கொலைகள் பலவிதம்! | நீயெல்லாம் நல்லா வருவடா, விமல், 'புன்னகை பூ' கீதா, 'சமுத்திரக்கனி, நாகேந்திரன், அமிர்தா

வெளியிடப்பட்ட நேரம்: 16:13 (02/09/2014)

கடைசி தொடர்பு:16:13 (02/09/2014)

கொலைகள் பலவிதம்!

'''நீயா? நீ டைரக்ட் பண்ணப்போறியா? மச்சான் டேய்... காமெடி பண்ணாதடா!’ - நான் படம் இயக்கப்போறதா சொன்னதும், நண்பர்களின் முதல் கமென்ட் இதுதான். ஒரு நண்பனா என்னை எல்லாருக்கும் பிடிக்கும். என் பலம், பலவீனம் ரெண்டுமே அந்த அன்புதான். அதுதான் என் நண்பர்களை தயங்கவைக்குதுன்னு நினைக்கிறேன்'' - இயல்பாகப் பேசுகிறார் நாகேந்திரன். சீமான், சுசிகணேசன் இருவரின் உதவி இயக்குநர். நடிகராக அறிமுகமானவர், 'நீயெல்லாம் நல்லா வருவடா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

''உங்கள் நண்பர்களே உங்களை இயக்குநரா நம்பாததற்கு என்ன காரணம்?''

''வேறென்ன... நட்புதான். என் நண்பன் ஒருவன் ஒரு படத்துல ஹீரோவா கமிட் ஆகியிருந்தான். அவனை அந்தப் பட ஆபீஸ்ல டிராப் பண்றதுக்காக பைக்ல அழைச்சிட்டுப் போனேன். அப்ப என்னைப் பார்த்த அந்தப் பட உதவி இயக்குநர் ஒருத்தர், 'சார், ஹீரோவைவிட அவரைக் கூட்டிட்டு வந்த பையன் இந்தக் கதைக்குப் பொருத்தமா இருப்பான்’னு டைரக்டர்கிட்ட சொல்லியிருக்கார். அப்படி, அன்னைக்கே என்னை ஹீரோவாப் பார்த்த அந்த உதவி இயக்குநர்தான் சமுத்திரக்கனி. அப்படி அறிமுகமாகி, பிறகு கனியோட நெருக்க மானேன். அடுத்து, சீமான் அண்ணன். அவரோட இருந்ததால் சினிமாவில் எல்லாரும் அவரோட தம்பியாதான் என்னைப் பார்த்தாங்க. அப்படியே பாலா அண்ணன், அமீர் அண்ணன், சசினு பலரும் அறிமுகம். தவிர, எல்லாரும் மதுரை என்பதால் ஒட்டிக்கிட்டோம். இப்படி நண்பனா, தம்பியாப் பார்த்தவங்ககிட்ட போய் நான் டைரக்டர்னு சொன்னா எப்படி நம்புவாங்க? ஆனால், அப்படி நம்பாதவங்களே இன்னைக்கு என் பட டீஸரைப் பார்த்துட்டு 'டெக்னிக்கல்லா பிச்சிட்டடா’னு பாராட்டுறாங்க.''

''ஓ.கே., ஏன் நடிப்பைத் தொடரலை?''

''வெங்கட்பிரபு என் நெருங்கிய தோழன். அப்ப 'பூஞ்சோலை’னு ஒரு படத்துல நானும் அவனும் சேர்ந்து நடிச்சோம். கங்கை அமரன் சார்தான் இயக்குநர்; தயாரிப்பாளர். ஆனா, அந்தப் படம் வரவே இல்லை. அப்புறம் 'திருட்டுப்பயலே’, 'தம்பி’, 'தவமாய் தவமிருந்து’, 'சரோஜா’, 'பிரியாணி’னு நிறையப் படங்கள்ல சின்னச்சின்ன கேரக்டர்கள்ல நடிச்சேன். நடிக்கிறதைவிட டைரக்ஷன்தான் இப்ப என் சாய்ஸ்!''

''தலைப்பு மட்டும் வித்தியாசமா இருந்தாப் போதுமா? கதையில் என்ன ஸ்பெஷல்?''

''மதுரையில் நட்புக்காகக் கொலை; திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஜாதிக்காகக் கொலை; திருச்சியில் ரௌடியிசத்துக்காகக் கொலை; கோவையில் தொழில் போட்டிக் கொலை; விழுப்புரம், கடலூரில் அரசியல் கொலை; சென்னையில் மட்டும்தான் பணத்துக்காகக் கொலை. அதுதான் இந்தப் படம். சாகுறவனுக்கும் எதுக்காகச் சாகுறோம்னு தெரியாது. கொல்றவனுக்கும் எதுக்காகக் கொல்றோம்னே தெரியாது. இப்படித்தான் சென்னையில் பல கொலைகள் நடக்குது. அதைச் செய்யும் கூலிப்படைகள் பற்றித்தான் இந்தப் படம்!''

''விமல் இந்தக் கதைக்கு எந்த வகையில பொருந்தி வந்திருக்கார்?''

''விமலோட எனக்கு நெருங்கின தொடர்பு கிடையாது. ஆனால், அவருக்கு கதை மேல் அளவு கடந்த நம்பிக்கை. 'புதுசா இருக்கு... பண்ணுவோம்’னு ஆர்வமா முன்னால் வந்தார். அவருக்கு போலீஸ்காரரோட மகன் கேரக்டர். 'சிட்டியில் என்ன தப்பு வேணும்னாலும் பண்ணலாம், அப்பா காப்பாத்திடுவார்’னு நினைச்சு சுத்துற கேரக்டர். அடுத்து, படத்துக்கு பெரிய பலம் சமுத்திரக்கனி கேரக்டர்.''

''எந்தச் சிரமமும் இல்லாம தயாரிப்பாளரையே ஹீரோயின் ஆக்கீட்டீங்களோ?''

''தயாரிப்பாளர் 'புன்னகைப் பூ’ கீதா மலேசியாவைச் சேர்ந்தவங்க. 'அறிந்தும் அறியாமலும்’, 'பட்டியல்’னு சில படங்களைத் தயாரிச்சிருக்காங்க. அவங்களை 'அமிர்தா’னு பேர் வெச்சு ஹீரோயினா அறிமுகப்படுத்துறோம். தயாரிப்பு வேலைகளுக்காக அவங்களைச் சந்திச்சுப் பேசும்போது, 'நம்ம படத்துக்கு கரெக்டா இருப்பாங்களே’னு தோணுச்சு. தவிர, என் ஹீரோயின், ஈவென்ட் மேனேஜ்மென்ட் பண்ற மெச்சூர்டான பொண்ணு. 'நீங்களே நடிங்களேன்’னு கேட்டேன். ஆரம்பத்துல மறுத்தவங்க, பிறகு யோசிச்சிட்டு சம்மதிச்சாங்க. அந்த கேரக்டர்ல கச்சிதமா பொருந்தியிருக்காங்க. மியூசிக்குக்கு ஜி.வி.பிரகாஷ், ஒளிப் பதிவுக்கு என்.கே.ஏகாம்பரம்ன்னு நல்ல டீம். பரபரனு வேலை பார்த்துட்டு இருக்கோம்!''

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்