"சிரிக்க வைக்கிறது ஈஸி இல்லை!” | வெள்ளைக்கார துரை, வெள்ளக்கார துரை, எழில், விக்ரம் பிரபு, ஶ்ரீதிவ்யா, துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, தேசிங்கு ராஜா, விஜய், அஜித்

வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (10/10/2014)

கடைசி தொடர்பு:15:21 (10/10/2014)

"சிரிக்க வைக்கிறது ஈஸி இல்லை!”

'' 'துள்ளாத மனமும் துள்ளும்’... மொத்தப் படத்தையும் 13,650 அடி ஷூட் பண்ணோம். 13,000 அடி இருந்தாலே ரெண்டரை மணி நேர சினிமா ஓட்டிரலாம். ஆக,  எடிட்டிங் டேபிள்ல 650 அடியை மட்டும் கட் பண்ணித் தூக்கினோம். இத்தனைக்கும் எடுத்த சீன்கள் நல்லாவந்திருக்கானு பார்க்க அப்போ மானிட்டரைக்கூடப் பயன்படுத்தலை. ஆனா, இப்போ சினிமா டிரெண்ட் வேற. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே எல்லா வசதிகளும் வந்திடுச்சு. கிட்டத்தட்ட படத்தின் ஃபைனல் ரிசல்ட் வரை அங்கே பார்க்க முடியுது. இப்படி சினிமாவே ஒட்டுமொத்தமா மாறிடுச்சு. அப்படித்தான் காதலும். காதலிக்காகக் கால்கடுக்க பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கணும்னு அவசியம் இல்லை. சின்னதா ஒரு மெசேஜ் தட்டிவிட்டுட்டோ, மிஸ்டுகால் விட்டுட்டோ காதலை கன்டினியூ பண்ணலாம். அந்த ட்ரீட்மென்ட் ஸ்க்ரிப்ட்டுக்கும் தேவைப்படுது!'' - மிகவும் ரிலாக்ஸாகச் சிரிக்கிறார் இயக்குநர் எழில்.

'ஓப்பனிங் + ஒரு வார கலெக்ஷன்’ என்ற இப்போதைய சினிமாவின் பல்ஸ் படித்து காமெடி ஸ்க்ரிப்ட்களாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் ஆக்ஷன் அதிரடி என அமர்க்களப்படுத்தும் விக்ரம் பிரபுவை முதன்முறையாக, 'வெள்ளைக்கார துரை’ என காமெடி சாரட்டில் ஏற்றியிருக்கிறார் எழில்.  

''ஊர்ல சும்மா பந்தா பண்ணிட்டுத் திரியுறவங்களை, 'ஆமா... இவர் பெரிய வெள்ளைக்கார துரை’னு சொல்வாங்க. அப்படியொரு பந்தா பார்ட்டிதான் நம்ம ஹீரோ. ஆனா, பிரச்னைனு வர்றப்போ காரியம் சாதிச்சுடுவாரு. அது என்ன பிரச்னை, அதை எப்படிச் சமாளிச்சார்.... அதை காமெடியா சொல்லிருக்கோம்!''

''விக்ரம் பிரபுவை எப்படி காமெடி ஸ்க்ரிப்ட்ல ஃபிட் பண்ணீங்க?''  

''கதையைச் சொன்னதும் 'காமெடியா?’னு அவரே கொஞ்சம் தயங்கினார். யூனிட்ல சிலரும் விக்ரம் பிரபு செட் ஆவாரானு யோசிச்சாங்க. ஆனா, மூணாவது நாள்லயே கதைக்கு கச்சிதமாப் பொருந்திட்டார் விக்ரம் பிரபு. அந்த அளவுக்கு சின்சியர். அவர் அப்படி இருந்தும், 'தம்பி சரியா ஸ்பாட்டுக்கு வர்றாரா?’னு பிரபு சாரும், பிரபு சாலமனும் அடிக்கடி அக்கறையா விசாரிப்பாங்க!''

''ஒண்ணு ரெண்டு காமெடி படங்கள் ஓடிருச்சுதான். அதுக்காகத் தொடர்ந்து அப்படியே படம் பண்றது போரடிக்கலையா?''

''ஹலோ... காமெடி படம் பண்றது சாதாரணம் இல்லை.  ஒருத்தரைச் சுலபமா அழ வெச்சிடலாம். ஆனா,  காமெடி பண்ணிச் சிரிக்கவைக்கிறதுக்கு எத்தனை பேரோட மனநிலை மேட்ச் ஆகணும் தெரியுமா?! ஆர்டிஸ்ட் லேட், காமெடி நடிகரோட மனஸ்தாபம், செட்ல ஏதோ பிரச்னை, லைட்டிங் போயிட்டே இருக்கு... இப்படி தினமும் எதிர்பார்க்காத சிக்கல்களுக்கு நடுவில், பேப்பர்ல இருக்கிற காமெடியை சீன்ல கொண்டுவர்றது அத்தனை சுலபம் இல்லை. கண்ல கிளிசரின் விட்டுட்டு அழுதுரலாம். ஆனா, எந்த மாத்திரை மருந்தும் சாப்பிட்டுட்டுச் சிரிச்சுட முடியாது.

நீங்க கேட்டதால சொல்றேன்... காமெடி படங்களா பண்றது என் லட்சியம் இல்லை. வெயிட்டான மூணு சப்ஜெக்ட் என்கிட்ட இருக்கு. அதுல அஜித், விஜய்னு மாஸ் ஹீரோக்களை நடிக்கவைக்கலாம். ஆனா, அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஃபீல்டுல வலுவா கால் பதிச்சுக்கணுமேனுதான் காமெடி படங்கள் பண்ணிட்டு இருக்கேன். ஏன்னா, கமர்ஷியலுக்கு, பரிசோதனை முயற்சிக்குனு தனித்தனியா பல ஜன்னல்கள் இப்போதான் சினிமாவில் திறந்திருக்கு.  

நான் சினிமாவுக்கு வந்து 15 வருஷம் ஆகுது. 1999-ம் வருஷம் 'துள்ளாத மனமும் துள்ளும்’ படம் பண்ணேன். அந்தக் காலகட்டத்துல சினிமா பண்றதே இமாலய சவால். ஆனா, இப்போ ஹீரோக்களை மட்டும் நம்பாம கதையை நம்பி படம் பண்ண முன்வர்றாங்க. திறமைசாலிக்கு நல்ல மரியாதை கிடைக்குது. இது, பல ஜூனியர்களுக்கும் சில சீனியர்களுக்கும் நல்லது செஞ்சிருக்கு. எதிர்காலத்துல இந்த நிலைமை இன்னும் பல மடங்கு முன்னேறும்!''

 

- க.நாகப்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்