இனி நடிப்பு மட்டுமே! | விஜய் ஆண்டனி, நடிகர், இசையமைப்பாளர், இனி நடிப்பு மட்டுமே. vijay antony, hero, music director, actor

வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (05/09/2014)

கடைசி தொடர்பு:12:27 (05/09/2014)

இனி நடிப்பு மட்டுமே!

'சலீம்’ படத்தின் ரிசல்ட் பாசிட்டிவாக இருப்பதால் சந்தோஷத் தில் இருக்கிறார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து 'சைத்தான்’, 'இந்தியா  பாகிஸ்தான்’ என நடிப்புக் களத்தில் குதிக்கத் தயாரானவருடன் பேசினேன்.

 

'' 'நான்’ படத்தில் உங்க கேரக்டர் பெயர் சலீம். இப்போ இந்தப் படத்தின் பெயரும் 'சலீம்’. பெயருக்கு காப்புரிமை வாங்கிட்டீங்க போல?'

'' 'நான்’ படத்துல பண்ணின சலீம் என்ற கேரக்டர் எனக்கு  ஓர் ஈர்ப்பைக் கொடுத்தது. அந்த கேரக்டரை அப்படியே எடுத்துக் கொண்டு வேறு கதையில் இந்தப் படத்தை பண்ணினோம். ’நான்’ படத்தைப் பார்த்தவங்களுக்கு இது இரண்டாம் பாகம் போல இருக்கும். பார்க்காதவங்க தனி படமாகவே ரசிக்க முடியும். இந்தப் படத்தின் கடைசியில் 'தொடரும்’னு போட்டுதானே முடிச்சிருக்கோம். அடுத்தடுத்து இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவேளையில் சலீம் தொடர்வான்.'

''இந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்த விஷயம்?'

''டைரக்டர் நிர்மல் குமார் கதை சொன்ன விதம்தான். இந்தக்  கதை மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தது. முதல் படத்தில் சமூக அக்கறை அது இதுன்னு பேசி இருந்தா, 'யாருடா நீ’னு கேட்டு இருப் பாங்க . ’நான்’ படத்துல மக்கள் என்னை ஏத்துக்கிட்ட தைரியத்துலதான் இந்தப் படத்துல கொஞ்சம் பேசலாம்னு நம்பிக்கை வந்தது. அதனால்தான் மருத்துவமும் வியாபாரம் ஆனதை சமூக அக்கறையோட பதிவு செஞ்சிருக்கோம்.'

''ரெண்டு படங்களிலும் அமைதியான ஆளாவே வர்றீங்களே? அடுத்தடுத்து இப்படித்தான் நடிப்பீங் களோ?'

''எல்லோருமே ஒரு விஷயம் ஆரம்பிக்கும்போது இயல்பில் அப்படித் தானே இருக்கோம். சூழ்நிலை மாறும்போதுதான் அதற்கேற்ப இயல்பும் மாறுது. தவிர என்னைப் பொறுத்தவரை நான் ரொம்ப அமைதியான ஆளு. அதனால ஒரு கதையில் நான் ஏற்கும் கதாபாத்திரத்துக்கு நடக்கிற விஷயங்கள் விஜய் ஆண்டனி என்ற எனக்கு உண்மையாக நடந்தால் நான் என்ன செய்வேனோ, அதுதான் என்னைப் பொறுத்தவரை நடிப்பு. மத்தபடி ரெண்டு படங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. 'சலீம்’ல  காதல், ஆக்‌ஷன்னு அடுத்த ஸ்டேஜுக்குப் போயிருக்கேனே.'

''ஆக, இனி உங்க கேரக்டர்கள் எல்லாமே நியாயத்துக்குப் போராடுற நல்லவராகவே இருக்கும்.  அப்படித்தானே?'

''ஐயய்யோ. இல்லை பாஸ்.  ரௌடியா... பொறுக்கியா நடிக்கக்கூட ஆசை இருக்கு. ஆனா அந்தப் படங்களில்கூட இந்த விஜய் ஆண்டனி ரௌடியா, பொறுக்கியா இருந்தா என்ன பண்ணுவானோ... அப்படிதான் நடிப்பேன்.'

''லட்டு லட்டா பொண்ணு களை எங்கே இருந்து பிடிக்கிறீங்க?'

''ரெண்டே படம்தான் எடுத்திருக்கேன். அதுக் குள்ளே இப்படி ஒரு பேரா... சரி இருக்கட்டும். கதையில் வரும் கதாபாத்திரங்கள் மாடர்னான அழகான பெண்கள் என்று இருக்கும்போது, அப்படிப்பட்ட பெண்கள் தானே நடிக்க முடியும்.'

''நீங்க நடிக்கும் படங்களில் அரேபிய இசையின் பாதிப்பு இருந்தது. அதுதான் உங்க  இசை பாணியா?'

''ஏதாவது ஒரு ஸ்டைல் வேணும் இல்லியா? அப்படி என் நடிப்பு மற்றும் தயாரிப்பு பாணிக்கு இந்த அரேபிய ஸ்டைல் இசையை அடையாளமா வைக்கிறேன். அந்த இசையில் எனக்கு ஈர்ப்பு உண்டு. மதம், நிலம் உணர்வுகளைக் கடந்த ஈர்ப்பு அது. எப்படி ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என்று ஒரு இசை பாணி இருக் கிறதோ, 'மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் ஒரு இசை பாணி இருக்கிறதோ, அப்படி நான் நடிக்கும் படங்களில் அரேபிய இசை இருக்கும்.'

''ஆனா இனிமே நீங்க இசை அமைக்கப்போறது இல்லைனு சொல்றாங்களே?'

''உண்மைதான். நேரம் இல்லை. சும்மா கடமைக்கு எதையும் நான் செய்ய விரும்பலை. அதனால் எனது அடுத்த படமான 'இந்தியா  பாகிஸ்தான்’ படத்தில் வேறொரு இசையமைப்பாளருக்கு வாய்ப்புக் கொடுக்கிறேன்.'

''நீங்க நடிக்கிற படம் எல்லாம் உங்க சொந்தப் படமாதான் இருக்குமா?'

''நல்ல கதை கிடைத்தால், வெளிப்படங்களில் நடிக்கவும் தயார்.'

சு.செ.குமரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்