‘சிங்கிள் தட்டுங்க சீனியர்!’ | சிங்கிள் தட்டுங்க சீனியர், சுசீந்திரன், விஷ்ணு, ஶ்ரீதிவ்யா, ஜீவா

வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (15/09/2014)

கடைசி தொடர்பு:12:43 (15/09/2014)

‘சிங்கிள் தட்டுங்க சீனியர்!’

''எல்லா நாடுகள்லயும் விளையாட்டு வீரர்கள் விளையாடித்தான் தோத்துப்போவாங்க. ஆனா, நம்ம நாட்ல மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமலேயே தோத்துப்போறாங்க. இந்தக் கவலைதான், 'ஜீவா’ கதை. அதைச் சொல்ல நான் தேர்ந்தெடுத்த களம்... கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஆசைப்படுற, அதுக்கான தகுதி, திறமைகளோட இருக்கிற ஒருத்தன் எப்படி எல்லாம் போராட வேண்டியிருக்குனு சொல்லியிருக்கேன். 10 வருஷம் கழிச்சு திரும்பிப் பார்க்கிறப்பகூட எனக்கான பெருமையா இந்த 'ஜீவா’ நிச்சயம் இருப்பான்!'' - நறுக், சுருக் இன்ட்ரோ கொடுக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

கமர்ஷியல் அதிரடி, ரசனை மெலடி கலவையைக் கச்சிதமாகக் கையாள்பவர், 'பாண்டியநாடு’ ஹிட்டுக்குப் பிறகு தான் இயக்கும் 'ஜீவா’ பற்றிப் பேசுகிறார்.

''ஏகப்பட்ட ப்ளேயர்ஸ், பயிற்சியாளர்கள், அம்பயர், மைதானம் தயார் பண்றவங்கனு பலரிடம் இருந்து பல அனுபவங்கள். காயம் காரணமா காணாமப்போனவங்க, செலக்ஷன் அரசியல்ல அடிபட்டு கிரிக்கெட்டையே கை கழுவினவங்க, ஜெயிச்சவங்க, தோத்தவங்கனு ஒவ்வொருத்தர்கிட்டயும் அவ்ளோ வலி... அவ்ளோ வேதனை. 45, 50 வயசுலகூட சினிமால இயக்குநர் ஆகிடலாம். ஆனா, ஸ்போர்ட்ஸ்ல அப்படிலாம் வாய்ப்பு கிடைக்காதே! ஏழு வயசுல இருந்து கனவு கண்டு உழைச்சான்ங்றதுக்காக, 50 வயசு வரைக்கும் ஒருத்தர் இங்கே விளையாட முடியாதே! அதுலயும் 25 வயசுலயே ஒருத்தன்கிட்ட, 'இனிமே உனக்கு இங்க வாய்ப்பு இல்லை. வெளியே போ’னு சொன்னா, 20 வருஷக் கனவும் உழைப்பும் ஒரே நிமிஷத்துல கலைஞ்சிரும். இளமையையும் உற்சாகத்தையும்  கிரவுண்டுல தொலைச்சவன், அப்புறம் இன்னொரு வாழ்க்கையைத் தேடி எங்கே போவான்? அப்படியான வலிகளை ரசிகர்கள் மனசுல பதியவைக்கும் இந்தப் படம்!''

''ஹீரோ விஷ்ணு இயல்பாவே ஒரு கிரிக்கெட்டர்தானே!''

''ஆமாங்க..! அதனாலதான் ஹோம் வொர்க் பதற்றம், பஞ்சாயத்துலாம் இல்லாம, ரொம்ப இயல்பா ஷூட்டிங் நடந்தது. எட்டு வயசுல ஆரம்பிச்சு, தன் 15 வருஷ கிரிக்கெட் பயணத்தை ஹீரோ சொல்றதுதான் படம். சமீபத்துலதான் விஷ்ணுவுக்கு படத்தைப் போட்டுக் காட்டினேன். 'மறுபடியும் எனக்கு இப்படி ஒரு படம் கிடைக்குமானு தெரியலை சார்’னு நெகிழ்ந்தார். அவங்கப்பா ரமேஷ் குடவாலா சார் போன் பண்ணி, 'ரொம்ப நாளைக்கு அப்புறம் என் பையன் ரொம்ப ஹேப்பியா இருக்கான். படம் நல்லா வந்திருக்குனு நினைக்கிறேன்’னார். நம்ம வேலையைச் சரியா பண்ணிருக்கோம்னு தோணுச்சு!''

'' 'சின்சியர் கிரிக்கெட் ஃபிலிம்’னு சொல்றீங்க. ஆனா, ஸ்ரீதிவ்யா, சூரினு கமர்ஷியல் பேக்கேஜும் இருக்கே!''

''ஏங்க... ஒரு கிரிக்கெட்டர் வாழ்க்கையில காதலி, நண்பன்லாம் இருக்க மாட்டாங்களா? சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்துட்டுப்போற பொண்ணு இல்லை ஸ்ரீதிவ்யா. பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, வேலைக்குப் போற பொண்ணுனு படம் முழுக்க மூணு பருவத்துல வருவாங்க. படத்தின் பட்டாசுக் காமெடிக்கு சூரி ஜவாப்தாரி. கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் ஒரு முனையில் நல்ல பேட்ஸ்மேன், மற்றொரு முனையில் ஒரு பௌலர் நின்னு போட்டியை ஜெயிக்கவேண்டியிருக்கும். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் ஒரு முனையில் விஷ்ணு, மறுமுனையில் சூரி. எல்லா பந்துகளையும் வேஸ்ட் பண்ணிட்டு இருப்பார் சூரி. ஒவ்வொரு பந்துக்கு முன்னாடியும் 'சிங்கிள் தட்டுங்க சீனியர்’னு சொல்லிட்டே இருப்பார் விஷ்ணு. அதுக்கு, 'நான் என்ன சிக்ஸ் அடிக்கவாடா டிரை பண்றேன். சிங்கிள் அடிக்கத்தான்டா முக்கிட்டு இருக்கேன். அவன் பால் ஏத்துறான்னா, நீ பிரஷர் ஏத்துற’னு சூரி புலம்புவார். இப்படி டி.வி கேமரா காட்டாத கிரிக்கெட் மைதான சந்தோஷம், துயரம், கொண்டாட்டம், திண்டாட்டம் எல்லாம் எங்க கேமரா நிச்சயம் காட்டும்!''

''திறமையான ஏழை, மில்லியனரின் அரசியல், நல்லவனுக்கு சோதனை, இறுதியில் ஜெயம்னு 'விளையாட்டு சினிமா’க்களுக்கான க்ளிஷேவிலேயே இருக்குமா படம்?''

''படப்பிடிப்பில் நான் ஷூட் பண்ணி வேஸ்டேஜ்னு எதுவும் இருக்காது. 70 சீன் எடுத்தேன்னா, 70-ம் ஆன் ஸ்க்ரீன்ல இருக்கும். அந்த அளவுக்குக் கதைக்கு சீன் பிடிக்கும்போதே, எடிட்டிங் புரிதலோட யோசிப்பேன். அதனால நீங்க சொல்ற க்ளிஷே சமாசாரம் எல்லாம் இந்தப் படத்தில் இருக்காது. கிளைமாக்ஸ்... கடைசி ஓவர்ல கடைசி பால். அது ஃபோர் போகுமா, சிக்ஸ் போகுமாங்கிற வழக்கமான விளையாட்டு சினிமாவா இருக்காது. ஒரு ப்ளேயரோட உணர்வுதான் ஒவ்வொரு திருப்பத்திலும் கதையை நகர்த்தும். அதே சமயம் படம் முழுக்க ஸ்போர்ட்ஸ் மூடும் இருக்கும். அதுக்காக 'சக்தே இந்தியா...’னு பல்லைக் கடிச்சிட்டு பாடுற பாட்டுலாம் இருக்காது. படம் பார்த்த பிறகு உங்க பையனோ, தம்பியோ பேட் எடுத்துட்டு விளையாடப் போகும்போது அவங்ககிட்ட ஒரு நிமிஷம் நின்னு பேசத் தோணும்!''

''விஜய், அஜித், சூர்யாவை வைச்சு படம் பண்ற ஐடியா இருக்கா?''

''இல்லாம இருக்குமா? விஜய் சார், சூர்யா சார் ரெண்டு பேரையுமே சந்திச்சுப் பேசியிருக்கேன். 'படம் பண்ணலாம் சார்’னு சொல்லியிருக்காங்க. ஆனா, அட்டகாசமா கதை பிடிக்கணும். பெரிய ஸ்டாரோட சேர்ந்து பண்ணும்போது அது ரெகுலர் படமா இருக்கக் கூடாதே! நான் இதுவரை ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டுதான் ஆர்டிஸ்ட்டைத் தேடுவேன். ஆனா, ஹீரோவுக்குனு கதை பண்ண கொஞ்சம் நேரம் வேணும். முதல்முறையா ஒரு ஹீரோவுக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்றது, அடுத்து பண்ணப்போற விஷால் படத்துக்குத்தான். ஏன்னா, 'பாண்டியநாடு’ ரிலீஸுக்கு முன்னாடி அது ஹிட், ஃபெய்லியர்னு எந்த ஐடியாவும் இல்லாதப்பவே, 'நாம மறுபடியும் சேர்ந்து ஒரு படம் பண்ணணும் சுசி’னு அட்வான்ஸ் கொடுத்தவர் அவர்!''

''வீட்ல என்ன விசேஷம்?''

''தினம் தினம் திட்டு வாங்குறதுதான் விசேஷம். எல்லா சினிமா குடும்பம் மாதிரி, குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க மாட்டேங்கிறேன்னு திட்டிட்டே இருக்காங்க. 'இப்போதைக்கு ஓடுறதுக்கான வாய்ப்பை கடவுள் கொடுத்திருக்கார். ஓடுறேன். அப்புறம் வீட்லதானே இருக்கப்போறேன்’னு சமாளிச்சிட்டு இருக்கேன். பல நேரங்கள்ல புரிஞ்சுப்பாங்க; சில நேரங்கள்ல வெடிச்சிடு வாங்க. படம் ரெடியானதும் போட்டுக் காமிச்சு அவங்களைச் சமாதானப்படுத்திருவேன்!''

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்