Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நட்புக்கு நங்கூரம் பாய்ச்சும் கப்பல்!

'' 'சார் படத்தோட ஒன்-லைன் இதுதான், தயாரிப்பாளர் கிடைச்சுட்டார், படம் ஆரம்பிச்சுட்டேன்’னு என் குரு ஷங்கர் சாருக்கு அப்டேட் பண்ணிட்டே இருப்பேன். படம் முடிஞ்சதும் அவருக்குத்தான் முதல்ல ஸ்க்ரீன் பண்ணணும்னு ஆசை. சார்கிட்ட சொன்னேன். 'ஐ’ வேலைகள் பரபரப்பா இருந்த சமயத்திலும் நேரம் ஒதுக்கினார். படம் ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிஷத்துல இருந்து சிரிக்க ஆரம்பிச்சவர், ரோலிங் டைட்டில் முடியிற வரை சிரிச்சுட்டே இருந்தார். 'ரொம்ப நல்லாப் பண்ணியிருக்க. எப்ப ரிலீஸ்?’னு சில விவரங்கள் கேட்டார். 'உங்களுக்கு ரிலீஸ் பண்ற ஐடியா இருக்கா சார்?’னு கேட்டேன். 10 நாள் கழிச்சு, 'படத்தை நானே ரிலீஸ் பண்றேன் கார்த்திக்’னு தகவல் சொன்னார். முதல் பட ரிலீஸ் சந்தோஷத்தைவிட குரு மனசுல திருப்தியை உண்டாக்கின ஆனந்தம் அதிகமா இருக்கு!'' - சிரிக்கிறார் கார்த்திக் G.க்ரிஷ். 'சிவாஜி’, 'எந்திரன்’ படங்களில் இயக்குநர் ஷங்கரிடம் சினிமா படித்தவர். இவர் இயக்கிய 'கப்பல்’ படத்தை, நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்’ வெளியிட இருக்கிறது.

''சொந்த ஊர் மயிலாடுதுறை. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிட்டு தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல டைரக்‌ஷன் படிச்சேன். ஷங்கர் சார்கிட்ட சேர்ந்து ரெண்டு படங்கள் வேலை பார்த்ததுமே, 'சினிமா பண்ணிடலாம்’னு நம்பிக்கை வந்திருச்சு. டைரக்ஷன் கோர்ஸ் படிக்கும்போது கிளாஸிக் சினிமா பண்ணணும்னு ஆசை. ஷங்கர் சார்கிட்ட வேலை பார்த்தப்போ கமர்ஷியல் சினிமா பண்ணணும்னு தோணுச்சு. படம் பண்ண வாய்ப்பு கிடைச்சப்போ, எந்த சினிமாவின் சாயலும் இல்லாம புதுசா ஒரு படம் பண்ணணும்னு முடிவு எடுத்தேன். அப்படித்தான் 'கப்பல்’ கதையைப் பிடிச்சோம்!''

''அப்படி என்ன வித்தியாசமான கேன்வாஸ் பிடிச்சிருக்கீங்க?''

''ஒரு வார்த்தையில் சொன்னா,  'ஃப்ரெண்ட்ஷிப்’! ஆனா, வழக்கமான 'மாமா, மச்சான், சரக்கு, சைட் டிஷ், பைக் ரைட், ஃபிகர் சைட்... எல்லாம் இருக்காது. நண்பர்கள் அளவுக்கு அதிகமா அன்பு செலுத்தினா, என்ன ஆகும்னு காமெடியா சொல்லியிருக்கேன். காதலன் - காதலிக்கு ஈக்குவலா நண்பர்களுக்குள்ளும் பொசசிவ்னஸ் இருக்கும். ஆனா, அதை ரொம்ப நுணுக்கமா யாரும் சொன்னது இல்லை. கதைல ஒரு ட்விஸ்டுக்காக லேசா அதைத் தொட்ருப்பாங்க. ஆனா, மொத்தப் படத்தையும் அந்த பொசசிவ்னஸ் மேலயே டிராவல் பண்ண வெச்சிருக்கேன்.

காமெடிக்குனு தனியா பன்ச், ட்ரீட்மென்ட்னு எதுவும் இருக்காது. கதையின் சம்பவங்களும் சூழ்நிலைகளுமே தேவையான டெம்போ கொடுக்கும். ஹீரோ வைபவ்க்கு இனி 'கப்பல்’தான் அடையாளமா இருக்கும். ஹீரோயின் சோனம், 'மிஸ் ஃபெமினா’ல கலந்துகிட்டவங்க. பஞ்சாபி சினிமாக்கள்ல ஸ்டார் ஹீரோயின். கருணாகரன், 'ரோபோ’ சங்கர், 'விடிவி’ கணேஷ்னு கூட நடிக்கிற எல்லாருமே கலாட்டா பார்ட்டிங்கதான்!''

''ஷங்கர்கிட்ட என்ன கத்துக்கிட்டீங்க?''

''எல்லாமே! ஒருநாள்ல இருக்குற 24 மணி நேரத்துல 'இவ்ளோ உழைக்க முடியுமா?!’னு அவர் ஒவ்வொரு நாளும் ஆச்சர்யப்படுத்திக்கிட்டே இருப்பார். அதுவும் சினிமாவில் நாம நினைக்கிற எதுவுமே நடக்காது. 200 சதவிகிதம் நாம திட்டமிட்டா, அதுல 50 சதவிகிதம் நடந்தாலே பெருசு. ஆனா, அப்படியான சூழ்நிலைகளையும் சமாளிச்சு, தான் நினைச்சதை ஸ்க்ரீன்ல கொண்டுவர்ற வரை விடமாட்டார். அதுவும் 'எந்திரன்’ ஷூட்டிங்ல ஒவ்வொரு நாளும் புதுசுபுதுசா பிரச்னை முளைக்கும்.  படத்துலயே ரொம்ப சவாலானவை சிட்டி ரோபோவை பார்ட் பார்ட்டா பிரிக்கும் காட்சிகள்தான். அதுல கேமரா டிரிக், சி.ஜி ரெண்டுமே கலந்திருக்கும். டாக்டர் வசீகரன் கோபத்துல சிட்டி ரோபோவைக் கண்டந்துண்டமா வெட்டுவார். கை, காலை வெட்டின பிறகு, சிட்டி தரையில் படுத்துக்கிட்டே கெஞ்சும். அதைப் படம் பிடிக்கிறப்போ, ஐந்தடி உயரம் இருக்கிற செட்டின் தரையில் பள்ளம் தோண்டி அதுக்குள்ள ரஜினி சாரை இறக்கிட்டு, பள்ளத்தை மறைச்சுடுவோம். சம தளத்துல இருந்து பார்த்தா இடுப்புக்குக் கீழே உடம்பே இல்லாத மாதிரி இருக்கும். ஆனா, ரஜினி சாரோட உடம்பு செட்டுக்குக் கீழ ஃப்ளோர்ல மறைஞ்சிருக்கும். முகத்தை வெட்டும்போது ஒரு டம்மி முகத்தை வெட்டிருவோம். அந்தக் காட்சிகளை ரஜினி சாரின் ஒரிஜினல் முகத்துல சி.ஜி மூலம் ஒட்டிருவோம். இப்படி சிட்டியின் சின்னச் சின்ன ரியாக்ஷன்களுக்குக்கூட பெரிய பெரிய வேலை பார்த்ததுதான் என் தன்னம்பிக்கைக்குக் காரணம். ஆனா, இப்போ ஷங்கர் சார் 'ஐ’ படத்துல அதுக்கும் அடுத்த லெவலுக்கு போயிட்டார்னு சொன்னாங்க. மிஸ் யூ சார்!''

- க.நாகப்பன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்