Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“சினிமாவே ஒரு சீட்டிங்தானே!”

''இந்தியாவில் சீக்கிரமே பணம் சம்பாதிக்க மூணு வழி இருக்கு. அதுல சினிமா, விளையாட்டு ரெண்டும் பிரபலம்... அப்புறம் அரசியல். சினிமா, விளையாட்டில் நீங்க மக்களை ஏமாத்த முடியாது. அதே மாதிரி அரசியலில் பணம் சம்பாதிக்க ரொம்ப நாள் காத்திருக்கணும். பொறுமை இல்லாதவங்களுக்கு இருக்கும் நாலாவது வழி... சீட்டிங். அடுத்தவன் உழைப்பை வைச்சு தன்னைக் காப்பாத்திக்கிற எல்லாருமே இங்கே ஒரு சதுரங்க ராஜாதான். அப்படி ஒரு ராஜாதான், எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கார்!'' - தெளிவாகப் பேசுகிறார் 'சதுரங்க வேட்டை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத். முதல் நாள் முதல் ஷோ மாஸ் ஹீரோ படம் பார்க்க வந்த கல்லூரி மாணவன்போலத் தோற்றம். ஆனால், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அத்தனை அரசியல்.

''வேலூர் பக்கம் சின்னப்பள்ளிக்குப்பம் கிராமம்தான் என் சொந்த ஊர். சென்னையில் டிப்ளமோ படிச்சிட்டு எலெக்ட்ரிக்கல்ஸ் வேலை பார்த்துட்டு இருந்தேன். வேலை போரடிச்சதால், சினிமா ஆசை வந்தது. பார்த்திபன் சார்கிட்ட 'பச்சக் குதிர’ படத்துல வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் கையில் பணம் இல்லாமத் திரும்பவும் எலெக்ட்ரிக்கல் வேலைக்கே போயிட்டேன். கோயம்பேடு மார்க்கெட்ல இருக்கிற பம்ப்பிங் ஸ்டேஷன்ல தங்கி இருந்தேன். அது ஒரு பெரிய அனுபவம். விதவிதமான மனிதர்கள், பயணிகள், தொழிலாளர்கள்னு நிறைய மனிதர்களைச் சந்திச்சேன். நான் யார்கிட்டயும் ஏமாந்தது இல்லை. ஆனா, பலவிதங்களில் ஏமாந்த ஏகப்பட்ட மனிதர்களைச் சந்திச்சேன்.

மண்ணுள்ளிப் பாம்பு அஞ்சு லட்சம்னு விற்க வந்த ஒரு குரூப்கூட, மூணு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை. அவங்க பேச்சும், மார்க்கெட்டிங் தந்திரங்களும் அரசியல் கட்சித் தலைவரோட அனுபவத்துக்குச் சமம். 'பணத்துக்கு ஏன் இப்படி அலைபாயுறாங்க?’னு யோசிச்சப்ப, இங்கே மனுஷனா இருக்கிறதைவிட, பணக்காரனா இருக்கத்தான் ஆசைப்படுறாங்கனு புரிஞ்சுக்கிட்டேன். உலகமயமாக்கல் வந்த பின்னாடி நல்ல கல்விக்கும், தரமான மருத்துவத்துக்கும் பணம்தான் ஆதாரம்னு ஆகிப்போச்சு. அரசாங்கப் பள்ளியில படிக்கிறதை கேவலம்னும், அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறதை ஆபத்துனும் மக்களை நினைக்கவைச்சதில் பணத்துக்குப் பெரும் பங்கு உண்டு.

பணம், மக்கள் மத்தியில் ஒரு நெருக்கடியை உருவாக்கிருச்சு. அன்பா வாழ்றதைவிட இங்கே பணக்காரனா வாழத்தான் எல்லாரும் ஆசைப்படுறாங்க. எல்லாருக்குமே நாளைக்குக் காலையில பணக்காரன் ஆகிடணும்னு ஆசை. அந்த ஆசையைத்தான் ஃபோர்ஜரி பண்றவங்க சுலபமா அறுவடை பண்ணிடுறாங்க. மாசத்துக்கு ஒண்ணு, ஏரியாவுக்கு ஒண்ணுனு நடந்த மோசடி வேலைகளை பேப்பரில் படிச்சு, அது தொடர்பான ஆட்களைச் சந்திச்சேன். உண்மையைச் சொல்லணும்னா ஃபோர்ஜரி பண்றவங்க, அவ்வளவு புத்திசாலிங்க. நிலப்பரப்பு, மக்களோட மனநிலை, பிராந்தியத்தின் பொருளாதாரம் எல்லாத்தையும் கணிச்சுதான் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுறாங்க. கொங்குமண்டலம் செழிப்பானது, கால்நடை வளர்ப்புகளுக்கு உதவக்கூடியதுனு ஈமு கோழி, சென்னை மாதிரி விவசாய இடமே இல்லாத ஊர்களில் தங்க நகைச் சீட்டு, தங்க நாணயங்கள், ராமநாதபுரம் மாதிரியான வறண்ட ஏரியாவுக்கு மண்ணுள்ளிப் பாம்பு, எல்லா ஏரியாவுக்கும் பொதுவா ரைஸ் புல்லிங்னு... எல்லாமே பக்கா பிளான்!

உண்மையில், ரைஸ் புல்லிங்கில் திருடின ஒரிஜினல் கோபுரக் கலசத்தில் காந்த சக்தி ஏத்துவாங்க. ஆனா, இப்போ கோபுரங்களைத் திருடுறது ரிஸ்க் ஆகிட்டதால, டூப்ளிக்கேட் கோபுரக் கலசங்களை உருவாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுக்குத் தேவை எங்கேயாவது கோபுரக் கலசம் காணாமப்போச்சுங்கிற அறிவிப்பு மட்டும்தான். 'ஐம்பொன்லதான் உருவாக்க முடியும்னு கிடையாது. கோபுரக் கலசத்தை ஜஸ்ட் ஒரு நாள்ல உருவாக்கிடலாம்’கிற உண்மையை மக்களுக்குச் சொல்லணும்னுதான் படத்தில் ஒரிஜினலை உடைச்சிட்டு டூப்ளிக்கேட் உருவாக்கிற மாதிரி காட்டியிருந்தேன்.

சினிமாவில் ஹீரோ பில்டப் ஏத்துறதுகூட ஏமாத்துவேலைதான். உங்களை இருட்டு அறையில் உட்காரவைக்கிறோம். உங்களைவிட உயரமான, வெளிச்சமான ஒரு இடத்தில் நாயகனைக் காட்டுறோம். நீங்க உங்களை அறியாமலேயே ஹீரோ மேல மதிப்பு வைக்க ஆரம்பிச்சிடுவீங்க. இது சின்ன சைக்காலஜி.

நான் ஒரு மதகுரு பேச்சைக் கேட்கப் போயிருந்தப்ப, அவரைச் சுத்தி 10,000 பேர் உட்கார்ந்திருந்தாங்க. அவர் ரொம்பச் சாதாரணமான உடையோட, சின்ன மேடையில் உட்கார்ந்திருந்தார். எல்லா இடத்திலும் வெளிச்சம். சினிமாவில் ஒரு ஹாலுக்குள் இருக்கும் 500 ஆட்களை ஏமாத்துறதே பெரிய கஷ்டம். ஆனா, சினிமா தியேட்டருக்கான எந்தப் பின்னணியோ, இசையோ இல்லாம, எப்படி இத்தனை பேரையும் நம்பவைக்கப்போறார்னு ஆர்வத்தோட காத்திருந்தேன். தெளிவான, அழகான உச்சரிப்பு, நம்பவைக்கிற தோரணை, கம்பீரமான உடல்மொழினு அவர் பேசும்போது, மொத்தக் கூட்டமும் மந்திரிச்சுவிட்ட மாதிரி ஆடுது. அவர் பேச்சு அப்படி ஒரு பக்கா ஸ்கிரிப்ட்.

காலங்காலமா நாம வைச்சிருக்கிற நம்பிக்கையை அவங்க பயன்படுத்திக்கிறாங்கனு தெரிஞ்சுக் கிட்டேன். அந்தப் பாதிப்புலதான் நட்டி சார் கலசத்தை விற்கும்போது, உடம்பு சிலிர்க்கப் பேசுற மாதிரி சீன் வைச்சேன். அதுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ். படத்தின் ஒவ்வொரு சம்பவமும் வசனமும் உண்மைக்குப் பக்கத்துல இருக்கணும்னு நிறையக் கஷ்டப்பட்டோம். குறைஞ்ச பட்ஜெட், ரெண்டே அசிஸ்டென்ட் இருந்தாலும் திரைக்கதை மேல நம்பிக்கை இருந்தது. 'நல்ல விஷயத்தை எப்படிக் கொடுத்தாலும் மக்கள் ஏத்துப்பாங்கய்யா’னு மனோபாலா சார் கொடுத்த தைரியம்தான் எல்லாத் துக்கும் ஆதாரம். படம் பார்த்துட்டு பாலா, பாலாஜி சக்திவேல்னு மரியாதைக்குரிய பல இயக்குநர்கள் பாராட்டினது ரொம்ப சந்தோஷம்!

வழக்கமா கான் ஜானர் படங்களில் ஏமாத்துறவன் ஜெயிக்கிற மாதிரிதான் கிளைமாக்ஸ் இருக்கும். ஆனா, எனக்கு அதில் உடன்பாடு இல்லை. கலைனா சுவாரஸ்யமா மட்டும் இருக்கக் கூடாது. நல்லது சொல்லி அதை மனசுல பதியவைக்கணும். அதான் ஹீரோ ஏமாத்து வேலையில் தோத்து, பாசத்தில் ஜெயிக்கிற மாதிரி மாத்தினேன். இப்போ லிங்குசாமி சார் 'என் பேனர்லயே அடுத்த படம் பண்ணுங்க’னு சொல்லியிருக்கார். டீக்கடை அரட்டையில்கூடப் பேசத் தயங்குற, ஒரு சினிமாவா தொடத் தயங்குற சப்ஜெக்ட் அது. கிட்டத்தட்ட கண்ணிவெடியில் கால் வைக்கிற மாதிரியான சப்ஜெக்ட். ஆனா, அது கண்ணிவெடி இல்லைங்கிற புரிதலை உண்டாக்கும் முயற்சியாகவும் இருக்கும். ஏன்னா, பொழுதுபோக்குறது மட்டும் இல்லை. நல்லது சொல்றதும், சமூகத்தை நல்லபடியா வைச்சுக்கிறதும் ஒரு கலைஞனின் கடமைதான்!''

- பாரதி தம்பி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்