சேரிகளை இழக்கும் சென்னை! | சேரிகளை இழக்கும் சென்னை!, காக்கா முட்டை, மணிகண்டன்

வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (30/09/2014)

கடைசி தொடர்பு:19:57 (30/09/2014)

சேரிகளை இழக்கும் சென்னை!

டத்தின் டீஸர், டிரெய்லர்கூட இன்னும் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை. அதற்குள் 'காக்கா முட்டை’ படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. கனடாவில் டொரன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்திருக்கிறது படம். அந்த உற்சாகம், படத்தின் இயக்குநர் மணிகண்டனின் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறிக்கிறது...  

''உசிலம்பட்டியில் இருந்து சென்னைக்கு வந்த நாள்ல இருந்தே எனக்கு ஒரு பழக்கம்... சென்னையின் குடிசைப் பகுதிகளுக்குப் போய் விதவிதமா போட்டோ எடுத்துட்டே இருப்பேன். அப்படியே 15 வருஷங்கள் ஓடிருச்சு. இடைப்பட்ட காலத்தில் சென்னையின் முகம் முழுக்க மாறிருச்சு. முன்பெல்லாம் ஏரியாவுக்கு ரெண்டு, மூணு குடிசைப் பகுதிகள் இருக்கும். இப்போ அப்படிப் பார்க்க முடியாது. இதை நீங்க வளர்ச்சினு நினைச்சா தப்பு. யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லாம அந்தக் குடிசைப் பகுதிகளை அரசாங்கம் அப்புறப்படுத்திட்டாங்க. சென்னை மண்ணின் மைந்தர்கள் எல்லாம் இப்போ ஊருக்கு வெளியே இருக்காங்க. இங்க இருக்கும் ஒண்ணு, ரெண்டு குடிசைப் பகுதிகளும் எப்போ வேணும்னாலும் காணாமப்போகலாம். குடிசைப் பகுதிகளில் அதிகமா நான் போய் வந்ததால், 'அங்கே வாழ்ந்த குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்... அவங்க ஆசை, கனவு எல்லாம் என்ன?’னு எனக்குத் தோணின ரெண்டு கேள்விகளோட பதில்தான் 'காக்கா முட்டை’ படம்.

அவங்க வாழ்க்கையில் கேலி, கிண்டல், கொண்டாட்டம் எல்லாம் உச்சத்துல இருக்கும். அதை அப்படியே இயல்பா பதிவுபண்ண நினைச்சேன். காசிமேடு பகுதியில் இருந்தப்ப ரமேஷ், விக்னேஷ்னு ரெண்டு பசங்களைப் பிடிச்சேன். படத்தில் ரமேஷ், சின்ன காக்கா முட்டை; விக்னேஷ், பெரிய காக்கா முட்டை. அப்படி ஆறு பசங்களை வெச்சு 60 நாட்கள்ல எடுத்த படம் இது.  

சேரிப் பசங்க ஒரு நாள் முழுக்க குப்பை பொறுக்கிக் கொடுத்தா... 10, 15 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதை வெச்சு அவங்க ஆசைகளை எப்படி நிறைவேத்திக்குவாங்க? உலகமயமாக்கல் நம்ம லைஃப்ஸ்டைலையே மாத்திருச்சு. பீட்சா, கே.எஃப்.சி சிக்கன்னு சாப்பிடுற சாப்பாட்டையும் மாத்திருச்சு. ஆனா, சேரிப் பசங்க அந்த மாற்றங்களை சும்மா வேடிக்கை பார்த்துட்டு கடந்துபோவாங்களா? இல்லை அதை அனுபவிக்க முயற்சி பண்ணுவாங்களா? இப்படி சேரிச் சிறுவர்கள் வாழ்க்கையில் உலகமயமாக்கல் ஏற்படுத்துற தாக்கம்தான் கதை.

படத்தில் ஒரு சிறுவனோட அப்பா சிறையில் இருப்பார். அவரோட மனைவி போய் அவரை சிறையில் பார்ப்பாங்க. படம் முழுக்க அந்தப் பையனோட அப்பா என்ன காரணத்துக்காக சிறையில் இருக்கிறார்னு குறிப்பே இருக்காது. 'உங்கப்பா எதுக்குடா ஜெயில்ல இருக்காரு?’னு  அந்தப் பையன்கிட்ட கேட்டா, ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு 'தெரியாது’னு சொல்வான். எதுக்கு சிறையில் இருக்கோம்னு தெரியாமலேயே, அவர் ஜெயில்ல இருக்கலாம். அல்லது இதுதான்னு குறிப்பிட்ட ஒரு காரணம் இல்லாம பல காரணங்கள் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவர் ஜெயில்ல இருக்கிறதுக்குக் காரணம் அவர் பிறந்த சேரி.

டொரான்டோ பட விழாவில் படம் ஸ்கிரீனிங் முடிச்சதும் பார்வையாளர்களிடம் அவ்ளோ நெகிழ்ச்சியான வரவேற்பு. அந்தச் சந்தோஷத்திலும் ஒரு சின்ன வருத்தம்... அந்தப் பட விழாவுக்கு ரமேஷ், விக்னேஷ் ரெண்டு பசங்களையும் கூட்டிட்டுப் போக நினைச்சோம். ஆனா, பசங்களுக்கு பாஸ்போர்ட் எடுக்க முடியலை. ஏன்னா, ரெண்டு பேர் குடிசைக்கும் வீட்டு எண் இல்லை. யாருமே கவனிக்காத, கவனிக்க விரும்பாத ஒரு சமூகம் பத்தி ஒரு சின்ன ஜன்னலைத் திறந்துவெச்சிருக்கேன்னு நினைக்கிறேன். அது வழியாப் பார்த்துக்கூட நாம அவங்களை, அவங்க வாழ்க்கையைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம்!''

 

- டி.அருள் எழிலன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்