Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என் இனிய கதைநாயகிகள்! தனது படங்களின் நாயகிகள் குறித்து இயக்குநர் விசு!

காலத்தால் அழியாத திரைப்படங்களில் சிலவற்றை ஒரு மீள்பார்வை பார்த்தால், அதில் கதைநாயகியின் பாத்திரப் படைப்பில் ஆளுமை இருக்கும். ஆண்களுக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்... எனும் ஹீரோ வரிசை இருப்பதுபோல... பெண்களுக்கும் சாவித்திரி, சரோஜாதேவி, ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி என்று ஹீரோயின் வரிசை உண்டு!

பத்மினி போல் ஆடுவது, ஸ்ரீவித்யா போல புன்னகைப்பது, நதியா போல் கொண்டை போடுவது, ஸ்ரேயா போல் ஸ்லிம் உடம்புக்கு மெனக்கெடுவது என புறத்தோற்றம் மட்டுல்லாது... ராதிகா போல் படபடவெனப் பேசுவது, சுஹாசினி போல் உரிமைக்காக போராடுவது என குணத்திலும் அந்தத் திரைநாயகிகளின் பாதிப்பை வெளிப்படுத்தும் பெண்கள் பலர். அந்தளவுக்கு அந்த கதாபாத்திரங்கள் ரசிக்கக் கூடியதாக, பலரின் மனதைப் புரட்டிப்போடக் கூடியதாக இருக்கும். அப்படி திரும்பிப் பார்க்க வைத்த கதாநாயகிகள் பற்றி, அவர்களை உருவாக்கிய இயக்குநர்கள் உங்களுடன் பேசினால்..? 'என் இனிய கதைநாயகிகள்’ தொடராக இருக்கும்!

பெண்களை திரையில் அழியாத கோலங்களாக நிறுத்திய இயக்குநர்கள், தங்கள் நாயகிகள் பற்றி இதழ்தோறும் பேசப்போகிறார்கள்!

முதற்படியாக, பல குடும்பச் சித்திரங்களைப் படைத்த இயக்குநர் விசு, தன் திரைப்படங்களின் நாயகிகள் பற்றிப் பகிர்கிறார்!

''நான் கடந்து வந்த அனுபவங்களைத்தான் என் திரைப்படங்களுக்கான கதைக்களமா, கதாபாத்திரங்களா மாற்றினேன். மறக்க முடியாத என் கதாநாயகிகள்ல 'சம்சாரம் அது மின்சாரம்’ படத்துல வர்ற லட்சுமி ஏத்து நடிச்ச 'உமா’ கேரக்டருக்கு முதல் இடம். உறவு களை அனுசரிச்சு நடக்குற அந்தப் பொண்ணு 'உமா’, எனக்கு எப்படிக் கிடைச்சா தெரியுமா?

பொதுவா, ஒரு நிஜ கேரக்டரை வெச்சு, நிழல் கேரக்டரை உருவாக்கறது ஒரு வகை. ஒரு கேரக்டரைப் பார்த்து, இப்படி ஒரு கேரக்டர் இருக்கவே கூடாதுனு நினைச்சு, அதற்கு எதிர்மறையான கேரக்டரை உருவாக்குறது இன்னொரு வகை. இதில் ரெண்டாவது வகையில் வந்தவதான் 'உமா’. அந்த நிஜ, நெகட்டிவ் கேரக்டர் 'உமா’, என் உறவுக்காரப் பெண். அவங்கதான் அந்த வீட்டுக்கு மூத்த மருமக. ஆனா, அந்தப் பெண்ணுக்கு மாமனார், மாமி யார் மேல மரியாதை இல்லை. மச்சினர்களையும் கேவலமா நடத்துவாங்க. நாத்தனாரைக் கண்டாலே எரிஞ்சு விழுவாங்க. அவ்ளோ ஏன்... புருஷன், பிள்ளைகிட்டகூட கனிவா இருக்க மாட்டாங்க. தான் சொல்றதைத்தான் எல்லாரும் கேட்கணும்ங்கிற அகம்பாவம். ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ, அப்படி எல்லாம் இருந்தாங்க.

அந்தப் பெண்ணால அந்தக் கூட்டுக்குடும்பமே உடைஞ்சு சின்னாபின்னமானது. அப்போ, 'இந்தப் பொண்ணு மட்டும் பொறுப்பான, அன்பான மருமகளா இருந்திருந்தா, குடும்பம் ஊர் மெச்ச வாழ்ந்திருக்குமே’னு தோணுச்சு. அதேவேகத்துல, அதுக்கு நேரெதிர் குணத்தோட ஒரு கதாபாத்திரம் இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். உருவானா... 'உமா’.

க்ளைமாக்ஸில் உமா பேசுற வசனம், காலத்தால் அழியாதவை. பிரிஞ்ச குடும்பம் ஒண்ணா சேர்ற தருணத்தில், யாருமே எதிர்பார்க்காத விதமா பேசுவா...

'கூட்டுக்குடும்பம்ங்கிறது ஒரு நல்ல பூ மாதிரி. அதைக் கசக்கிட்டோம்... அப்புறம், மோந்து பார்க்கக் கூடாது... அசிங்கம். இப்படியே... ஒரு அடி விலகி நின்னு, நீ சௌக்கியமா... நான் சௌக்கியம். நீ நல்லாயிருக்கியா... நான் நல்லாயிருக்கேன். பண்டிகை, நாளு, கிழமை எல்லாரும் ஒண்ணா சேர்ந்துக்கலாம். ஒரு நட்போட, அது நல்லாயிருக்கும். அதை விட்டு, மறுபடியும் ஒண்ணா வந்துட்டோம்னா... ஏதாவது வாய் வார்த்தை, தகராறு, சண்டைனு வந்தா... அதை தாங்கிக்கிறதுக்கு மனசுலயும் சக்தி இல்ல... உடம்புலயும் சக்தி இல்ல...'

'வரவு நல்ல உறவு’ படத்துல வர்ற 'உமா'வும் (ரேகா) என் மனம் கவர்ந்த கதைநாயகி. தாமரை இலை தண்ணீர் போல உறவுகள் ஒருத்தருக்கொருத்தர் ஒட்டாத குடும்பம். அதில் நுழையும் 'உமா’,  அங்க இருக்கிறவங்களுக்கு எல்லாம் உறவின் அருமையை எப்படிப் புரிய வைக்கறாங்க என்கிறதுதான் விஷயமே.

     

குடும்பத்தில் இருக்கறவங்க சாப்பிட்ட சாப்பாட்டுக்குக்கூட அவகிட்ட காசு தருவாங்க. உறவின் அருமை தெரியாத மாமனாருக்கு ஒரு முறை உடம்பு சரியில்லாமல் போகும். கஷாயம் வெச்சுக் கொடுத்து... ரசம் சாதம் தருவா 'உமா’. கடைசியில் மாமனார் அந்த சேவைக்கும், 'பிடி நூறு’னு கொடுத்துட்டுப் போவார். இப்படி ஒட்டுறவில்லாத மாமனார், கடைசியில் பணத்துக்காக மருமகளும் மகனும் தன்னோடு இருக்கறதா... நண்பரிடம் சொல்றத கேட்டு உடைஞ்சு போவா. வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தந்துட்டு, தனக்கு சொத்தும் வேணாம் ... ஒண்ணும் வேணாம்னு சொல்வா உமா. 'என் மகன்கூட என்னுடைய சொத்துதான், அவனை மட்டும் உன் பெயருக்கு பின்னால போட்டு வெச்சுருக்கியே..? அப்படீனா என் மகனையும் விட்டுத் தருவியா’னு கேட்பார் மாமனார். அதுக்கு, 'உங்க மகனை நீங்க பிள்ளையா ஏத்துக்கறதா இருந்தா, உங்களுக்கே விட்டுத் தரேன்!’னு உமா சொல்ல, அதிர்ந்து போவார் மாமனார். கடைசியில் மருமகளின் மகிமை உணர்ந்து உறவுகளோடு பிணைந்து போவார். இந்தக் கதை அச்சில் வார்த்தது போல் என் நண்பன் குடும்பத்தில் நடந்தது.

டுத்த படம், 'திருமதி ஒரு வெகுமதி’. அந்தப் படத்துல வர்ற அக்கா கேரக்டர் 'உமா’ (கல்பனா), வேற யாருமில்ல... என்னோட மனைவிதான். அவளோட தம்பி மேல அவளுக்கு அவ்வளவு பாசம். நான் மாடியில இருப்பேன். அவளும் அவ தம்பியும் கீழ சண்டை போட்டுட்டு இருப்பாங்க. நான் அஞ்சு படிக்கட்டு தாண்டி ஆறாவது படிக்கட்டு இறங்கும்போதே, சண்டை சமரசமாகி பேசிட்டு இருப்பாங்க. அந்த அளவுக்கு ரெண்டு பேருமே போட்டி போட்டு பாசத்தைப் பரிமாறிக்குவாங்க. அந்த பாசத் தாக்கம்தான், 'உமா’ அக்கா. கூடப் பிறந்த தம்பிங்களுக்காக தன்னையே தியாகம் செய்யும் நிஜ அக்காக்கள் நிறைய பேர் இருக்காங்க. இது, அவங்களுக்கெல்லாம் நான் அர்ப்பணிச்ச படம்!

சரி, என் கதையோட நாயகிகள் எல்லோருக்குமே 'உமா’னு பேரு வெச்சுருக்கேனே... அந்தப் பேருக்கு பின்புலம் யாருனு உங்களுக்குச் சொல்லவா..?

நான் முதல் முதலா ஒரு கதை எழுதினேன். அந்தக் கதையைப் படிச்சுப் பார்த்துட்டு, 'நீ நல்லா வருவடா விசு!’னு என்னை வாயார வாழ்த்தின என் மதிப்புக்குரிய ஒரு பெண்மணியோட பேருதான், உமா. அவங்களுக்கு மரியாதை செய்ற விதமாதான் என்னோட கதை, திரைப்படங்கள் எல்லாத்துலயும் நாயகிக்கு 'உமா’னு பேர் வெச்சேன்.

இன்னொரு விஷயமும் இருக்கு. என் அன்புக்குரிய மனைவி பேரு சுந்தரி. ஆனா, 'உமா’ங்கிற பேரு மேல நான் வெச்சுருக்கிற மரியாதையால, அவங்களையும் 'உமா’னே கூப்பிட ஆரம்பிச்சேன். இப்போ உமாவாவே மாறிட்டாங்க. படங்கள்ல மட்டுமில்ல, நிஜத்திலும் உமா என் ஆதர்ச நாயகி!

எனக்கு மூணுமே பெண் குழந்தைகள். அவங்கதான் என் உலகம். அவங்க பிறந்த பிறகுதான், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை எடுக்க ஆரம்பிச்சேன். என்னைப் பொறுத்தவரைக்கும், என்னோட படம் ஆண்களிடம் தோற்றுப் போனா கவலைப்பட மாட்டேன். ஆனா, பெண்கள் மத்தியில் தோற்றுப் போனா ரொம்ப வருத்தப்படுவேன். இதுவரைக்கும் அப்படி வருத்தப்படற வாய்ப்பே வரல..!''

 

சந்திப்பு: பொன்.விமலா  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்