ஆளாளுக்கு சினிமாவில் தலையிடுவது சரியில்லை. - சரத்குமார்! | ரத்குமார், ஆளாளுக்கு சினிமாவில் தலையிடுவது சரியில்லை, sarathkumar

வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (09/09/2014)

கடைசி தொடர்பு:16:21 (09/09/2014)

ஆளாளுக்கு சினிமாவில் தலையிடுவது சரியில்லை. - சரத்குமார்!

சரத்குமார். அரசியலிலும் சினிமாவிலும் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்துவரும் சர்ச்சைகுமார். 'சண்டமாருதம்’ படத்தில் பிஸியாக இருந்தவரிடம் பேசினேன்.

 

''அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளில் பெரும்பான்மையான கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி, அ.தி.மு.கவை விமர்சித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நீங்கள் மட்டும் அ.தி.மு.கவை ஆதரிப்பது ஏன்?'

''எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க அரசு சரியான பாதையில்தான் செல்கிறது. அதற்கு சாட்சிதான் தமிழக மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்குக் கொடுத்த மிகப் பெரிய வெற்றி.'

''விஷால், கார்த்தி, ஆர்யா போன்ற இளம் நடிகர்கள், நடிகர் சங்க விஷயத்தில் போர்க்கொடி தூக்குகிறார்களே. சங்கப் பொறுப்பில் இளைஞர்களுக்கு இடம் இல்லையா?'

'நடிகர் சங்கத் தலைவர் பதவி என்பது நிரந்தரமான பதவி அல்ல. இனிமேல் எப்போதுமே சங்கம் கடன்படாமலிருக்க சில வேலைகள் செய்ய வேண்டியது இருக்கிறது. அதில் ஒரு திட்டம்தான் நடிகர் சங்கத்துக்கு என்று சொந்தமாகக் கட்டடம் கட்டுவது. அந்தக் கடமையை முடித்துவிட்டுதான் வழிவிடுவேன். அதன் பின்னால் ஜனநாயகப்பூர்வமான முறையில் யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரட்டும்.'

'' கத்தி’, 'புலிப்பார்வை’ படங்களுக்கு எதிர்ப்பு வருவதை, நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?'

''இந்த விஷயத்தில் என்ன நடக்குதுனே தெரியவில்லை. படம் ரிலீஸ் ஆகி, அதன் பிறகு பிரச்னை வந்தா பேசலாம். பப்ளிசிட்டிக்குப் பண்றாங்களா அல்லது வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்கிறார்களா என்றே தெரியவில்லை. இந்த நிலையில் இரண்டு படங்களைப் பற்றியும் கருத்து சொல்ல விரும்பவில்லை.'

''இப்போதெல்லாம் எந்தப் படம் வந்தாலும் ஏதாவது ஓர் அமைப்பு நாங்கள் பார்த்து சரி என்று சொன்னால்தான் வெளியிட வேண்டும் என்கிறார்களே, இது ஆரோக்கியமானதுதானா?'

'' சென்சார் போர்டு பார்த்து முடிவு செய்த, வெளியிட அனுமதி கொடுத்த பின் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்பது என் கருத்து. அதே நேரம் சில விதிவிலக்கான படங்களில் ஒரு பெரிய அமைப்போ அல்லது சமுதாயமோ எதிர்ப்பைப் பதிவுசெய்தால், அரசு தலையிட்டு பிரச்னையைத் தீர்த்துவைக்கலாம். 'விஸ்வரூபம்’ வெளியீட்டின்போது அப்படித்தான் நடந்தது. ஆனால் அதற்காக யார் படம் எடுத்தாலும் இப்படி சின்னச்சின்ன அமைப்புகளைத் திருப்திப்படுத்த வேண்டியிருக்கும் என்றால், அது சினிமாவைப் பாதிக்கும். வேண்டுமானால் சென்சார் போர்டைக் கலைத்துவிட்டு ஒவ்வொரு மாநில அரசும் நியமிக்கும் குழுவிடம் அனுமதி வாங்கி வெளியிடுமாறு செய்யலாம்.'

''உங்கள் முன்னாள் நண்பர் விஜயகாந்த் உங்களின் திரை வெற்றிக்கு முக்கியக் காரணம். அவரும் நீங்களும் தற்போது எதிரும் புதிருமாக இருக்கிறீர்களே?'

''அவர் இப்பவும் எனக்கு நண்பர்தான். எனது சினிமா வெற்றிக்குக் காரணமாகச் சொல்ல வேண்டுமானால், அவரும் ஒரு காரணம். 'புலன்விசாரணை’ மூலம் நல்ல பெயர் கிடைத்தது. என்னை இயக்குநரிடமும் விஜயகாந்திடமும் அறிமுகப்படுத்தியது மேக்கப் ராஜு. இப்ராஹிம் ராவுத்தர்,

ஆர்.கே.செல்வ மணி, விஜயகாந்த், மேக்கப் ராஜு இவர்கள் நால் வருக்கும் நான் என்றும் நன்றி சொல்வேன். ஆனால் விஜய காந்தின் அரசியல் நிலைப்பாட்டில் பெரிதும் மாறுபடுகிறேன்.'

''நீங்கள் நடிக்க வந்து 25 ஆண்டுகள் நிறைவாகிவிட்டன. ஏன் விழா எடுக்கவில்லை?'

''சின்னத் திருத்தம். நடிப்பு என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகத் திரையுலகிற்கு வந்து 33 வருசமாகிடுச்சு. என் மனைவி நடிக்க வந்து 36 வருடமாகிடுச்சு. விழா எடுக்கணும்னா, என் மனைவிக்குதான் முதலில் எடுக்க வேண்டும். அதை நான் செய்ய வேண்டுமென எண்ணிக் கொண்டிருக்கிறேன்.'

செந்தில்குமார்

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்