“தனுஷ் காதலிக்கிறாப்ல!” | அனேகன், தனுஷ், அமைரா, கே.வி.ஆனந்த் , anegan, dhanush, amaira, k.v.anand

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (27/08/2014)

கடைசி தொடர்பு:10:50 (27/08/2014)

“தனுஷ் காதலிக்கிறாப்ல!”

''இன்னைக்கு தியேட் டருக்கு வர்ற பசங்க... வீடியோ கேம் ஆளுங்க. வீடியோ கேமின் முதல் நிமிஷத்தில் இருந்தே பரபரப்பு ஆரம்பிக்கிற மாதிரி, சினிமாவும் முதல் ஃப்ரேம்ல இருந்தே விறுவிறுனு இருக்கணும். அந்த ரசிகர்களைத் திருப்திப்படுத்துறதுதான் நிஜமான சவால்!'' - சினிமா டிரெண்டை ஷார்ப்பாகச் சொல்கிறார் கே.வி.ஆனந்த். புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர், இயக்குநர்... பயணத்தில் ரகளை, ரசனை அனுபவங்கள் பேசினோம்.

''எனக்கு சுருக்கமா, சுள்ளுனு இருக்கணும் டைட்டில். அதான் 'அனேகன்’. சயின்ஸ் கனவு, கடத்தல் கிரைம், அரசியல் த்ரில்லர் எல்லாம் பண்ணிட்டேன். காதல்... நான் டச் பண்ணாத ஏரியா. ஏன்னா, நான் காதலிச்சது இல்லை. காதலிச்சவங்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டதோட சரி. அதான் இந்தத் தடவை காதலோடு களம் இறங்கியாச்சு. படத்துல தனுஷ் காதலிக்கிறார்... காதலிக்கிறார்... காதலிக்கிறார். தனுஷ§க்கும் அமைராவுக்குமான காதல், அதுக்கு நடுவுல ஆக்ரோஷ ஆக்ஷன்... இதான் 'அனேகன்’!''

'' 'வேலையில்லா பட்டதாரி’க்குப் பிறகு தனுஷ் கிரேஸ் உச்சத்துக்குப் போயிருக்கே... இப்போ அவரைக் காதலிக்க மட்டும் வைக்கலாமா?''

''நான் இந்தப் படத்துக்கு தனுஷை கமிட் பண்ணும்போது, 'தமிழ்ல இதுதான் எனக்கு பெரிய பட்ஜெட். இப்போ என்னை நம்பி இவ்ளோ பெரிய பட்ஜெட்ல படம் பண்ணலாம்னு வந்தது ஆச்சர்யம்’னு சொன்னார். ஹிட் ஸ்க்ரிப்ட்டை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கும் ஆளு நம்ம தனுஷ். பின்னிட்டார் பிரதர். இந்தப் படத்துல தனுஷ§க்கு செம சவால் கொடுத்திருக்காங்க ஹீரோயின் அமைரா தஸ்தூர். இன்னொரு சர்ப்ரைஸ்... கார்த்திக். அவரோட 'மௌனராகம்’ கிரேஸை அடிச்சுக்க, இன்னமும் ஆள் வரலை. அவர்கிட்ட கதை சொல்லப் போனப்போ, 'நீங்க இந்தப் படத்துல நடிக்க மாட்டீங்கனு ஆயிரம் ரூபாய் பெட் கட்டிட்டு வந்திருக்கேன் சார்’னு முதல்லயே சொல்லிட்டேன். எதுவுமே சொல்லாம சிரிச்சார். கதை கேட்டார். 'நாளைக்கு சொல்றேனே’னு வழியனுப்பினார். கடைசியில் 1,000 ரூபா எனக்குத்தான் நஷ்டம்!''

'' 'சதுரங்க வேட்டை’, 'ஜிகர்தண்டா’னு ஜூனியர்கள் வெரைட்டி காட்டுறாங்க. ஆனா, ஹீரோக்கள் பேரைத் தவிர சீனியர்களின் சினிமாக்கள் பாட்டு, ஃபைட்னு ஒரு ஃபார்முலாவிலேயே வருதே?''

''மூணு கோடி பட்ஜெட்ல எடுக்கிற படத்தை மல்ட்டிபிளெக்ஸ் ரசிகர்களோ அல்லது சி சென்டர் ரசிகர்களோ மட்டும் பார்த்தா போதும்... படம், போட்ட காசுக்கு மேலயே எடுக்கும். ஆனா, 15 கோடிக்கு மேல பட்ஜெட் போச்சுனா, அது எல்லாருக்குமான படமா இருந்தே ஆகணும். 'எந்திரன்’ல கொசு வேட்டைக் காட்சிகளை விமர்சகர்கள் கிண்டலடிச்சாங்க. ஆனா, ஊர் பக்கம் அந்த சீனுக்கு கிளாப்ஸ் அள்ளுச்சு. அந்த சீனுக்குக் கைதட்டினவங்க படத்தின் டெக்னிக்கல் காட்சிகளுக்கு அமைதியா இருந்தாங்க. ஆனா, அந்த ரெண்டு தரப்பும் படத்துக்கு வந்தாங்களா இல்லையா! அதுதான் ஒரு இயக்குநரின் சாமர்த்தியம். இன்னொரு விஷயம், பாடல்களே இல்லாத படம், செம வசூல் பண்ண சாதனை இங்கே இல்லவே இல்லை. ஒரு ரோல்மாடல் இல்லாதப்போ, நாங்க எதை நம்பி ரிஸ்க் எடுக்கிறது? அதே சமயம் ஜூனியர்ஸ்லாம் பிரிச்சு மேயுறாங்க. 'ஜிகர்தண்டா’ ரசிச்சுப் பார்த்தேன். 'பண்ணையாரும் பத்மினி’யும் படத்துல கார் நின்ன இடத்துல விழுந்துகிடக்கும் பூக்களைக் கூட்டுவாங்க பாருங்க... அதுதான் ஒரிஜினல் சினிமா விஷூவல்!''

''புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர், இயக்குநர்... எந்த ரோல்ல நிம்மதி, சந்தோஷம்?''

''ஸ்டில் போட்டோகிராபர்தான்! நான், என் கேமரா, எனக்கான ஆப்ஜெக்ட்... இந்த மூணு மட்டும்தான். நான் நினைச்சதைப் பெரிய தொந்தரவு இல்லாம எடுத்திருவேன். அதுவே சினிமா ஒளிப்பதிவாளருக்குக் குறிப்பிட்ட நேரத்துல இயக்குநரின் விஷூவலைக் கொண்டுவரவேண்டிய சவால். ஹீரோ, ஹீரோயினோட பேசக்கூட நேரம் இருக்காது. ஆனாலும் பெஸ்ட் சீன்ஸ் கொண்டுவரணும். இயக்குநர்... கேக்கவே வேணாம். ஏகப்பட்ட மனிதர்கள், சங்கடமான சூழ்நிலைகள்... எல்லாரையும் அனுசரிச்சு அவங்ககிட்ட இருந்து பெட்டர் ரிசல்ட் எடுக்கணும். சமயங்கள்ல பைத்தியமே பிடிக்கும்.

எழுத்தாளர்கள் சுபாவுடன் நான் கதை விவாதம் பண்றதே சண்டை போடுறது கணக்கா இருக்கும். மூணு பேருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். அந்த மூணு ரசனையையும் திருப்திப்படுத்துற சீன் பிடிக்க, கிட்டத்தட்ட அடிச்சுக்குவோம். 'ஏன் சார் சினிமா பண்றது இவ்ளோ சவாலா இருக்கு?’னு கேட்பாங்க. 'சினிமா ஒரு கற்பனைதான். ஆனா, ஸ்கிரீன்ல இருக்கிற அந்த கேரக்டரின் உணர்வுகளை ரசிகனுக்குக் கடத்தணும். அந்த மேஜிக் நிகழ்ந்துட்டா, இயக்குநர் ஒரு கிங். அப்படி நடக்கலைனா, ஜோக்கர் ஆகிடுவார்’னு சொன்னேன். இங்கே எல்லாரும் ஜோக்கர் ஆகாம இருக்கத்தான் ஓடிட்டே இருக்கோம். வாங்க... ராஜா ஆகலாம்!''

- கி.கார்த்திகேயன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்