத்துக்காக ஆரம்பிச்சதுதான் 2டி. பசங்க பேர்... தியா, தேவ். அதுதான் 2டி''

''ஜோதிகா திரும்ப நடிக்கப்போறதா ஒரு தகவல். உண்மையா?''

''அவங்களுக்கான ஸ்கிரிப்ட் வந்தா நிச்சயம் நடிப்பாங்க. ஆனா, இப்ப வரை எந்த புராஜெக்ட்டையும் அவங்க கமிட் பண்ணலை. நிறைய பேர் ஸ்கிரிப்ட் சொல்லிட்டு இருக்காங்க. 'எனக்கு இந்த ஸ்கிரிப்ட் பிடிச்சிருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?’னு ஒண்ணு ரெண்டு கதையை என்கிட்டயும் சொல்லியிருக்காங்க. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூடிய ஸ்கிரிப்ட் கிடைச்சா, சேர்ந்து நடிப்போம். ஆனா, ஒரு கண்டிஷன். 100 நாள் கால்ஷீட்லாம் கேக்கக் கூடாது. ஏன்னா ரெண்டு, மூணு மணி நேரம்கூட பிள்ளைங்களை விட்டுட்டு அவங்களால இருக்க முடியாது!''

''சமீபத்துல 'எனக்கு காமெடி செட் ஆகலை’னு கார்த்தி சொன்னார். ஆரம்ப காலத்தில் நீங்கள் சந்தித்த சில சங்கடங்களை இப்போ அவர் சந்திக்கிறார். உங்க அனுபவத்துல இருந்து அவருக்கு என்ன சொல்வீங்க?''

''இது இங்கே எல்லாருக்கும் நடந்திருக்கு. எம்.ஜி.ஆர் போன்ற சூப்பர் சீனியர்கள் படங்கள்லயே சில படங்களைத்தானே நாம கொண்டாடிட்டு இருக்கோம். அவங்களுக்கே அப்படினா, இன்றைய டிரெண்டுக்கு இந்த ஏற்ற-இறக்கம் எல்லாம் சர்வசாதாரணம். இதுல கார்த்திக்கு ஸ்பெஷல் அட்வைஸ் சொல்ல எதுவுமே இல்லை. ஏன்னா, அவருக்கே சினிமாவில் நிறைய விஷயங்கள் தெரியும். அவரோட நலம் விரும்பிகள்ல ஒருத்தனா, ஒரு அண்ணனா என் சப்போர்ட் அவருக்கு எப்பவும் உண்டு!''

''சிங்கம்-3... வாய்ப்பு இருக்கா?''

''முதல் ரெண்டு பாகங்களைவிட பெரிய ஜம்ப் இருந்தால் பண்ணலாம். ஹரி சார் சில ஐடியாஸ் சொல்லியிருக்கார். அதில் யூனிஃபார்ம் இல்லாத போலீஸ் கதையும் ஒண்ணு. அதையே மூணாவது பாகமா எடுக்கலாமானு டிஸ்கஷன் போயிட்டு இருக்கு. பார்ப்போம்!''

''பொண்ணு தியா, பையன் தேவ்... என்ன பண்றாங்க?''

'' 'நல்லா படிக்கிறாங்க. ரொம்ப நல்ல பழக்கவழக்கங்களோட இருக்காங்க’னு எல்லா இடங்கள்லயும் பேர் வாங்குறாங்க. பெருமையா இருக்கு. வீட்ல செம சேட்டை, குறும்பு பண்ணுவாங்க. ஆனா வெளியே போனா, 'அட... சமத்துப் பிள்ளைகளா இருக்காங்களே!’னு வெரிகுட் வாங்கிடுறாங்க. இதுக்கான முழு கிரெடிட்டும் ஜோவுக்குத்தான். குழந்தைகள் கண்ணாடி மாதிரி. நாம என்ன பண்றோமோ, அதைத்தான் பிரதிபலிப்பாங்கனு பார்த்துப் பார்த்து வளர்க்கிறாங்க. பொண்ணுக்கு ஜிம்னாஸ்டிக் பிடிச்சிருக்கு. ஸ்விம்மிங், பாட்டனி, குழந்தைகளுக்கான தியேட்டர் பயிற்சினு நிறைய கிளாஸ் போயிட்டு இருக்காங்க. பையன், எங்க அப்பா மாதிரி. அவனுக்கும் ஓவியம் வரையப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு 100 படங்கள்கூட வரையுறார். அதுக்குள்ள வீடு முழுக்க அவங்களோட கிரியேட்டிவிட்டி நிறைஞ்சிருக்கு. ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். ஒரு அப்பாவுக்கு இவ்ளோ சந்தோஷம் கிடைக்குமாங்கிற ஆச்சர்யத்தோடவே அதை அனுபவிச்சிட்டு இருக்கேன்!''

- ம.கா. செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்