Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“உலக சினிமால்லாம் எதுக்குப் பார்க்கணும்..!?”

முதல் படம் தொடங்கி சமீப 'பூஜை’ வரை இயக்குநர் ஹரியின் அலுவலகம் அதேதான்! இடமும் மாறவில்லை; ஆளும் மாறவில்லை. சிலுப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடியைக் கோதியபடியே பேசுகிறார் ஹரி. தமிழ் சினிமாவின் 'மேக்ஸிமம் கியாரன்டி’ இயக்குநர், விஷால்-ஸ்ருதிஹாசன் என புதுக் கூட்டணியில் 'பூஜை’ படத்துக்குப் பூஜை போட்டிருக்கிறார்!

''நாட்ல இப்ப இருக்கிற முக்கியமான ஒரு பிரச்னையை எதிர்த்து ஹீரோ போராடுறான். அதை ஒரு குடும்பப் பின்னணி, அழுத்தமான காதல் சேர்த்து சொல்றோம். சேஸிங், ஆக்ஷனோட ஃபோர்ஸான காதலும் படத்துல இருக்கு. முக்கோணக் காதல் கதை மாதிரி, இது முக்கோண ஆக்ஷன் கதை. கோயம்புத்தூர்ல ஆரம்பிக்கிற  கதை பீகார்ல போய் முடியும்!''

''விஷால், இப்பத்தான் பஸ் ஏறிப் போய் ஆளுங்களை அடிக்கிறதை நிறுத்தியிருக்கார். திரும்ப அவர்கிட்ட துப்பாக்கியைக் கொடுத்துட்டீங்களே!''

''நம்ம படத்துல எல்லாமே கலந்துதானே இருக்கும். ஏழு வருஷத்துக்கு முன்னாடி விஷாலோட 'தாமிரபரணி’ பண்ணேன். அது முழு நீள ஆக்ஷன் படம் கிடையாது. 'விட்டுக்கொடுத்தா வாழ்க்கையில பிரச்னை இல்லை’னு குடும்ப சென்ட்டிமென்ட்தான் மெசேஜ். இந்த ஏழு வருஷத்தில் ஆக்ஷன், டான்ஸ் மட்டுமில்லாம ஒரு பெர்ஃபாமராவும் விஷால் வளர்ந்திருக்கார். அதே மாதிரி 'பூஜை’யும் நான் ஏற்கெனவே பண்ண படங்களின் பெட்டர் வெர்ஷனா இருக்கும். இப்படி எங்க ரெண்டு பேருக்கும் அடுத்த லெவல் பாய்ச்சலா இருக்கும் இந்தப் படம்!''

''பொதுவா உங்க பட ஹீரோயின்கள் ஏரியால வாங்கின காஸ்ட் யூம்ல ரொம்ப ஹோம்லியா இருப்பாங்க. ஆனா, இதுல ஸ்ருதி செம கிளாமரா மிரட்டுறாங்களே!''

''கதை நடக்கிறது கோயம்புத்தூர்ல. அங்கே இதைவிடப் பிரமாதமான காஸ்ட்யூம்ஸ் கிடைக்குமே!

படத்துக்கு ரொம்ப மாடர்னா ஒரு பொண்ணு தேவைப்பட் டாங்க. அந்த மாடர்ன் லுக், புரொஃபஷனல் டச் எல்லாமே ஸ்ருதிக்கு கரெக்ட் மேட்ச். என் படங்கள்ல இருந்து விலகி ரொம்ப மாடர்னா ஒரு லவ் போர்ஷன் வெச்சிருக்கோம். ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை ஸ்ருதிக்குப் படத்துல வேலை இருந்துட்டே இருக்கும்!''

''நிறைய ஹீரோக்கள்கூட நீங்க வொர்க் பண்ணியிருந்தாலும் சூர்யாவுக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷலா வொர்க்-அவுட் ஆகுது. என்ன காரணம்?''

''காரணம் சொல்லத் தெரியலை. ஆனா, அவர் ஃப்ரேம்ல வந்து நின்னாலே சாதாரண சீன்கூட பவர்ஃபுல்லா மாறிடும். ஒரு சீன்ல நாம 80 சதவிகிதம் பவர் வெச்சிருந்தா, அவர் அதை 100 ஆக்கிடுவார். நாமளே 100 சதவிகிதம் வெச்சிருந்தா, அதை அவர் ஹைவோல்டேஜ் ஆக்கிடுவார்.

'சிங்கம்-2’ல, வில்லன்கிட்ட போன்ல சவால் விட்டுட்டு கோபத்துல டேபிள்ல செல்போனை ஓங்கி அடிக்கணும். இது சீன். சூர்யா தூக்கி அடிச்சதுல டேபிள் கண்ணாடியே நொறுங்கிடுச்சு. இப்படி அந்த கேரக்டராவே மாறிடுவார். அவரோட அந்த டெடிகேஷனுக்கு நம்ம ஸ்கிரிப்ட் வேலை வெக்கணும்னு நினைச்சாலே, கூடுதல் பொறுப்பு வந்திடும் நமக்கு!''

'' 'சிங்கம்-3’... எதிர்பார்க்கலாமா?''

''பேசிட்டு இருக்கோம். நல்ல நல்ல கதைகள் இருக்கு. ஆனா, உட்கார்ந்து பேசினாதான் 'சிங்கம்-3’க்கு செட் ஆகுமானு தெரியும். 'சிங்கம்-2’ல தப்பிச்சிட்டோம். இன்னொரு முறை தப்பிக்க முடியுமானு தெரியலை. அந்த வித்தை கைவந்துட்டா, மூணாவது பாகத்தை ஆரம்பிச்சிடலாம்!''

''நீங்க இயக்க விரும்பும் ஹீரோ யார்?''

''எல்லா மாஸ் ஹீரோக்களும். ஆனா, கமல் சார்கூட வேலை செய்யணும்னு நினைச்சாலே, கொஞ்சம் பயம் வந்துரும். 'அவருக்கு எல்லாமே தெரியும். அவர் கேட்கிற கேள்விக்கு நம்மால பதில் சொல்ல முடியுமா?’னு உதற ஆரம்பிச்சிரும். அவர் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு ஒரு டைட் ஸ்கிரிப்ட் பண்ணிட்டு அவர்கிட்ட போய் நிக்கணும்னு ஆசை!''

''உங்களை எப்படி அப்டேட் பண்ணிக்கிறீங்க... உலக சினிமால்லாம் பார்ப்பீங்களா?''

''உலக சினிமாவா... உள்ளூர் சினிமா பார்க்கவே நேரம் இல்லை. ஒரு படம் பார்க்கப் போயிட்டு வந்தா, அஞ்சு மணி நேரம் காலி. அது என்னோட அரை நாள் வேலை. தவிர, என் பட வேலைகள் ஆரம்பிச்சிட்டா, மத்த படங்களைப் பார்க்க மாட்டேன். நல்ல படம் பார்த்தா பயம் வந்துடும். சுமாரான படங்கள்னா ரொம்பப் பயம் வந்துடும். உலக சினிமாக்களைப் பார்த்து அது மாதிரி நான் படம் பண்ணப் போறது இல்லை. அப்புறம் எதுக்கு அதெல்லாம் பார்த்துக்கிட்டு?''


- ம.கா.செந்தில்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்