அப்போ உதவி இயக்குநர்... இப்போ நடிகன்! | அப்போ உதவி இயக்குநர்... இப்போ நடிகன்!, அரேன், 'ஆடுகளம்' நரேன், டான்ஸ், உதவி இயக்குநர், நடிகர், காமெடி, குணச்சித்திர வேடங்கள்

வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (05/09/2014)

கடைசி தொடர்பு:12:24 (05/09/2014)

அப்போ உதவி இயக்குநர்... இப்போ நடிகன்!

வில்லன், காமெடியன், அன்பான அப்பா, குணச்சித்திர வேடங்கள் என்று இப்போது எல்லாப் படங் களையும் தன் ஆடுகளங்களாக மாற்றி, நடித்துக் கலக்குகிறார் 'ஆடுகளம்’ நரேன். அவருடன் ஒரு ஜாலி பேட்டி.

''சென்னையில் பிறந்து நங்க நல்லூரில் வளர்ந்த பையன் நான். சின்ன வயசுல இருந்தே சினிமா ஆசை. படிப்பு ஒண்ணும் ஏறல. இருந்தாலும் அப்பா அம்மாவுக்காக பி. எஸ்சி வரை படிச்சேன். சின்னச் சின்னதா சுயதொழில் பண்ணிப் பார்த்தேன். ஒண்ணும் சரிவரலை. சினிமாவைத் தவிர வேறொண்ணும் செய்ய முடியாதுனு புரிஞ்சப்போ, அசிஸ்டென்ட் டைரக்டரா முயற்சி பண்ணினேன். முடியலை. அப்போதான் நண்பர் ஒருத்தர் 'நீ நடிகனாகிடலாம். ஸ்டில்களை எடுத்துட்டுப் போய் கம்பெனி கம்பெனியாக் கொடுக்கலாம்’னு சொன்னார். ஆனா எனக்கு அது சரியா படல. எனக்கு நடிப்பை பத்தி ஒண்ணுமே தெரி யாதே. அசிஸ்டென்ட் டைரக்டரானா டைரக்‌ஷன் கத்துக்கலாம். ஆனா நடிகரா ஆன பிறகுதான் நடிப்பு கத்துக்கணும்னா முடியுமா?

அப்புறம்... டான்ஸ் கத்துக் கணும்னு சொன்னாங்க. கலா மாஸ்டர் நடத்துற டான்ஸ் ஸ்கூல்ல சேர்ந்தேன். டான்ஸ் கத்துக் கறதுக்காக இல்ல. அங்கே போனா சினிமாக்காரர்களோட பழக்கம் வருமே. அதுக்குதான். அந்த நேரம் பார்த்து கலா மாஸ்டர் ஒரு  ஆக்டிங் கோர்ஸ் ஆரம்பிச்சார். அதுல சேர்ந்தேன்.

அப்புறம் அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அங்கே பேராசிரியர் மதன் கேப்ரியேல்கூட பழக்கம் ஏற்பட்டது. இடையில 'ஓம் சரவண பவ’ என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிச்சேன். அதுதான் எனக்கு முதல் படம்.

அதுக்கு அப்புறம் பெரிசா ஒண்ணும் வாய்ப்பு வரல. அப்போதான் மதன் கேப்ரியேல் என்கிட்டே 'நடிப்பு வாய்ப்பு வரும்போது வரட்டும். அதுவரை நீ இங்கே நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுக்கிற மாஸ்டரா ஆயிடு’ன்னார். நடிக்கிறதுக்கு தகுதிப்படுத்திக்க நடிப்பு படிக்கப்போய், நடிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டிய வேலைக்குப் போயிட்டேன். அப்போதான் பாலு மகேந்திரா சாரைப் பார்த்து நடிக்க வாய்ப்பு கேட்டேன். அவர் என்னை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டார்.

'ராமன் அப்துல்லா’ படம் ஆரம்பித்தபோது என்னைத் தேடி இருக்கிறார். எனக்கு விஷயம் தெரிஞ்சு நான் போனப்போ எல்லா கேரக்டர்களுக்கும் நடிகர்கள் முடிவாகி இருந்தது. இருந்தாலும் எனக்கு ஏதாவது செய்யணும்னு அவர் நினைச்சதால, அந்தப் படத்துல ஒரு சின்ன அடியாள் கேரக்டர்ல நடிச்சேன். அப்புறம் டி.வியில் அவர் கதை நேரம் ஆரம்பிச்சப்போ, அவரே என்கிட்ட 'நாலு கதைகள்ல உனக்கு வேலை இருக்கு’னு  சொல்லி, தனது உதவியாளர் ஒருவரை அறிமுகப்படுத்திவிட்டார். அவர்தான் வெற்றி மாறன். கதை நேரம் முடிந்த பிறகும் வெற்றி மாறன்கூட நட்பு தொடர்ந்தது. அப்போதான் அவருக்கு 'பொல்லாதவன்’ படம் கிடைச்சது. அதுல கிஷோர் நடிக்க வேண்டிய கேரக்டரில் நான்தான் நடிக்க வேண்டியது. அதற்காக முடியெல்லாம் வெட்டித் தயாரா இருந்தேன். ஆனாலும் சில காரணங்களால் அதில்  நான் நடிக்க முடியல.

அடுத்து 'ஆடுகளம்’ படத்திலும் வேலை செஞ்சேன். எல்லா கேரக்டர்களுக்கும் ஆர்ட்டிஸ்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டே வந்தார் வெற்றி மாறன். முக்கியமான ஒரு கேரக்டருக்குப் பொருத்தமான ஆர்ட்டிஸ்ட் யார் என்பதைப் பற்றி பலமுறை நான் விவாதம் செஞ்சும் 'அதை விடுங்க. மத்ததைப் பாருங்க’னு சொல்லிட்டு சின்னச் சின்ன கேரக்டருக்கு எல்லாம் ஆர்ட்டிஸ்ட் ஃபிக்ஸ் பண்ண ஆரம்பிச்சார்.

ஒரு நிலையில் நான் டென்ஷனாகி ''அது முக்கியமான கேரக்டர். அதுக்கு யாரு ஆர்ட்டிஸ்ட்னு உடனே ஃபிக்ஸ் பண்ணுங்க'' என்றேன் கண்டிப்பாக. அதுக்கு அவர் 'எப்பவோ பண்ணிட்டேன். அது நீங்கதான்’னு சொன்னார். இந்த நரேன், 'ஆடுகளம்’ நரேனா எல்லோரும் அறிந்த நடிகனானது இப்படித்தான்.'

'ஆனா அதுக்கு அப்புறம் எல்லாவித கேரக்டர்களுக் குள்ளும் புகுந்து புறப்பட்டீங்களே.. அது எப்படி?'

'' 'பீட்சா’ படம் எனக்கு வேறொரு அடையாளம் கொடுத்தது. அப்புறம் 'ஆல் இன் அழகுராஜா’ படத்துல காமெடி பண்ணினேன். நான் முடிஞ்சவரை சின்சியரா பண்றேன். ஆனா எனக்கு எல்லா கேரக்டரும் தரலாம்னு நம்பித் தராங்களே. இந்தப் பாராட்டு எல்லாம் அவங்களுக்குதான் போய்ச் சேரணும். அவங்களுக்கு எல்லாம் என் மனமார்ந்த நன்றிகள்.''

''உங்க குரல்.... நீங்க நடிக்க வரும்போது தடையா இல்லையா?''

''சொன்னா நம்ப மாட்டீங்க. சின்ன வயசுல நான் போன்ல பேசினா எல்லோரும் பொண்ணு பேசுற மாதிரி இருக்குனு சொல்வாங்க. அப்படி ஓர் இனிய குரல். நடிப்பு பயிற்சி கொடுக்கும் மாஸ்டரா இருக்கும்போது சத்தம் போட்டுப் பேசிப் பேசி என்னோட வோக்கல் கார்டு டேமேஜ் ஆகிடுச்சு. ஆனா இப்போ எல்லோரும் என் குரல்தான் எனக்கு பெரிய ப்ளஸ்னு சொல்றாங்க.'

சு.செ.குமரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்