Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினிக்கு என்மீது வருத்தமா?

நளினிகாந்தை ஞாபகம் இருக்கா? ரஜினியின் ஆரம்ப காலங்களில் ரஜினியைப் போலவே இருக்கும் நளினிகாந்தும் ஓரளவு பிரபலம்தான். இடையில் பல வருடங்களாக ஆளையே காணோம். அண்மையில் ஹிட்டடித்த 'யாமிருக்க பயமே’ படத்தில் ஃபிரைடு ரைஸ் திருடனாக வந்து 'யார் இந்தக் கிழவர்?’ என கேட்க வைத்தார். ஆளை மடக்கி கேள்வி கேட்டேன்.

''என்னாச்சு? இத்தனை வருஷமா எங்கே போனீங்க?''

''ஹாஹா... நான் இங்கேயேதான் இருக்கேன். 15 வருஷத்துக்கு முன்னாலேயே நடிக்கிறதை நிறுத்திட்டு சீரியல் பக்கம் போயிட்டேன். 'புதுப்பட்டி பொன்னுத்தாயி’, 'எங்க முதலாளி’னு ரெண்டு படங்கள் ஒரே நேரத்துல நடிச்சேன். அதுதான் கடைசியா நான் பண்ணின படங்கள். காவேரி, சுயரூபம், புதிய வாழ்க்கை, புதிய பாரதம்னு நாலு தமிழ் சீரியல்களும் மூணு தெலுங்கு சீரியல்களையும் ப்ரைம் டைம்ல தயாரிச்சேன். அஸ்வினி, சுதா சந்திரன், இளவரசினு பல முன்னாள் பாப்புலர் நடிகைகளை கன்வின்ஸ் பண்ணி சீரியல்களுக்கு கூட்டிட்டு வந்தது நான்தான். சினிமா மேல வருத்தம் எதுவும் இல்லை. ஆனா, ஏனோ எனக்கு நிப்பாட்டிக்கணும்னு தோணுச்சு. ஆனா, சீரியல்ல சிலபேரை நம்பி 50 லட்ச ரூபாய் நஷ்டமாச்சு. அதோட பசங்க தலை எடுக்கட்டுமேனு ஒதுங்கி வாழ ஆரம்பிச்சுட்டேன். இப்போ என் மகன் ராம், 'சிம்கார்டு’னு ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறான்.''

''இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு கேரக்டர்ல எப்படி நடிக்க சம்மதிச்சீங்க?''

''ஒரு நல்ல நடிகன்னா, கேரக்டராத் தெரிஞ்சா போதும்னுதான் விரும்பு வான். 15 வருஷங்களுக்குப் பிறகு என்னை ஞாபகம் வெச்சுக் கூப்பிட்டதே எனக்குப் பெருமைதான். தாடி வெச்சு கிறுக்குபோல இருக்கிற ஒரு கிழவர் வேஷம்னதும் தயங்காம ஒத்துக்கிட்டேன். இப்போ படம் ரிலீஸானதும் நிறைய பேர் 'யார் அந்த ஃபிரைடு ரைஸ் தாத்தா’னுதான் கேட்கிறாங்க. இந்தப் படம் பார்த்துதான் நான் இன்னும் ஃபீல்டுல இருக்கேனு தெரிஞ்சுக்கிட்டு 'கத்தி’ படத்துல ஒரு பாஸிட்டிவ் ரோல் நடிக்கிற வாய்ப்பு வந்திருக்கு. எல்லாம் அந்த ஃபிரைடு ரைஸ் தாத்தா கேரக்டர் தந்த கிஃப்ட்.''

''சி.எம்முடன்தான் உங்க முதல் படமாமே... நிஜமா?''

''ஆமா. 1979ல எடுக்கப்பட்ட அந்தப் படத்தோட டைட்டில் 'சம்பா’. ஜெயலலிதா மேடம் பிரதான கேரக்டர்ல நடிச்சிருப்பாங்க. நான் அவங்களுக்கு வில்லனா நடிச்சிருந்தேன். படம் ரிலீஸ் ஆகி இருந்தா, எனக்கு தனி அடையாளம் கிடைச்சிருக்கும். ஆனா, துரதிருஷ்டவசமா கடைசி வரை அந்தப் படம் ரிலீஸாகலை. அந்தப் படத்துக்கு அப்புறம் 'இதயம் பேசுகிறது’ மணியனின் 'காதல் காதல் காதல்’ என்ற படத்திலும், 'அழைத்தால் வருவேன்’ என்ற படத்திலும் ஹீரோவா நடிச்சேன். அப்போ எனக்கு தாசரி நாராயணராவ் சார்தான் நளினிகாந்த்னு பேர் வெச்சார். சிவாஜி சாருக்கு வில்லனா ’சத்யம்’னு ஒரு படம் நடிச்சேன். அது 100 நாட்கள் ஓடியது. அப்படியே தெலுங்கிலேயும் 35 படங்கள் வில்லனா பண்ணினேன்.

என்.டி.ஆர், நாகேஸ்வர ராவுக்கு ஆரம்பிச்சு சோபன்பாபு, பால கிருஷ்ணா, சிரஞ்சீவி வரைக்கும் வில்லனா  நடிச்சேன். தமிழ்ல அப்போ 'முந்தானை முடிச்சு’ படத்துல நான் நடிச்ச ஒரு பாத்திரம் எம்.ஜி.ஆர் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் ஸ்கூல் பசங்களுக்கு வெச்சிருக்கிற சத்துணவை திருடிக் கொண்டுபோய் ஹோட் டலில் விற்கும் ஒரு கேரக்டர் பண்ணி இருந் தேன். என்னை வெச்சு இந்தத் திட்டத்தைப்பற்றி பெருமையா பேசுவார் பாக்யராஜ் சார். வெற்றிவிழாவில் ஷீல்டு கொடுக்கிறப்போ புரட்சித்தலைவர் கட்டிப்பிடிச்சு, 'என் திட்டத்தை ரெண்டு பேரும் மக்கள்கிட்ட கரெக்ட்டா கொண்டுபோய் சேர்த்துட்டீங்கப்பா’னு வாழ்த்தினார்.''

''ஆரம்ப காலங்கள்ல ரஜினி உங்க மேல தனிப்பட்ட முறையில வருத்தமா இருந்தார்னு சொல்றாங்களே?''

''அதான் இல்லை. என்னைப் பார்த்து அக்கறையா விசாரிப்பார். ஏன்னா 'பெத்த ராயுடு’ படத்தை டைரக்ட் பண்ணின ரவிராஜா பின்னிசெட்டியும் சிரஞ்சீவி மச்சான் அல்லு அரவிந்தும் சென்னை தியாகராயா காலேஜ்ல படிக்கும்போது என்னோட கிளாஸ்மேட்ஸ். அவங்க ரெண்டு பேருக்குமே என்னைப்பற்றி நல்லாத் தெரியும். பின்னாளில் அவங்க ரெண்டு பேரும் ரஜினிக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். நான் காலேஜ் நாட்கள்ல சினிமா வெறியோட நாடகம், டான்ஸ், பாட்டுப் போட்டினு நம்பர் ஒன் மாணவனா வலம் வந்ததை ஒரு சந்தர்ப்பத்துல ரஜினிகிட்ட சொல்லி இருக்காங்க. ரஜினி ஆச்சர்யப்பட்டாராம். இதை ரஜினியே என்னிடம் சொன்னார்.

70கள்ல சினிமாதான் என் வாழ்க்கைனு தீர்மானம் பண்ணப்போ பாம்பேல இருந்து ஹேர்கட் பண்றதுக்குனே வரும் ஸ்டைலிஸ்ட்கிட்ட அப்போ கிராஃப் வெட்டிக்கிட்ட நாலைஞ்சு பேர்ல நானும் ஒருவனா இருந்தேன். லேட்டஸ்ட் ஸ்டைல் எது வந்தாலும் நான் அப்போ அதை இங்கே கொண்டுவருவேன். அப்போ ஒருதடவை பத்திரிகையில் ரேமண்ட்ஸ் ஷர்ட்டிங் சூட்டிங் மாடலா என்னைப் படம் பிடிச்சுப் போட்டிருந்தாங்க. எனக்கு இதை எல்லாம் பத்திரப்படுத்தி என்னை விளம்பரப்படுத்திக்கணும்னு தோணியதில்லை. இப்பவும் ரஜினியைப் பார்த்து வந்தவர் இவர்னு என்னைச் சொல்வாங்க. ரஜினியோட வளர்ச்சியைப் பார்த்து எனக்கு நானே இந்தப் பேர் வெச்சுக்கலை என்பதுதான் நிஜம். அது ரஜினிக்கும் தெரியும். 'நீங்க எனக்கு சீனியர்னு தெரியும்’னு அவரே என்கிட்ட சொல்லி இருக்கார். அவருக்கு கொடுப்பினை அப்படி இருந்தது. எனக்குக் கொடுப்பினை இப்படி. கடவுள் எனக்கு விதிச்சது இவ்ளோதான் என்பதை நான் பெருந்தன்மையா ஏத்துக்கிறேன்'' என்றவாறு,

''இப்போ 'யாமிருக்க பயமே’ படத்தைக் கன்னடத்துல ரீமேக் பண்றாங்க. அதே ரோல்ல அங்கேயும் நடிக்கிறேன். இப்போ ஹைதராபாத் போறேன்'' என்றபடி விறுவிறுவென ரஜினிகாந்த் ஸ்டைலில் நடையைக் கட்டினார் நளினிகாந்த்.

ஆர்.சரண், படம்: கே.ராஜசேகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்