Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“தன்னம்பிக்கை கொடுத்திருக்கு சிக்ஸ்பேக்!”

சிக்ஸ் பேக் கிளப்’பின் புதிய உறுப்பினர்... அதர்வா!  செமத்தியான லுக்கில் அசத்துகிறார். 'பரதேசி’யின் அங்கீகாரத்துக்குப் பிறகு அடுத்த அடியை மிகக் கவனமாகப் பதிக்கும் முயற்சிகளில் இருக்கிறார்.  

''எப்பவும் ஃபிட்டா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். 'ஈட்டி’ படத்துல அத்லெட் கதாபாத்திரம். 110 மீட்டர் ஹர்டில்ஸ் ஓடுறவன்னு சொன்னா நம்பணும்ல. ஏதாச்சும் பண்ணணும், அதோட நம்ம ஃபிட்னெஸையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகணும்னு யோசிச்சப்ப, 'சிக்ஸ்பேக்’ நல்லா இருக்கும்னு தோணுச்சு. வொர்க்அவுட் பண்ண ஆரம்பிச்சேன். கண்டிப்பான டயட்ல இருந்து, கஷ்டப்பட்டு கட்ஸ் கொண்டுவருவேன். ஆனா, ஒருகட்டத்துல நாக்கை அடக்க முடியாம, ரெண்டு நாள் நல்லா சாப்பிட்டுருவேன். மூணாவது நாள் கட்ஸ் எல்லாம் கரைஞ் சிடும். 'போச்சே... போச்சே!’னு திரும்ப 'அ’னால இருந்து ஆரம்பிப்பேன். ஒரு வருஷம் இப்படித்தான் போச்சு. ஆனா, இப்போ இந்த லைஃப்ஸ்டைல் பிடிச்சிருச்சு. இப்படியே இருந்துடலாம்னு பார்க்கிறேன். எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியுமோ, அவ்ளோ நாள் இருப்பேன்!''

''சிக்ஸ்பேக் வடிவத்தை தக்கவெச்சுக்கிறது கஷ்டமாச்சே?''

''சும்மாவா பின்னே! சிக்ஸ்பேக் பயிற்சிகளுக்கு ஜிம் பயிற்சி 30 சத விகிதம்தான். 70 சதவிகிதம் டயட் மூலமாத்தான் வரும். ஜிம்ல பயிற்சியாளர் ஜெயக்குமார் என்னை முறுக்கிப் பிழிஞ்சிடுவார். சோர்வும் பசியுமா வந்து, கொழுப்பு இல்லாத சாப்பாட்டை பாதி வயித்துக்குச் சாப்பிடணும். அப்படி எல்லாம் கஷ்டப்பட்டாலும் சிக்ஸ்பேக் வர மூணு மாசம்கூட ஆகும். ஆனா, அதைக் கலைக்க ரெண்டே நாள் போதும். பிரியாணியின் அடிமையான நான், ஒரு வருஷமா அதைக் கண்ணால்கூடப் பார்க்கலை. ஆவியில் வேகவைச்ச காய்கறிகள்தான் அதிகம் சாப்பிடணும். உப்பு, சர்க்கரை கூடாது. பழங்கள், எண்ணெய் இல்லாத மீன், சிக்கன்... இவைதான் சாப்பாடு. அரிசி சாப்பிட்டே ஒரு வருஷம் ஆகுது!''

''ஒரு படத்துக்காக இவ்ளோ கஷ்டப்படணுமா?''

'''ஈட்டி’யில் தடகள வீரன் கேரக்டர். தடை தாண்டுற ரிகர்சலுக்குப் போனேன். முதல் நாள் ஓடிப்போய் டக்குனு நின்னுட்டேன். சின்ன உயரமா இருந்தாலும் தாவக் கொஞ்சம்  பயமா இருந்தது. வலது கால் இப்படி இருக்கணும், இடது கால் பின்னால் நேரா இருக்கணும்னு ஏகப்பட்ட பயிற்சிகள். முதல் சில நாட்கள் நடந்து தாண்டினேன். மூணு வாரங்களுக்குப் பிறகு ஜாக்கிங் பண்ணித் தாண்டினேன். ஒன்றரை மாசம் கழிச்சுத்தான் ஓடித் தாண்டினேன். அதுக்கு சிக்ஸ்பேக் உடம்புதான் வளைஞ்சுகொடுத்தது. ஏகப்பட்ட நம்பிக்கை கொடுத்திருக்கு இந்த சிக்ஸ்பேக்!''

''ஒரே சமயத்தில் நான்கு படங்கள் பண்றீங்க. படங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீங்க?''

''கேரக்டர் என்பது எவ்வளவு முக்கியம்னு 'பரதேசி’யில் பாலா சார் மூலம்தான் கத்துக்கிட்டேன். அப்படியான இன்ட்ரஸ்டிங் கேரக்டர். அடுத்து 'இப்படி ஒரு படத்தில் நடிக்கிறேன்’னு பெருமையா சொல்ற அளவுக்கு படத்தோட 'ஒன்லைன்’ அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கணும். பாண்டிச்சேரியில் ரெண்டு பைக்கர்ஸ் குரூப்புக்கு இடையில் நடக்கிற கதை 'இரும்புக்குதிரை’. படத்தில் எனக்கு டுகாட்டி பைக்; வில்லன்களுக்கு பி.எம்.டபிள்யூ பைக்ஸ். எல்லாமே 180-200 கி.மீட்டர் வேகத்துல போற சூப்பர் பைக்ஸ். அந்தப் பைக்குகளை இங்கே ஓட்ட முடியாதுனு இத்தாலியில் ஷூட் பண்ணோம். 'ஈட்டி’ தடகள வீரன் கதை. தஞ்சாவூர்ல இருந்து சென்னை வந்து ஸ்போர்ட்ஸ் மீட்ல கலந்துக்கிற ஒருத்தன் வாழ்க்கையில நடக்கிற திருப்பம்தான் கதை. 'கணிதன்’ல பத்திரிகை நிருபர். ஒரு நிருபர் தன் ஒட்டுமொத்த அடையாளத்தையும் மிஸ் பண்றான். அதை மீட்க என்ன செய்றான்கிறதுதான் படம். அப்புறம் பாலா சார் தயாரிப்புல சற்குணம் சார் இயக்கத்துல ஒரு படம்!  

ஒரு நாள், 'எங்கடா இருக்க? ஆபீஸ் வா’னு பாலா சார் கூப்பிட்டார். போனேன். 'காலையில சற்குணம் ஸ்கிரிப்ட் கேட்டேன். சூப்பரா இருக்கு. நீ பண்ணியே ஆகணும்’னார். 'நிச்சயமாப் பண்ணலாம் சார்’னேன். சற்குணம் சார் கதை சொன்னார். பிரமாதமான ஸ்கிரிப்ட். செம ஜாலியான படம். இந்த மாசமே ஷூட்டிங் ஆரம்பம்!''

''ப்ரியா ஆனந்த்கூட லவ், லிவிங்டுகெதர்னு ஏகப்பட்ட  கிசுகிசுக்கள்... என்ன விஷயம்?''

''ஓ... அதை 'லிவிங்டுகெதர்’னே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களா?  எனக்குனு ஒரு வீடு இருக்கு. அந்த வீட்டை விட்டுட்டு, என்னால எங்கேயும் போய் யார்கூடயும் இருக்க முடியாது. நடிக்கும்போது எல்லார்கூடவும் நட்பா இருப்பேன். மத்தபடி டேட்டிங் மேல நம்பிக்கையே இல்லை. அதுக்காக நான் சினிமாவுக்கும் வரலை. ஜெயிக்கணும் சார்!''

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன், சுந்தர்ராமு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்