ஜிப்ரீஸ் வாத்தியார்! | somasundaram, aaranya gandam, jigarthanda, ஜிகர்தண்டா, ஆரண்ய காண்டம், சோமசுந்தரம்

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (20/08/2014)

கடைசி தொடர்பு:12:21 (20/08/2014)

ஜிப்ரீஸ் வாத்தியார்!

''ஒஸாகி மஸிதோ பிரிஜிஸி மொரியா நெமிதோ லிரியா?''

''அனிதோ மெரிகி லாமோ புஸ்க்கியா!''

-''எப்படி சார் இருக்கீங்க?''னு ஜிப்ரீஸ் லாங்குவேஜில் கேட்டதற்கு இப்படிப் பதில் சொல்லி சிரிப்பு மூட்டினார் 'ஆரண்ய காண்டம்’ ஜமீன்தாரும் 'ஜிகர்தண்டா’ நடிப்பு வாத்தியாருமான குரு சோமசுந்தரம்.

''யார் சார் நீங்க? நடிப்புல இப்படித் தெறிக்க விடுறீங்க?''

''என்னோட சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர். மதுரையில் தமிழ்நாடு பாலிடெக்னிக்ல மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளமோ முடிச்சுட்டு சும்மா இந்தக் கூத்துப்பட்டறை கூத்துப்பட்டறைனு சொல்றாங்களே... அதுல என்ன சொல்லிக்கொடுக்கிறாங்க பார்ப்போமேனு விளையாட்டாத் தெரிஞ்சுக்க வந்தவன் நான். அது ஒரு புலி வால்னு அப்புறமாதான் தெரிஞ்சுச்சு. அதைப் பிடிச்சுக்கிட்டுத் திரிஞ்சதுல, அப்படியே 9 வருஷம் ஓடிப்போச்சு. முதல் படம் 'ஆரண்ய காண்டம்’ நல்ல பேர் வாங்கித் தந்துச்சு. பக்காவா என்னோட கேரக்டரை  அழகா எழுதி இருந்தார் தியாகராஜன் குமாரராஜா. அந்த ஜமீன்தார் கேரக்டருக்கு உருவம் கொடுக்க முடிஞ்ச துக்கு என்னோட கூத்துப்பட்டறை பயிற்சி ரொம்ப பயனுள்ளதா அமைஞ்சது.''

'' 'ஆரண்ய காண்டம்’ல அப்படி ஒரு கேரக்டர் நடிச்சுட்டு அதுக்கு அப்புறம் பெரிய இடைவெளி. ஏன்?''

''அந்தப் படத்துல நான் வயசான கேரக்டர்ல நடிச்சதால நிறைய பேரு என்னை வயசான ஆளுன்னே நினைச்சுட்டாங்க. அதனால  வாய்ப்புகள் அமையலை. மணிரத்னத்தின் 'கடல்’ படத்துல நடிச்சுட்டு இருந்தப்போ, 'அஞ்சு சுந்தரிகள்’ மலையாளப் படத்துல நடிக்கிறதுக்கு அந்தப் படத்தின் இயக்குநர் சைஜு காலித் என்னைத் தேடி சென்னை வந்தார். மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனோட சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட அந்தப் படத்துல என் ரோல் கொஞ்சம் கொடூரமானது. சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஒரு கேரக்டர். அது பரவலான வரவேற்பைப் பெற்றது.''

'' 'ஜிகர்தண்டா’வில நீங்க பண்ணினது உங்க நிஜ கேரக்டரா?''

''அது கார்த்திக் சுப்புராஜோட சாமர்த்தியம். பொதுவா ஜிப்ரீஸ் மொழினு ஒண்ணும் கிடையாது. நமக்குத் தெரியாத எல்லா மொழியும் ஜிப்ரீஸ்தான். நடிப்புப் பயிற்சியில் கூச்சம் போக்க இப்படி எதையாவது பேசுவோம். தன்னம்பிக்கைக்கு இது ரொம்ப உதவும். ஜெய்குமார் என்ற கூத்துப்பட்டறை சீனியரை மனசுல வெச்சுதான் அந்த கேரக்டரை உருவாக்கி இருந்தார். காமெடியா அதைக் கொண்டுவந்தது கார்த்திக் சுப்புராஜ்தான். என் படங்கள்ல நான் டைரக்டர்களோட நடிகனா தெரியிறதைத்தான் விரும்புவேன். அதனாலதான் வாய்ப்புகளை நானா உருவாக்கிக்கிறது இல்லை. மலையாளமே தெரியாமதான் 'அஞ்சு சுந்தரிகள்’ படம் பண்ணினேன். நாடகம் என்னோட அடையாளம். அது கொடுத்த இந்த மதிப்பை தக்கவெச்சுக்கணும். அதுக்காக சின்னதா மெனக்கெடுவேன். இப்போ வில்லனா ஒரு படத்துல நடிக்கிறேன். இன்னொரு படத்தில காமெடி பண்றேன். கவுண்டமணிகூட '49 ஓ’ பண்ணி இருக்கேன். இப்படித்தான் சோமு நடிப்பான்னு யாரும் சொல்லிடக் கூடாதுனு பார்த்துப் பண்றேன்.''

''மிலோ கி யா!'' அட... நன்றின்னு சொன்னேன்பா!

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்