“ரஜினி, கமலை மீண்டும் இயக்குவார் கே.பி.சார்!” | உயிரே உயிரே, சித்தார்த், ஜெயப்பிரதா, ரஜினி, கமல், சித்து, “ரஜினி, கமலை மீண்டும் இயக்குவார் கே.பி.சார்!”

வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (10/10/2014)

கடைசி தொடர்பு:15:26 (10/10/2014)

“ரஜினி, கமலை மீண்டும் இயக்குவார் கே.பி.சார்!”

'சலங்கை ஒலி’ ஜெயப்பிரதாவை நினைத்தாலே இனிக்கும்!

சினிமாவைவிட்டு விலகி உத்தரப்பிரதேச அரசியலில், ஒரு ரவுண்டு அடித்தார். இப்போதும் டபுள் ஆக்ட் ஹீரோக்களின் அப்பா கேரக்டருக்கு ஜோடியாக நடிக்கவைக்கலாம் போல இருக்கிறார். தன் மகன் சித்துவை 'உயிரே உயிரே’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்த வருகிறார் தயாரிப்பாளர் ஜெயப்பிரதா.

''அரசியலில் எனக்கு நிறையக்  கசப்பான அனுபவங்கள். ஆனா, அதையும் தாண்டி கடினமான சூழலில் உத்தரப்பிரதேச மக்களுக்கு ஒரு எம்.பி-யாக நிறைய செஞ்சிருக்கேன். இப்போ நான் எந்தக் கட்சியிலும் இல்லை. சினிமா மாதிரி ஈஸி இல்லை பாலிட்டிக்ஸ். அதுவும் உத்தரப்பிரதேச அரசியலில் கிரைம் ரேட் அதிகம். என்னைப் பத்தின தரம்தாழ்ந்த விமர்சனங்களைக் கேட்டு சில நேரங்களில் வெடிச்சு அழுதிருக்கேன். கமல் சார்கூட, 'உனக்கு ஏன் இந்த அரசியல்?          நீ எவ்வளவு பிரமாதமான நடிகை! ஏன் இப்படி அங்கே போய் கஷ்டப்படுற. பேசாம எல்லாத்தையும் விட்டுட்டு இங்கே வந்துடு. நாங்க இருக்கோம். முழுக்க சினிமாவில் கவனம் செலுத்து’னு சொன்னார். ஆனா, எல்லாத்துக்கும் டைமிங் வரணுமே! என் மகனோட அறிமுகம் அதுக்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கு.

தெலுங்கு ஹிட் சினிமா  'இஷ்க்’ படத்தின் ரைட்ஸ் வாங்கி தமிழில் பிரமாண்டமா ரீமேக் பண்றோம். ராஜசேகர் படத்தை இயக்குறார். சித்துவுக்கு ஜோடி ஹன்சிகா. கொஞ்ச நாள் நான் அரசியல் பத்தி யோசிக்கப்போறது இல்லை.  இனி தமிழ் சினிமாதான் எனக்கு எல்லாமே!''

''ரஜினி-கமல்கூட இன்னமும் இனிமையான நட்பு இருக்கா?''

''என் சினிமா கேரியர் ஆரம்பத்துலயே எங்களுக்குள் திக் ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. 'நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு முன்னாடியே பாலசந்தர் சார் டைரக்ட் பண்ண 'அந்துலேனி கதா’ங்கிற தெலுங்குப் படத்தில் நடிச்சிருக்கோம். நான் ஹீரோயினா அறிமுகமான படம் அதுதான். 'அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் ரீமேக். என் பிரதர் கேரக்டர்ல ரஜினி நடிச்சார். அப்போ நான் ஸ்கூல் ஸ்டூடன்ட். அந்தப் படத்துல ரஜினி ஸ்டைலா பாட்டிலை எட்டி உதைக்கிற சீன். 30 டேக் தாண்டிப் போயிட்டே இருக்கு. பாலசந்தர் சார் டென்ஷன்ல, 'டேய்... ரஜினி அடிச்சிடுவேன்டா’னு கத்துறார். நான் பயந்துபோய் 'ஓ’னு கத்திட்டு, 'என்னை விட்டுடுங்க. நான் ஸ்கூலுக்குப் போகணும்’னு அழறேன். ரஜினிக்குச் சிரிப்பு தாங்கலை. அப்புறம் கே.பி சார் காபி கொடுத்து என்னை தாஜா பண்ணி நடிக்கவெச்சார். ரஜினி சிரிச்சுட்டே இருந்தார். 30 டேக் தாண்டின பிறகும் சின்ன சோர்வுகூட அவர்கிட்ட இல்லை. எப்பவும் ஸ்பீடு... அதான் ரஜினி ஸ்டைல். இப்பவும் அதே வேகத்தோட, 'எப்டி எப்டி இருக்கீங்க?’னு அக்கறையா விசாரிக்கிறார்.

கமல் எப்பவும் சமத்து. 'சலங்கை ஒலி’ பண்ணப்போ என் கேரக்டரை கமல் அவ்ளோ அழகா எக்ஸ்ப்ளைன் பண்ணுவார். கண் மை கொஞ்சம் ஜாஸ்தியா வெச்சுட்டுப் போனாக்கூட கண்டுபிடிச்சு இயக்குநர் கே.விஸ்வநாத் சார்கிட்ட, 'சார் சார்... ஜெயா ஓவரா மேக்-அப் போட்டிருக்கு. நான் நடிக்க மாட்டேன்’னு மாட்டிவிடுவார். அந்த அளவுக்கு பெர்ஃபெக்ட் ஆர்ட்டிஸ்ட். என் கேரக்டர்ல கொஞ்சம் கூடுதல் எமோஷன் காட்டியிருந்தாக்கூட ஓவர் ஆக்டிங் ஆகியிருக்கும். ஆனா, நான் இயல்பா பெர்ஃபார்ம் பண்ணதுக்கு கமல்தான் காரணம். 'நீ தமிழ்ல இன்னும் நிறையப் படங்கள் பண்ணியிருக்கணும். வி ரியலி மிஸ் யுவர் ஸ்க்ரீன் பிரசன்ஸ்’னு சொல்வார். 'தசாவதாரம்’ வரை என்னை அக்கறையா வழிநடத்துற ஜூனியர் கே.பி சார்... கமல்தான்!''

''உங்க குரு பாலசந்தர் சார் என்ன சொல்றார்?''

''எப்போ சந்திச்சாலும் பழைய நினைவுகளைத் திரும்பத் திரும்பப் பேசிட்டே இருப்போம்.           ' 'நினைத்தாலே இனிக்கும்’ படத்துல உன் க்ளோஸ்-அப் காட்சிகளை மனசே வராம கட் பண்ணுவேன் தெரியுமா!’னு குழந்தையைப்போல சொல்வார். 'உங்க ஸ்கிரிப்ட்ல திரும்பவும் ரஜினி, கமல், நான் சேர்ந்து நடிக்க ஆசையா இருக்கு’னு சொன்னேன். 'என் டைரக்ஷன்ல கமலும் ரஜினியும் திரும்ப சேர்ந்து நடிக்க ஒரு பிளான் இருக்கு’னு சொன்னார். வாவ்... நினைச்சாலே இனிக்குதுல!''

''அதான் தமிழ்நாட்டுக்கு வந்துட்டீங்களே... அப்படியே தமிழ்நாட்டு அரசியலில் இறங்க வேண்டியதுதானே?''  

''ஆஹா... யார் எனக்கு ஓட்டு போடுறது!'' 'ஹஹஹஹஹஹ’ என 'நினைத்தாலே இனிக்கும்’ சிரிப்போடு விடை கொடுக்கிறார் ஜெயப்பிரதா!

- ஆர்.சரண், படம்: வீ.நாகமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close