அட்லி ராஜா... பிரியா ராணி! | அட்லி ராஜா... பிரியா ராணி! , அட்லி, பிரியா

வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (29/09/2014)

கடைசி தொடர்பு:17:18 (29/09/2014)

அட்லி ராஜா... பிரியா ராணி!

நிஜமான ராஜா ராணி...  அட்லியும் பிரியாவும்தான்!

இயக்குநர் அட்லி - நடிகை பிரியா ஜோடியின் நிச்சயதார்த்த போட்டோ அத்தனை சர்ப்ரைஸ் சந்தோஷம். 'இவங்க எப்பப்பா லவ் பண்ணினாங்க?’ என்று ஆளாளுக்கு ஆயிரம் கேள்விகள். அதற்கான பதிலை அட்லியிடமே கேட்போம்...

''பிரியாவை எனக்கு 'கனா காணும் காலங்கள்’ பார்க்கும்போதே பிடிக்கும். சிவகார்த்திகேயன் என் நண்பன். அவனைப் பார்க்க ஜோடி நம்பர் ஒன் செட்டுக்கு அப்பப்போ போவேன். அவன் மூலமாத்தான் நானும் பிரியாவும் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். அப்புறம் சிவகார்த்திகேயனை வெச்சு 'முகப்புத்தகம்’னு ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணேன். அதோட பிரீமியர் ஷோவுக்கு பிரியா அவங்க குடும்பத்தோட வந்திருந்தாங்க. என் குடும்பத்துல உள்ளவங்களும் வந்ததால, ரெண்டு பேரும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அப்போ இருந்தே பிரியாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க மேல எனக்கு ஒரு சின்ன லவ் இருக்குனு, பிரியாவைத் தவிர என் நண்பர்கள் எல்லாருக்கும் தெரியும். 'ராஜா ராணி’ ரிலீஸுக்குப் பிறகு ஒரு நாள் சந்திச்சுப் பேசிட்டு இருந்தோம். 'எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்கிறாங்க’னு பிரியா சொன்னாங்க. நான் சிரிச்சுக்கிட்டே, 'நான் வேணா என் ஜாதகத்தைத் தரட்டுமா?’னு கேட்டேன். முதல்ல சிரிச்சாங்க. அப்புறம்...'' என்று அட்லி கொஞ்சம் பாஸ் விட, வெட்கம் படர்கிறது பிரியாவிடம். ''அட்லி சும்மா ஜாலியாத்தான் சொல்றார்னு நினைச்சு அப்போ சிரிச்சேன். ஆனா, என்னமோ அவர் சீரியஸா கேட்ட மாதிரியும் தோணுச்சு. உடனே 'எங்க வீட்டுல வந்து பேசுங்க’னு சொன்னேன். 'உங்க வீட்டுல முன்னாடியே சொல்லிடு. அவங்களுக்கு எந்த சர்ப்ரைஸும் வேணாம். உங்க வீட்டுல 'சரி’னு சொன்னா, எங்க வீட்டுல இருந்து பெரியவங்களைக் கூட்டிட்டு வர்றேன்!’னு சொன்னார். எங்க வீட்டுல சொன்னதும், ஜாதகம் கொண்டுவரச் சொன்னாங்க. மறுநாள் நடந்தது செம காமெடி...'' என்று நினைத்துச் சிரிக்கிறார் பிரியா.  

இப்போது அட்லி டர்ன். ''மறுநாள் எங்க ஃபேமிலியோட பிரியா வீட்டுக்குப் போய் 'சார்... நான் பிரியாவை...’னு இழுக்க, 'தெரியுமே’னு சாதாரணமா சொன்னாங்க. 'சார் ஜாதகம்...’னு நீட்டினா, 'கொடுங்க’னு வாங்கிவெச்சிட்டு, எங்க வீட்டுப் பெரியவங்களோட ஊர் கதையைப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்குத்தான் ஜாதகம் கொண்டுவரச் சொல்லியிருக்காங்கனு தெரிஞ்சது. எங்க வீட்டுல எல்லாருக்கும் பிரியாவை ரொம்பப் பிடிக்கும். சொல்லிவெச்ச மாதிரி ரெண்டு வீட்லயும் ஓ.கே சொல்லிட்டாங்க'' என்று அட்லி சொல்ல, பிரியா முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

''ஆர்யா 'யூ ஆர் வெரி லக்கி’னு விஷ் பண்ணினார். ஜெய்கிட்ட 'எனக்குக் கல்யாணம்’னு சொன்னப்போ, 'என்னது உனக்குக் கல்யாணமா?!’னு பயங்கர ஷாக் ஆகிட்டார். நானும் பிரியாவும் லவ் பண்ணுவோம்னு அவர் கெஸ் பண்ணவே இல்லைபோல. பிரியா, குழந்தை மாதிரி. 'ராஜா ராணி’ படத்துல நஸ்ரியா கேரக்டருக்கு பிரியாதான் இன்ஸ்பிரேஷன். 'ஏன் என் போன்காலை எடுக்கலை?’ங்கிறதைத் தவிர, எங்களுக்குள்  வேறு எந்தச் சண்டையும் வந்தது இல்லை. இப்படி வளர்ந்த குழந்தையா இருக்கிறதால, பிரியாவை 'பாப்பா’னுதான் கூப்பிடுவேன். நான் அவங்களுக்கு ஒரு ஐபோன் வாங்கிக் கொடுத்தேன். அவங்க செலவே இல்லாம, ஒரு கிளாஸ்ல என்னை பெயின்டிங்கா வரைஞ்சுக் கொடுத்துட்டாங்க. இந்த விஷயத்துல எல்லா பொண்ணுகளும் ஒண்ணுதான்!'' என்று அட்லி கலாய்க்க, தடதடவென அட்லி முதுகில் செல்ல ட்ரம்ஸ் வாசிக்கிறார் பிரியா.  

''அட்லி ரொம்ப கேரிங். நான் தனியா வெளியே போனதே இல்லை. எங்கே போனாலும் எங்க அம்மா கூட வருவாங்க. நான் எதுவுமே கேட்க மாட்டேன். எனக்கு என்ன தேவைனு அவங்கதான் பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுப்பாங்க. அந்த மாதிரி ஒரு கேரிங் அட்லிகிட்டயும் இருக்கு!'' எனப் புன்னகைக்கிறார் பிரியா.

''அவங்க வீட்டுல எனக்கு ஏன் சம்மதம் சொன்னாங்கனு இப்போ தெரியுது. அவங்க அம்மா பாவம் பாஸ். இப்போ எனக்கு பர்ஸ் பழுக்க ஆரம்பிச்சிருக்கு!'' என்று அட்லி கண்ணடிக்க, காதைப் பிடித்து அத்தனை செல்லமாகத் திருகுகிறார் பிரியா.

நீ நடத்து ராஜா!

- பா.ஜான்சன், படங்கள்: தி.குமரகுருபரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்