“புரட்சிப் புயல் பாலு... கெட்டப் பய எமலிங்கம்!” | புறம்போக்கு, ஜனநாதன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா, பாலு, எமலிங்கம், “புரட்சிப் புயல் பாலு... கெட்டப் பய எமலிங்கம்!”

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (03/10/2014)

கடைசி தொடர்பு:16:52 (03/10/2014)

“புரட்சிப் புயல் பாலு... கெட்டப் பய எமலிங்கம்!”

''ஒருசிறைச்சாலைங்கிறது, வெறுமனே குற்றவாளிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் மட்டுமே இருக்கிற இடம் கிடையாது. நம் சமூக - வரலாற்று மாற்றங்கள், சிறைக் கதவுகளின் வழியேதான் அரங்கேறி இருக்கு. காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற பல தலைவர்கள் சிறையில் இருந்த காலம்தான் அந்தந்தத் தேசங்களின் விடுதலையைத் தீர்மானிச்சது. நாட்டின் தலையெழுத்தை, வரலாற்றைத் தீர்மானிப்பதில் சிறைக்குத்தான் முதல் இடம்!'' - 'புறம்போக்கு பொதுவுடைமை’ படத்துக்காகப் போடப்பட்ட சிறை செட் புகைப்படங்களைப் பார்த்தபடியே பேசுகிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். ஆர்யா - விஜய் சேதுபதி கூட்டணியில்... ஷாம், கார்த்திகா எனக் கூடுதல் நட்சத்திரங்களோடு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இயக்கிக்கொண்டிருந்தார்.

''இந்தக் கதையில் சிறைக்கு ரொம்பப் பெரிய முக்கியத்துவம் இருக்கு. சிறை என்பது வேறு உலகம். சிறைக்குள்ள நூலகம், மருத்துவமனை, தொழிற்கூடம்... ஏன்... சுடுகாடுகூட இருக்கு.  ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, 'இதுவரை சுதந்திர இந்தியாவில் 54 கைதிகளைத் தூக்குல போட்டுருக்கிறதா செய்திகள் படிச்சிருப்பீங்க. ஆனா நான் பொறுப்புல இருந்த காலகட்டத்துல, வெளியே செய்தியா எதுவும் வராமல் எங்க சிறையில் மட்டும் 12 தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. இப்படி இந்தியா முழுக்க வெளியே தெரியாமல், அரசியல் காரணங்களுக்காக, குறைஞ்சது 2,000 பேரையாவது தூக்குல போட்டிருப்பாங்க’னு சொன்னார். 'தூக்குக்குத் தூக்கு’ங்கிற புத்தகத்துல 1957-ல் இருந்து 10 வருடங்களில் 1,447 பேர் தூக்கிலிடப்பட்டதா ஆதாரங்களோட ராதாகிருஷ்ணன் என்பவர் எழுதியிருக்கார். அதைப் படிச்சப்போ எனக்கு பகீர்னு இருந்துச்சு.''

''படத்தோட பேர் 'புறம்போக்கு’தானே... எப்போ 'பொதுவுடைமை’ சேர்ந்துச்சு?''

''இங்கே புறம்போக்குனு எதுவுமே இல்லையே. எல்லாமே பொதுநிலம்தான். மக்கள் தங்கள் வசதிக்குத் தகுந்த மாதிரி விளைச்சல் புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு, பாசனப் புறம்போக்குனு 15-க்கும் மேற்பட்ட புறம்போக்கு நிலங்களைப் பயன்படுத்தியிருக்காங்க. அதன்படி புறம்போக்கு என்பது ஊருக்கு பொதுவுடைமை. அந்த அர்த்தத்தில்தான் டைட்டிலை 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’னு மாத்தினோம்!''

''டைட்டில் வித்தியாசமா, கனமா இருக்கே..?''

''டைட்டிலுக்கே இப்படிச் சொன்னீங்கனா... படத்துல ஒவ்வொரு கேரக்டர் பேருக்குமே இப்படி ஒரு கதை இருக்கு. படத்துல ஆர்யா கேரக்டர் பேரு பாலு. நிஜ பாலு யாருனா, மதுரையில் பிறந்து ஆந்திராவில் போலீஸா வேலை பார்த்தவர். தெலங்கானா பிரச்னை வெடிச்சப்போ, தெலங்கானா மக்களுக்கு எதிரா துப்பாக்கியைத் தூக்கியவர். ஆனா, மக்கள் பக்கம் நியாயம் இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டு, போலீஸ் வேலையை விட்டுட்டு, மக்களோடு சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிச்சார்.  பிரிட்டிஷ் இந்தியாவால் குற்றம் சாட்டப்பட்டு, சுதந்திர இந்தியாவால் தூக்கில் போடப்பட்ட முதல் நபர் பாலு. அவர் நினைவா ஆர்யா கேரக்டருக்கு அந்தப் பேர். கார்த்திகா கேரக்டர் பேரு குயிலி. அது வேலு நாச்சியாரோட படைத் தளபதி பேர். அவங்க உடம்புல வெடிமருந்து கட்டிக்கிட்டு ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கைத் தகர்த்தவங்க. அப்படிப்  பார்த்தா, உலகின் முதல் தற்கொலைப் பெண் போராளி குயிலிதான். விஜய் சேதுபதி கேரக்டர் பேரு எமலிங்கம். எத்தனையோ லிங்கம் பார்த்திருப்பீங்க... ஆனா, இந்த எமலிங்கம் மாதிரி பார்த்திருக்க மாட்டீங்க. நீங்க என்ன எதிர்பார்த்தாலும் அதுக்கும் மேல கெட்ட சேட்டைக்காரன். ஷாம் கேரக்டர் பேரு மெக்காலே. இந்தியக் கல்வித் திட்டத்தையும், தண்டனைச் சட்டத்தையும் வடிவமைச்சவர். எல்லா இந்தியர்களையும் இங்கிலாந்து மனநிலைக்கு ஆதரவா மாத்தும் 'கறுப்பு உடம்பு - வெள்ளை மூளை’ சித்தாந்தத்தில் உறுதியா இருந்து அமல்படுத்தியவர். இவங்களுக்கு இடையிலான அன்பும் அடிதடியும்தான் படம்!''

''வில்லன் வேட்டை, ஜாலி சேட்டைனு இருக்கிற 'தமிழ் சினிமா ஹீரோ’க்களை உங்க படத்துல மட்டும் ஆளையே மாத்துறீங்களே... ஏன்?''

''வில்லனா..? உண்மையைச் சொல்லணும்னா, தமிழ் சினிமாவில் இப்போ வில்லனுக்குத்தான் பஞ்சம். யாரை வில்லனாக் காட்டுறதுனு யாருக்குமே தெரியலை. முன்பெல்லாம் அப்பாவைக் கொன்னவன், அம்மாவைக் கெடுத்தவன், வீட்டை இடிச்சவன் எல்லாருமே வில்லன். ஹீரோ வளர்ந்து வந்து பழிவாங்குவார். ஆனா, இப்பவும் அந்த மாதிரி ஆட்கள்தான் நிஜ வாழ்க்கையில் நமக்கு வில்லனா இருக்காங்களா என்ன? இப்போ வில்லன் நம்ம கண்ணுக்குத் தெரியாம கிருமி மாதிரி இருங் காங்க. மெக்காலே உருவாக்கிய கல்வி அமைப்பு ஒரு வில்லன். அதை எதிர்த்து யாராவது போராடியிருக்கோமா? அவர் உருவாக்கிய இந்தியத் தண்டனைச் சட்டத்துக்கு இதுவரை இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவே இல்லை. ஆனா, அதுல சட்டத் திருத்தம் கொண்டுவரணும்னா மட்டும், ஒண்ணு கூடித் தீர்மானம் போடுறாங்க. இப்படி நம்ம வாழ்க்கையை நமக்கே தெரியாம கட்டுப்படுத்தும் விஷயங்கள்தான் நிஜ வில்லன். அதை எதிர்த்து என் ஹீரோக்கள் போராடுறாங்க.

ஆனா, என் பட ஹீரோக்களோட சேட்டை தாங்கலை. அவங்களுக்கு நான்தான் வில்லன் போல. ஒருநாள், 'சார் வாங்க ஒரு போட்டோ எடுக்கலாம்’னு ஆர்யா கூப்பிட்டார். என்னை நிக்கவெச்சுட்டு மூணு பேரும் சுத்தி நின்னுக்கிட்டாங்க. படத்தை க்ளிக் பண்ணும்போது, படார்னு மூணு பேரும் பணிவா தோள்ல கைவெச்சுக் குனிஞ்சுக்கிட்டாங்க. 'யோவ்... என்ன இப்படிப் பண்ணிட்டீங்க?’னு கேட்டா, ''நடிகர்களைக் கொடுமைப்படுத்தும் இயக்குநர்’னு கேப்ஷன் கொடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர்ல போடணும். அதுக்குத்தான் இந்தப் படமே எடுத்தோம்’னு ஜாலியா மிரட்டுறார் ஆர்யா. அந்த போட்டோதான் விகடன் 'வலைபாயுதே’ பகுதியில் வந்துச்சு!''

 

- எஸ்.கலீல்ராஜா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்