“க்ளிக் பண்ணிட்டே இருங்க!” | “க்ளிக் பண்ணிட்டே இருங்க!”, மனுஷ் நந்தன், பேட்டி, ஒளிப்பதிவாளர், ஹேப்பி நியூ இயர், ஃபராகான், ரவி கே.சந்திரன்

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (10/10/2014)

கடைசி தொடர்பு:15:37 (10/10/2014)

“க்ளிக் பண்ணிட்டே இருங்க!”

'''ஹேப்பி நியூ இயர்’ - பாலிவுட்டில் இந்த வருடத்தின் பெரிய படம். 130 கோடி பட்ஜெட்; ஷாருக்கான், தீபிகா படுகோன்னு பெரிய நடிகர்கள்; 'ஓம் சாந்தி ஓம்’ புகழ் இயக்குநர் ஃபரா கான் டைரக்ஷன்; இந்த அனுபவ அணி, புது கேமராமேனான என்னைத் தேர்ந்தெடுத்தது என் மீதான நம்பிக்கை.  இன்னைக்கு 'ஹேப்பி நியூ இயர்’ கடைசி நாள் ஷூட்!'' - சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறார் மனுஷ் நந்தன். விகடன் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர்; பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் மாணவர்.

''புகைப்படக் கலைஞர் டு ஒளிப்பதிவாளர் பயணத்தின் சுவாரஸ்ய தருணங்கள் சொல்லுங்கள்?''

''விஷூவல் மீடியாதான் என் கனவு. வொகேஷனல் குரூப்பான போட்டோகிராஃபி படிச்சேன். அப்ப அந்த குரூப், சென்னை சூளைமேடு மாநகராட்சிப் பள்ளியில் மட்டும்தான் இருந்துச்சு. பிறகு ஃபிலிம் இன்ஸ்டிடியூட். அப்படியே விகடனில் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி. இந்தியா முழுக்கப் பயணிக்கும் ஒளிப்பதிவாளரிடம் உதவியாளரா சேரணும்னு ஆர்வம். ரவி கே.சந்திரன் சார்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சார். விகடனுக்காக நான் எடுத்த போட்டோஸுடன் அவரைப் பார்த்தேன். இரண்டாவது சந்திப்பிலேயே அசிஸ்டென்டா சேர்த்துக்கிட்டார். பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன் சாருக்கு அடுத்து அதிகமான கேமராமேன்களை இன்டஸ்ட்ரிக்குக் கொடுத்தவர், ரவி கே.சந்திரன் சார்தான். ரவிவர்மன் தொடங்கி இதுவரை அவரோட மாணவர்கள் 12 பேர் வந்திருக்காங்க. அந்த போட்டோகிராஃபர் மனுஷ்தான், இப்போ  இந்த ஒளிப்பதிவாளர் மனுஷ§க்கு முதுகெலும்பு!''

'' 'ஹேப்பி நியூ இயர்’ அனுபவங்கள்...''

''டைரக்டர் ஃபரா கான், செம டாஸ்க் மாஸ்டர். அதே சமயம் சென்ஸ் ஆஃப் ஹுயூமர் ஜாஸ்தி. 'பக்கத்து ஃப்ளோர் போயிருந்தேன். அங்க ஒரே ஒரு லைட்டை வெச்சு ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க. 'என்னாச்சு?’னு கேட்டேன். 'எல்லா லைட்டையும் உங்க கேமராமேன் எடுத்துட்டுப் போயிட்டார். இன்டஸ்ட்ரியில் வேற லைட்டே இல்லைனு சொன்னாங்க’னு சிரிப்பாங்க. நான் அதிகமா லைட்ஸ் பயன்படுத்துறேன்னு இப்படி காமெடி பண்ணுவாங்க. சல்மான் கானின் தீவிர ரசிகரா இருக்கிறவங்ககூட, ஷாருக்குடன் ஒருமுறை பேசிப் பழகிட்டாங்கனா, லைஃப்டைம் ஷாருக் ஃபேனா மாறிடுவாங்க. அந்த அளவுக்கு ஷாருக் எனர்ஜியான மனிதர். 30 டேக் ஆனாலும் ஒருமுறைகூட முகம் சுளிக்காம, முதல்முறை நடிக்கும் ஆர்வத்தோட நடிப்பார். உடனுக்குடன் மனம்திறந்து பாராட்டுவார். நைட் விடியவிடிய ஆக்ஷன் சீக்வென்ஸ் முடிச்சிட்டுப் போவோம். அவர்தான் கஷ்டப்பட்டு நடிச்சிருப்பார். ஆனால், 'என் டீமுக்கு தேங்க்ஸ், கேமராமேன் ரொம்பப் பிரமாதமா பண்ணினார்’னு ட்வீட் பண்ணுவார். தென்னிந்திய டெக்னீஷியன்கள் மீது அவருக்குப் பெரிய மரியாதை!''

''யாரிடமும் சினிமா கற்காமலேயே உங்க வயது இளைஞர்கள் பலர், குறும்படங்கள் மூலம் அறிமுகமாகி படம் எடுக்கும் நம்பிக்கையை இன்றைய டிஜிட்டல் உலகம் தந்திருக்கு. முறையான குருகுல பயிற்சியில் வந்த நீங்கள் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?''

''ஸ்டில் கேமராவா இருந்தால்கூட, நிறைய போட்டோஸ் எடுங்க. உங்களோட ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாடம். விகடனுக்காக நான் போட்டோஸ் எடுத்த நாட்கள்தான் இப்ப எனக்குப் பல வழிகளில் கைகொடுக்குது. அப்படி ஒருமுறை ஒரு மருத்துவமனையின் பிணவறைக்குப் போயிருந்த ஞாபகம் இன்னும் இருக்கு. இப்போ பிணவறைன்னா இப்படிதான் இருக்கும்னு அந்த மாதிரி சீக்வென்ஸ்ல முடிவுக்கு வந்து ஆங்கிள் வைக்க முடியுது. அது குறும்படமோ, போட்டோவோ... ஷூட் பண்ணிட்டே இருங்க. உங்களையும் அறியாமல் ட்யூன் ஆகிட்டே இருப்பீங்க.''

''திருமண வாழ்க்கை எப்படி இருக்கு. மனைவியும் ஒளிப்பதிவாளராமே?''

''கௌரி. அவங்களுக்கு மஹாராஷ்டிரா. அவங்களும் ரவி கே. சந்திரன் சார் அசிஸ்டென்ட்தான். அப்படித்தான் பழக்கம். எட்டு மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் ஆச்சு. அவங்க இப்பவும் ரவி சார்ட்டதான் வொர்க் பண்றாங்க. நிச்சயம் தனியா படம் பண்ணுவாங்க. அழகா... அர்த்தமுள்ளதா இருக்கு வாழ்க்கை!''

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்