ஒரு ரசிகன் உருவாகிறான்! | ஒரு ரசிகன் உருவாகிறான், சங்கர் கணேஷ், கணேஷ், ஆறுமுகம், அண்டாவைக் காணோம், அண்டாவக் காணோம், புரொடக்‌ஷன் மேனேஜர்

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (30/09/2014)

கடைசி தொடர்பு:10:20 (30/09/2014)

ஒரு ரசிகன் உருவாகிறான்!

'அண்டாவைக் காணோம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  'டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே’ என்று ஷூட்டிங் ஸ்பாட் போனால், இசையமைப்பாளர் சங்கர் கணேஷில் கணேஷினை ஜெராக்ஸ் எடுத்ததுபோல ஒருவர் தென்பட்டார். அவர்தான் படத்தின் புரொடெக்‌ஷன் மேனேஜராம்.

''என் பேர் ஆறுமுகம். மதுரை மேலூர் பக்கத்துல இருக்கிற கோழிக்குடி பட்டிதான் சொந்த ஊர்.  கூடப் பொறந்தது ஆறு பேர். 17 வயசுல என்னோட அண்ணன் சினிமாவுல சேரப்போறேன்னு மெட்ராஸூக்கு வர, நானும் வந்துட்டேன். எனக்கு சங்கர் கணேஷ் பாட்டுனா உசிரு.  ஒருநாள் அவரை தேவர் ஃபிலிம்ஸ் கம்பெனியில் பார்த்தேன். ரொம்ப எளிமையா, கோபப்படாம பழகினார்.  அவர்மேல மரியாதை இன்னும் அதிகமாச்சு. அப்போ இருந்து அவரை மாதிரியே டிரெஸ் பண்ணணும்னு எனக்குள்ள முடிவு எடுத்துக்கிட்டேன். நம்ம வேலைக்கு வொயிட் அண்ட் வொயிட் செட் ஆகாதுனு தெரிஞ்சாலும் அவர் மேல இருந்த பக்தியில தினமும் வொயிட் அண்ட் வொயிட்தான். கூடவே விரல்ல ரெண்டு மோதிரம். கழுத்துல செயின்.

(சங்கர்) கணேஷ் காஸ்ட் யூம்ல என்கிட்ட 20 செட் டிரெஸ் இருக்கு. வீட்டுல இருந்தா என்னோட மனைவி துவைச்சுடுவாங்க. ஷூட்டிங் போயிட்டா கொஞ்சம் சிரமம்தான். என் கல்யாணத்துலகூட நான் அவரை மாதிரியேதான் சட்டை, பேன்ட் போட்ருந்தேன். அதைப் பாத்துட்டு ''என்ன மாப்பிள்ளை இந்த டிரெஸ்''னு கேட்டாங்க. ''நான் சங்கர் கணேஷ் சார் ஃபேன். அதனால இப்படிதான் டிரெஸ் பண்ணுவேன்''னு சொல்லிட்டேன். தாலி கட்டுறப்போ மட்டும் வேட்டிக்கு மாறிட்டு திரும்பவும் பேன்ட். இப்பவும் வெளியிடங்களுக்குப் போகும்போதும் இதே டிரெஸ்தான்.  

எப்படியாவது ஒரு படம் தயாரிக்கணும், நான் எடுக்கிற படத்துல அவர்தான் இசையமைப்பாளர், இல்லைன்னா நான் ப்ரொடக்‌ஷன் மேனேஜரா வேலை பார்க்கிற படத்துல அவர் மியூசிக் பண்ணனும்னு கனவு வெச்சுருந்தேன். ஆனா இதுவரைக்கும் கைகூடலை.

நான் சினிமாவுக்கு வந்து 40 வருஷங்கள் ஆச்சு. 1995ல தேவர் ஃபிலிம்ஸ்ல இருந்து வெளிவந்த பின்னாடி நிறைய ப்ரொடெக்‌ஷனுக்கு மாறினாலும் என்னோட கெட்டப் மட்டும் மாறலை. சுந்தர். சி சாரோட 'அரண்மனை’ படத்துல வேலை பாத்தப்போ அவர் என்னைப் பார்த்து, ’இதே மாதிரி வொயிட் அண்ட் வொயிட் ட்ரெஸ் நானும் போடணும். எனக்கும் ஆசையா இருக்கு’னு சொன்னார். இப்போ வரைக்கும் பலபேரு என் ஒரிஜினல் பேரைச் சொல்லிக் கூப்பிடறதைவிட சங்கர் கணேஷ் பேரைச் சொல்லித்தான் கூப்பிடுவாங்க!'' என்கிறார்.

உ.சிவராமன், படம்: வீ.சக்தி அருணகிரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்