தங்க அரசியல்!


 

'' 'சோறு போடுற நிலத்தை இப்படிக் கூறு போடுறியே? நாளைக்கு உன் புள்ளை சோத்துக்கு என்னய்யா பண்ணும்?’னு ஹீரோ செந்தில் பேசுற காட்சியைப் பார்த்துட்டு, பாலாஜி சக்திவேல், சேரன், சீமான் மூணு பேரும் மனம்விட்டுப் பாராட்டினாங்க. ரிலீஸ் ஆனதும் முழு படத்தையும் பார்த்துட்டு நிச்சயம் பாராட்டுவாங்க'' - சின்னச் சிரிப்போடு பேசுகிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம். பாரதிராஜாவிடம் சினிமா கற்றவர். இவர் இயக்கிய 'வெண்நிலா வீடு’, விரைவில் திரையில் நிழலாட இருக்கிறது.

'''வெண்நிலா வீடு’ எப்படிப்பட்ட படம்?''

''நடுத்தரக் குடும்பம் பற்றிய படம். பொன் மீதான ஈர்ப்பு, மண் மீதான பேராசை, பெண் மீதான அவமதிப்பு இந்த மூணையும் மையப்படுத்திய படம்தான் 'வெண்நிலா வீடு’. கிராமப்புறத்துல இருக்கிறவங்க, அந்த இயற்கையை ரசிச்சு வாழ்வாங்க. நகர்ப்புறத்துல பிறந்து வளர்ந்தவங்க, எந்த ஏற்றத்தாழ்வு இருந்தாலும் எந்தத் தயக்கமும் இல்லாம வாழ்ந்திட்டு இருப்பாங்க. ஆனா, கிராமப்புறத்துல இருந்து நகர்ப்புறத்துக்கு இடம் பெயர்ந்தவங்க வாழ்க்கை வேற மாதிரி இருக்கும். அதில் நிறையச் சிக்கல், நெருக்கடி, மன உளைச்சல், பொருளாதாரப் பிரச்னை வரும். அப்படி ஒரு கதைதான் இது!''

''இப்போ உள்ள டிரெண்டில் ஒரு குடும்பப் படமா?''

''சினிமா, ஒவ்வொரு நாளும் மாறிட்டே இருக்கு. ஆனா, நம்ம வாழ்க்கையும் குடும்ப அமைப்புகளும் இன்னும் அப்படியேதான் இருக்கு. மிகச் சாதாரணமான ஒரு குடும்பம், வாங்கிட்டுப் போற இரவல் நகையால் பல பிரச்னைகளைச் சந்திக்குது. அந்த அவமானத்தால கூனிக் குறுகிப்போற அந்தக் குடும்பம், அடுத்தடுத்து என்ன செய்யுதுங்கிறதுதான் கதை.

ஒரு இடத்தில் எந்தத் தப்புமே செய்யாத ஒரு பொண்ணு, 'என்னை நம்புங்க... என்னை நம்புங்க. நான் உண்மையானவ. யாரையும் ஏமாத்தலை’னு நெஞ்சுல அடிச்சுக்கிட்டுக் கதறினதைப் பார்த்தேன். அந்த வலியையும் வேதனையையும் இந்தப் படத்துல பதிவு பண்ணிருக்கேன். எதையும் சரியாச் சொன்னா மக்கள் ரசிப்பாங்க. இந்தப் படம் பார்க்கிறவங்க, நகை மேல இருக்கிற ஆசையையே விட்டுடுவாங்க. அந்தளவுக்குத் தங்கத்தை வெச்சு நடக்கிற அரசியலைச் சொல்லியிருக்கோம்!''

- க.நாகப்பன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!