'மைய்ல்' டாக்டரை மறக்க முடியுமா? | 'மைய்ல்' டாக்டரை மறக்க முடியுமா? , சமீர்கான், ஶ்ரீதேவி, ரஜினி, கமல்ஹாசன், பாரதிராஜா, கவுண்டமணி

வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (08/10/2014)

கடைசி தொடர்பு:12:19 (08/10/2014)

'மைய்ல்' டாக்டரை மறக்க முடியுமா?

நெடுநெடு உயரம், பெல் பாட்டம் பேன்ட், பெரிய கண்ணாடி, மயிலை 'மைய்ல்.. மைய்ல்..’ என உச்சரிக்கும் தமிழ் என, '16 வயதினிலே’ டாக்டரை மறக்க முடியுமா? அப்போது அவருடன் நடித்த ரஜினி, கமல், தேவி, கவுண்டமணி என அத்தனை பேரும் டாப் டக்கர் கியர்களில் எகிறிவிட, சமீர்கான் மட்டும் சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

''ஆக்சுவலா என் முதல் படம் '16 வயதினிலே’ கிடையாது. நான் அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ கோர்ஸ் படிச்சேன். ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போதே சிவாஜி, ஜெமினி, கமல் சேர்ந்து நடிச்ச 'நாம் பிறந்த மண்’ படத்துல எனக்கும் வாய்ப்பு கிடைச்சது. என்னோட ஃபர்ஸ்ட் ஷாட்லேயே சிவாஜி சார்கூட நடிச்சது மறக்க முடியாதது. அதுக்கப்புறம் ஆக்ட்டிங் கோர்ஸை முடிச்சேன். அப்போ ஒரு நாளிதழ்ல என்னைப்பத்தி செய்தி வந்துச்சு. அதைப் பார்த்துட்டு '16 வயதினிலே’ படத் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு சார், கலைமணி சார், ஸ்டில் போட்டோகிராஃபர் லெட்சுமிகாந்தன் இவங்கள்லாம் என்னை அவங்க ஆபிஸூக்கு வரவெச்சுப் பார்த்தாங்க. அந்த சமயம் '16 வயதினிலே’ ஷூட்டிங் கர்நாடகாவுல போய்ட்டிருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்லதான் முதன்முதலா பாரதிராஜா சாரைப் பார்த்தேன். எனக்கு தமிழ் தெரியலை, அவருக்கு இங்கிலீஷ் தெரியலை. ஆனா என்னைப் பார்த்ததும் தன்னோட அசிஸ்டென்ட்ஸ்கிட்ட, 'எங்கேருந்துய்யா இவன் வந்தான்..? இவ்ளோ நாள் தேடிட்டு ருக்கோம். இவன் அப்படியே அந்த டாக்டர் மாதிரியே இருக்கானேய்யா’னு சொல்லியிருக்கார். முதல் நாள் ராத்திரி அங்கே போறேன். மறுநாள் விடியற்காலையில எனக்கு ஷாட். ராத்திரியோட ராத்திரியா எனக்கு ஒய்ட் அண்ட் ஒய்ட் டிரெஸ் தெச்சாங்க. அந்த கிராமத்துல இருந்த ஒரு சின்ன ஆப்ட்டிகல்ஸை நடுராத்திரி திறக்கவெச்சு கண்ணாடியை செலக்ட் பண்ணினாங்க. அதுதான் நான் படத்துல போட்டிருந்த அந்தப் பெரிய கண்ணாடி. படத்துல கிராமத்துல நான் என்ட்ரி ஆகிற ஷாட்தான் என்னோட முதல் ஷாட். படத்துல டப்பிங்கும் நானே பேசினேன். என்னோட தப்புத் தமிழ் உச்சரிப்பே அந்த கேரக்டருக்கு பெரிய ப்ளஸ் ஆச்சு.''

'' '16 வயதினிலே’ படத்துக்கு அப்புறம் என்னாச்சு..?''

'' படம் ரிலீஸாகி நல்லா ஓடிட்டிருந்த நேரத்துல எனக்கு ஒரு இந்திப் பட சான்ஸ் கிடைச்சு, அங்கே போய்ட்டேன். அந்தப் பட ஷூட்டிங் மூணு வருஷம் போச்சு. அந்த மூணு வருஷத்துல இங்கே எல்லோரும் என்னைத் தேடியிருக்காங்க. வரிசையா தமிழ், தெலுங்குனு நிறைய சான்ஸ் வந்திருக்கு. ஆனா, இப்போ இருக்கிற மாதிரி தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால, என்னை கான்டக்ட் பண்ண முடியாமல் அந்த வாய்ப்புகள் எல்லாம் போயிருச்சு. அந்த மூணு வருஷ இடைவெளியில எல்லோரும் என்னை மறந்தே போயிட்டாங்க. அப்படியும் நான் திரும்ப சென்னைக்கு வந்து 'குப்பத்து பெண்’,  'ஏழாவது மனிதன்’ 'ஜோதி’, 'தூரத்துப்பச்சை’ 'பிக்பாக்கெட்’ சமீபத்தில் ரிலீஸான 'ஹரிதாஸ்’ வரைக்கும் தமிழ்ல 45 படங்கள் பண்ணிட்டேன். இதுபோக 'கோகிலா எங்கே போகிறாள்’ போன்ற சில சீரியல்கள் பண்ணியிருக்கேன். 'ஹேராம்’ 'அஞ்சான்’ மாதிரியான பெரிய படங்கள்னா டப்பிங் பேசுறேன். இப்போ கார்த்திக்னு ஒரு அறிமுக இயக்கு நரோட படம் உட்பட சில படங்கள்ல நடிக்கிறேன்.''

''ரஜினி, கமல்,  தேவி இவங்கள்லாம் இன்னைக்கு இந்தியோவோட ஐகான்களா இருக்காங்களே... அவங்களை அப்படிப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கு, அவங்களோட இன்னும் தொடர்புல இருக்கீங்களா..?''

''நிச்சயமா இவ்ளோ பெரிய உயரத்துக்கு வருவாங்கனு நான் எதிர் பார்க்கலை. எல்லாமே சந்தர்ப்பங்கள்தான் காரணம். அப்படி எனக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சிருந்தா, இன்னைக்கு நானும் ஒரு ஸ்டார். கமலை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும்போதிலிருந்தே பழக்கம். அவரை நான் அப்போ பார்த்ததிலிருந்து இப்போ வரைக்கும் அதே மாதிரி தான் பழகுறார். எங்கே பார்த்தாலும் கூப்பிட்டுக் கொஞ்ச நேரம் பேசிட்டுத்தான் போவார். இடையில 'ஹேராம்’ படத்தோட பப்ளிசிட்டிக்கு கூப்பிட்டார். இந்தியா முழுக்க என்னோட வாய்ஸ்லதான் அந்த படத்தோட பப்ளிசிட்டி வந்துச்சு. அந்தப் படத்துல ஒரு கேரக்டரும் கொடுத்தார்.

ரஜினிகூட '16 வயதினிலே’ ஷூட்டிங்ல பேசினதுதான். இப்போ சமீபத்துல '16 வயதினிலே’ ரீரிலீஸ் ஃபங்ஷன்ல பார்த்தப்போ, 'ஹாய் பாய்...’னு சொன்னார். அவ்ளோதான்.''

''பெருசா வர முடியலையேங்கிற வருத்தம் உண்டா?'

'சினிமாவுல உழைப்பைவிட சில எக்ஸ்ட்ரா குணநலன்களும் தேவை. அது எங்கிட்ட இல்லை. ஆனா, கடவுள் புண்ணியத்துல நான் நல்லாயிருக்கேன். பொதுவா யாரையும் நான் தேடிப் போக மாட்டேன். என்னைத் தேடி வர்ற வாய்ப்புகளே போதும்னு நெனைப்பேன். சினிமாவில் மனசிலேர்ந்து பேசுறவங்க ரொம்ப கம்மி. ஒரு தடவை அமிதாப் சார் சொன்னார், 'என்னோட முதல் படத்துல என்கூட ஒரு மிகப் பெரிய நடிகர் நடிச்சார். அவர் மேல இருந்த பயத்துல டயலாக்கை தப்பாப் பேசித் திட்டு வாங்கினேன். ஆனா அதே படம் ஹிட் ஆனதுக்கு அப்புறம் நான் என்ன டயலாக் பேசுறேனோ, அதுதான் டயலாக்னு ஆச்சு’னு சொன்னார். அதுதான் சினிமா. என்னை பேட்டி எடுக்கிற நீங்க, '16 வயதினிலே’ படத்தை அடையாளமா வெச்சு என்னை பேட்டி எடுக்குறீங்க. அதைவிட எனக்கு வேற என்ன பெருமை வேணும்? அந்த ஒரு படத்துல நடிச்சதே எனக்கு போதும் சார்!'

அருண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்