படம் எப்போ சார் வரும்? | படம் எப்போ சார் வரும்? வாலு, வேட்டை மன்னன், மத கஜ ராஜா, ரெண்டாவது படம், அப்பாவின் மீசை, களவாடிய பொழுதுகள், இசை, காதல் 2 கல்யாணம், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை

வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (27/08/2014)

கடைசி தொடர்பு:17:49 (27/08/2014)

படம் எப்போ சார் வரும்?

ப்போதைய டிரெண்டுக்கு, சூப்பர் ஹிட் படம்கூட தியேட்டரில் இரண்டு வாரம் தாண்டினாலே பெரிய விஷயம். ஆனால், அந்த இரண்டு வார இறுதி வசூலுக்காக கோலிவுட்டில் பல படங்கள், வருடக்கணக்கில் தயாரிப்பிலோ, பெட்டியிலோ இருக்கின்றன. சின்ன பட்ஜெட், பெரிய  பட்ஜெட் என்கிற தகுதியோ, நட்சத்திரங்கள், அறிமுகங்கள் என்ற பேதமோ இல்லாமல், 'ஆன் தி வே’ கட்டத்திலேயே இருக்கின்றன, எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் பல படங்கள். ஏன் இந்தத் தாமதம்?

'ரெண்டாவது படம்’

இயக்குநராக அறிமுகமான 'தமிழ்ப் படம்’ மூலம் ஆச்சர்ய கவனம் ஈர்த்தவர் சி.எஸ்.அமுதன். தமிழ் சினிமாவையே கலாய் கலாய் எனக் கலாய்த்த அமுதனின் இரண்டாவது படமான 'ரெண்டாவது படம்’ டிரெய்லரும் கலகலவென வசீகரித்தது. ஆனால், அதன் பிறகு மூச்சுபேச்சு இல்லை. என்ன ஆச்சு அமுதன்?

'' 'ரெண்டாவது படம்’ சென்சார்ல U/A வாங்கியிருச்சு. பொதுவா மூணு பேச்சுலர்ஸ் ஒண்ணா தங்கியிருந்தா எப்படி இருப்பாங்க? கெட்டக் கெட்ட வார்த்தைகள் பேசுவாங்க, பெண்களிடம் கடலை போடுவாங்கனு சில காட்சிகள் இருக்கும்ல. அதைக் கொஞ்சம் கட் பண்ணச் சொல்லிட்டாங்க. தயாரிப்பாளர் தரப்போ, 'வரி விலக்கு கிடைக்கணும். என்ன பண்ணுவீங்களோ தெரியாது. 'U’ சான்றிதழ் வாங்குற மாதிரி பாருங்க’னு சொல்லிட்டாங்க. சரினு மனசை சமாதானப்படுத்திட்டு, சின்னச்சின்னதா சில காட்சிகளைச் சரிசெஞ்சோம். அதான் தாமதத்துக்குக் காரணம். இப்போ 'U’ சான்றிதழ் வாங்கிட்டோம். ஆனா, படத்தோட காரத்தைக் குறைச்சுக்கலை. இனி படத்தை வெளியிடுறதுக்கான வேலைகள்ல முழுமூச்சா இறங்கப்போறோம். அநேகமா செப்டம்பர்ல ரிலீஸ் இருக்கும்!'' என்கிறார் சி.எஸ்.அமுதன்.

 

'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’

தியேட்டர்கள் கிடைக்காததாலும், பெரிய பட்ஜெட், மெகா ஸ்டார் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாலும் சின்ன பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுகின்றன. அந்த சிக்கல்களைக் களைய 'சினிமா டு ஹோம்’ (C2H)எனும் நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார் சேரன். சின்ன பட்ஜெட் படம் என்றால் தியேட்டரில் வெளியாகும் அதே சமயம் படத்தின் டி.வி.டி-யும் விற்பனைக்குக் கிடைக்கும். பெரிய பட்ஜெட் படங்களுக்குப் படம் வெளியான சில நாட்கள் கழித்து டி.வி.டி வெளியாகும் என்பது ஏற்பாடு. படத்தின் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் பாதிப்படையாமல், படத்தை ரசிகர்களிடம் கொண்டுசேர்ப்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை என்கிறார்கள் C2H நிறுவனத்தினர். தியேட்டர் கிடைக்காத படங்களுக்கும், சமயங்களில் வேறு படம் வெளியானதால், ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டுத் தூக்கப்படும் படங்களுக்கும் C2H திட்டம் வரப்பிரசாதம் என்கிறார்கள். இதற்கான பணிகளில் முனைப்பாக இருக்கும் சேரனிடம் அவர் இயக்கிய ' 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ எப்போ ரிலீஸ்?’ என்று கேட்டால் சிரிக்கிறார். ''ஓ... அதுபத்தி அக்கறையா விசாரிக்கக்கூட ஆள் இருக்கா தமிழ்நாட்டுல? சந்தோஷம்! சீக்கிரமே படம் ரிலீஸ் பண்றோம். இந்த மாசக் கடைசிலகூட ரிலீஸ் ஆகலாம். படம் வந்திடும். சீக்கிரம் வந்திடும். அதுக்குத்தான் ஓடிட்டு இருக்கோம்!'' என்கிறார்.

'காதல் 2 கல்யாணம்’, 'படித்துறை’

சமீபத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த 'அமரகாவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பரபரப்பாக நடந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னரே சத்யா, திவ்யா ('குத்து’ ரம்யா) நடித்த 'காதல் 2 கல்யாணம்’ படம் முடிந்துவிட்டது. இத்தனை வருடங்களில் படம் வெளியீடு தொடர்பாக சின்னப் பரபரப்புகூட இல்லை. அதே சமயம் ஆர்யா தயாரிப்பில்  'படித்துறை’ என்ற படத்தை இயக்கினார் சுகா. அந்தப் படம் பற்றியும் எந்தச் செய்தியும் இல்லை. 'இரண்டு படங்களின் நிலை என்ன?’ என்று ஆர்யாவிடம் கேட்டால், ''இப்போ என் தம்பி சத்யா நடிச்ச 'அமரகாவியம்’ பட ரிலீஸ் முயற்சிகளில் இருக்கேன். அதுக்கு அப்புறம் 'படித்துறை’ கண்டிப்பா ரிலீஸ் ஆகும். படத்துல சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸ் இருக்கு. அதை சரிசெஞ்சுட்டு ரிலீஸ் செய்வேன். சத்யா ஹீரோவா அறிமுகமான 'காதல் 2 கல்யாணம்’ படத்தை 'மிர்ச்சி மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரிச்சது. படம் முடிஞ்சிருச்சு. ஆனா, என்ன காரணமோ தெரியலை... அந்தத் தயாரிப்பு நிறுவனத்தை மூடிட்டாங்க. அந்தப் படம் வருமானு எனக்குத் தெரியாது!'' என்கிறார் சிம்பிளாக.

'களவாடிய பொழுதுகள்’

பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் தங்கர்பச்சான் இயக்கிய 'களவாடிய பொழுதுகள்’ படம் பல வருடங்களுக்கு முன்னரே ரெடி. ஆனால், இன்று வரை அதைப் பற்றி எந்தப் பேச்சும் இல்லை. 'கத்தி’ படத்தைத் தயாரிக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல்தான் 'களவாடிய பொழுதுகள்’ படத்தையும் தயாரித்தது. 'பட வெளியீட்டில் ஏன் தாமதம்?’ என்று கேட்டால், பொங்கிப் பொருமுகிறார் தங்கர்பச்சான். ''படம் இன்னும் விக்காமக்கிடக்கு. வேற என்னத்தைச் சொல்ல? நல்ல படத்தை எடுத்துட்டு அது வெளியே வர்றதுக்காகக் காத்துட்டு இருக்கிறது பெரிய வலி. இப்பவும் ரெண்டு கோடி, மூணு கோடியில ஒரு படம் பண்ணலாம். ஆனா, நான் வீம்பா உக்காந்துட்டு இருக்கேன். காரணம், நல்ல சினிமா எடுக்கணும்கிற ஒரே நோக்கம்தான். எல்லாருக்கும் பிடிச்ச படத்தை எடுத்தா, அதை வெளியே கொண்டுவர முடியலை. இப்போ சேரனோட C2H திட்டத்தை எல்லாரும் பெருசா நம்பிட்டு இருக்காங்க. பார்க்கலாம். 'கத்தி’ படத்துக்கு அப்புறம் 'களவாடிய பொழுதுகள்’ வெளியாகும்னு நம்புறேன். ஒரு மாசத்துல நல்ல செய்தி வரும்!'' என்கிறார் தங்கர். தயாரிப்பு தரப்பில் விசாரித்தால் 'கத்தி’ பட வியாபாரத்தோடு 'களவாடிய பொழுதுகள்’ படத்தையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.

'இசை’

''ஹீரோயினா நடிக்க 124 பேரைப் பார்த்து அதுல சாருவைத் தேர்ந்தெடுத்தேன். அதுக்கே நாலு மாசம் ஆச்சு. வில்லன் கேரக்டர்ல வெயிட்டா ஒருத்தரை நடிக்க வைக்கணும்னு தேடுனேன்... தேடுனேன்... தேடிட்டே இருந்தேன். 'வில்லனா நடிக்க மாட்டேன்’னு இருந்த சத்யராஜ் சார், கதை கேட்டதும் வில்லனா நடிக்க சம்மதிச்சார். அதுக்கு ஒரு நாலு மாசம். கொடைக்கானலில் செட் போடும்போது  அங்கே கிளைமேட் சரியில்லை. டிசம்பர் மாதம் ஷூட் போனா, காய்ஞ்ச புல்தான் இருந்தது. பசுமையான கிளைமேட்டுக்காக ஜுலை மாசம் வரை காத்திருந்தேன். அதுல ஒரு ரெண்டு வருஷம். படத்தோட எடிட்டிங் வேலைகளுக்காக 10 மாசம் ஒதுக்கிட்டேன். இந்த அளவுக்கு நேர்த்தியான அவுட்புட் சமீபத்துல எந்தப் படத்துலயும் பார்த்திருக்க மாட்டீங்க. இதுதான் படத்தோட தாமதத்துக்குக் காரணம். ஆனா, இந்தப் பயணத்துல ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் ரொம்ப சிலாகிச்சு அனுபவிக்கிறேன். 'எதைக் காதலிக்கிறாயோ அது வலிக்காது’னு சொல்வாங்க. படம் கிட்டத்தட்ட ரெடி. சீக்கிரமே இசையின் 'இசை’ வெளியீடு,  புரமோஷன்னு பரபரக்கணும்!'' என்கிறார் 'இசை’ படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா.

'வாலு’ & 'வேட்டை மன்னன்’

2012-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்லப்பட்ட படம் 'வாலு’. ''கொஞ்சம் லேட் ஆகிருச்சுங்க. இப்போ படத்தோட இரண்டாம் பாதிக்கான டப்பிங் போய்ட்டு இருக்கு. செப்டம்பர் மாசம் படம் ரிலீஸ்!'' என்கிறார் படத்தின் இயக்குநர் விஜய் சந்தர். '' 'ஏன் லேட்?’னு கேட்டா நிச்சயம் சிம்பு காரணம் இல்லை. இவ்ளோ காலம் தேவைப்படுற அளவுக்கு வேலை இருக்கு படத்துல. சிம்புவை வைச்சு சீக்கிரமே 'வாலு-2’ எடுப்பேன்!'' என்கிறார் ஆர்வமாக.  

சிம்பு, ஹன்சிகா, தீக்‌ஷா சேத்... நடித்திருக்கும் 'வேட்டை மன்னன்’ படம் பாதியில் கைவிடப்பட்டது என்று ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால், அதை அழுத்தமாக மறுக்கிறார் படத்தின் இயக்குநர் நெல்சன். ''70 சதவிகிதப் படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு. வெளிநாட்டுல 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினா, மொத்தப் படமும் முடிஞ்சிடும். 'வாலு’ ரிலீஸுக்குப் பிறகு 'வேட்டை மன்னன்’ பட வேலைகள் ஆரம்பிக்கும்!'' என்கிறார்.

'அப்பாவின் மீசை’

நடிகை ரோகிணி இயக்குநர் புரமோஷன் பெற்றிருக்கும் படம் 'அப்பாவின் மீசை’. ''சில காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிப்போய்ட்டே இருந்துச்சு. இப்போ எல்லாம் சரியாயிருச்சு. சேரன் சாரோட C2H திட்டத்துல 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் ரிலீஸுக்கு அப்புறம்  'அப்பாவின் மீசை’ ரிலீஸ் இருக்கலாம்!''  என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார் ரோகிணி.

'மதகஜராஜா’

விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி... என ஸ்டார் காஸ்ட், 'கமர்ஷியல் இயக்குநர்’ சுந்தர்.சி இயக்கம்... என 'ஹிட் சிக்னல்கள்’ இருந்தாலும் 'மதகஜராஜா’, பல மாதங்களாக வெளியீட்டுக்கு வெயிட்டிங். 'ஏன்?’ -விஷாலிடம் கேட்டால், ''ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தான் படத்தைத் தயாரிச்சாங்க. 'மன்மதன் அம்பு’ படத்தை தெலுங்கில் விநியோகம் செய்தது, 'மயக்கம் என்ன’ படத் தயாரிப்புனு பல நஷ்டங்கள் சேர்ந்து அவங்க கிட்டத்தட்ட 20 கோடி கடனை அடைக்க வேண்டியிருக்கு. அதைத் தீர்த்தால்தான் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க. பேச்சுவார்த்தை நடத்திட்டே இருக்கோம். சீக்கிரமே ரிலீஸ் ஆகும்!'' என்கிறார்.

ஒவ்வொரு சினிமாவுக்கும் ஒவ்வொரு சிக்கல். ஆனால், சினிமா ரசிகனின் சிம்பிள் மெசேஜ்... 'வி ஆர் வெயிட்டிங்’!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்