அப்படித்தான் பாடுவேன்! ஆந்திரா பிடிவாத மனிதர்

வென்னு மல்லேஷ் - ஆந்திராவின் லேட்டஸ்ட் ஆந்த்ராக்ஸ் கிருமி. வைரலில் சர்ர்ர்ர்ரென டேக்-ஆஃப் ஆகின்றன இவரது பாட்டு வீடியோக்கள். கூச்சப்படாமல் கொலைக்குத்தாய் ஆங்கிலத்தில் பாப் பாடுகிறார் (https://www.youtube.com/watch?v=kJa2kwoZ2a4). 

''ஏய் நீ பாட்டா பாடப்போறே?'' என பாடலின் துவக்கத்தில் கூடவே இணைந்து பாடும் பெண் கேட்க, ''இது என் பாட்டு இல்லை... என் வாழ்க்கை!'' என்று சொல்லியபடி ஆரம்பிக்கிறார். 'இட்ஸ் மை லைஃப்’ என்ற பாடலை!

சுமாருக்கும் கொஞ்சம் மேலே இருக்கிறது பாடலுக்கான இசை. ஆனால் குரல்... சூப்பரோ சூப்பர். 'புகழ்பெற்ற பாப் சிங்கர் டி பெய்ன் வாய்ஸ் போலவே இருக்கு. ஆனா, ஆள்தான் பலசரக்குக் கடையில் பனியனோடு நிற்பவரைப்போல இருக்கிறார்’ என கிண்டல் அடிக்கிறார்கள் சிலர். ஆனால் எக்ஸ்பிரஷன்களில் பின்னி எடுக்கிறார் வென்னு. பாடல் முழுவதும் 'நான் என் வாழ்க்கையை வாழ்றேன், உனக்கேன் காண்டு? மூடிக்கிட்டு போடா’ என்ற தோரணையிலே இருக்கிறது. தெற்றுப்பல் தெரிய வாயை ஆங்கில 'ஓ’ வடிவத்திற்கு மாற்றி இவர் பாடும் ஸ்டைலைப் பார்த்து இணையத்தில் இந்தப் பாடலை இளசுகள் அதிகம் ஷேர் செய்கிறார்கள். வென்னுவுக்கு அதுதான் அடையாளமே!

''ஆந்திராவின் குக்கிராமத்தில் பிறந்த நான் இன்று இவ்வளவு பிரபலம் ஆனதற்கு என் நண்பர்கள்தான் காரணம். என்னைக் கேலி செய்பவர்களையும் நண்பர்கள் என்றுதான் அழைக்கிறேன். எல்லோரும் கேலி, கிண்டல் பண்ணப் பண்ணத்தான் நான் பாப்புலர் ஆகிறேன். என்னோட பாட்டுகள் சைக்காலஜிக்கல், பிலாஸபிகல், நான்ஃபிக்ஷனல் வகையைச் சேர்ந்தவை. முதலில் சாதாரணமாகத்தான் பாடி அதை வெளியிட்டேன். நிறைய பேர்  கேலி, கிண்டல் செய்தார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லும்விதமாக இந்தப் பாடலை நானே எழுதி, நானே இசையமைத்து, நானே பாடி யூடியூபில் வெளியிட்டேன். என் இதயத்தின் ஆழத்தில் இருந்து இதைப் பாடியதால்தான் இத்தனை பெரிய ஹிட் ஆனது. 'ஷிட்’ சிங்கர், 'டார்ச்சர் பாட்டு’ என்றெல்லாம் இதை ஷேர் செய்கிறார்கள். ‘Friend of mine says I am a waste fellow... He don’t know the taste of this fellow.!’ - இப்படிப் பதில் சொல்லி இருக்கிறேன். பிடித்தவர்களை 'வெல்விஷ்’ பண்ணுவார்கள். ஆனால், என்னை மட்டும் ஹெல்விஷ் பண்ணுகிறார்கள். என்னோட ஹெல்விஷர்களுக்கு இந்த ஆல்பம் சமர்ப்பணம். அவர்களுக்குத் தெரியாது யூடியூப் மூலம் எனக்கு மாதம்தோறும் வருமானம் வருகிறது என்று'' என்று சொல்லும் வென்னு மல்லேஷின் வீடியோவை இதுவரை 4 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.  அதில் சரிபாதி பேர் கழுவி ஊத்தி இருக்கிறார்கள். 29 வயது வென்னு அடுத்த அதிரடியாய்த் தானே கதை எழுதி, இசையமைத்து, நடிக்கும் படத்தைத் தயாரித்து இயக்கப்போகிறாராம். 'எ குட் பேட் பாய்’! (அப்படித்தான் எல்லாப் பேட்டிகளிலும் சொல்கிறார்)

படத்தை யூடியூப்ல ரிலீஸ் செய்வாரோ?

- ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!