மெர்சல் பண்ணிட்ட கலை! | மெர்சல் பண்ணிட்ட கலை , மெட்ராஸ், அன்பு, கலையரசன் , கலையரசன் பேட்டி, அன்பு பேட்டி, கார்த்தி, ரஞ்சித்

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (16/10/2014)

கடைசி தொடர்பு:19:13 (16/10/2014)

மெர்சல் பண்ணிட்ட கலை!

'மச்சி, செம கெத்து பண்ணிட்டான்ல நம்ம அன்பு!’ - 'மெட்ராஸ்’ படத்தில் 'அன்பு’வாக அப்ளாஸ் கவனம் குவித்திருக்கும் கலையரசன், பக்கா மெட்ராஸ் பையன்!

''திருவொற்றியூர் ஏரியா. மிடில் கிளாஸ் ஃபேமிலி. பி.சி.ஏ படிச்சேன். ஆரம்பத்துல இருந்தே சினிமா மேல ஒரு ஈர்ப்பு. வெஸ்டர்ன், ஹிப்-ஹாப்னு டான்ஸும் நல்லா வரும். காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல கிடைச்ச பாராட்டு, ஃப்ரெண்ட்ஸ் ஏத்திவிட்ட சினிமா ஆசை, லட்சியமா மாறிடுச்சு. வாய்ப்பு தேடினப்ப, 'கனா காணும் காலங்கள்’ ஆடிஷன்ல முதல் ரவுண்டு தேர்வு ஆனேன். ஆனா, குடும்ப சூழ்நிலை... 10,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போக வெச்சது.

மனசுக்குப் பிடிக்காத வேலையை, ஒரு கட்டத்துக்கு மேல செய்ய முடியலை. வேலையை விட்டுட்டு சினிமா வாய்ப்புக்காக அலைய ஆரம்பிச்சேன். 'அர்ஜுனன் காதலி’ படத்துல ஜெய்க்கு நண்பனா நடிச்சேன். இப்போ வரை படம் ரிலீஸ் ஆகலை. மிஷ்கின் சாரைச் சந்திச்சப்போ, 'நந்தலாலா’ படத்துல ஒரு சின்ன ரோல் கொடுத்தார். படத்தில் என் தலையில அவர் பாட்டிலை அடிச்சு உடைக்கிற மாதிரி சீன். 'நல்லா பண்றடா’னு கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்தவர், அப்புறம் 'முகமூடி’ல ஜீவாவுக்கு நண்பனா படம் முழுக்க வர்ற கேரக்டர் கொடுத்தார். அந்தச் சமயம்தான் ரஞ்சித் அண்ணன் பழக்கம் ஆனார். 'அட்டகத்தி’ கிளைமாக்ஸ்ல நந்திதா லவ்வரா ஒரு குட்டி ரோல் நடிக்க வெச்சார். அப்புறம் எனக்கும் சினிமாவுக்கும் பெரிய இடைவெளி. மறுபடியும் அலைச்சல்... தேடல்... அப்படித்தான் 'மதயானைக் கூட்டம்’ வாய்ப்பு கிடைச்சது. தேனிக்குப் போய் ஒரு மாசம் தங்கி நடிச்சேன். பிரமாதமான கேரக்டர். ஆனாலும் திரும்ப சினிமாவுல பெரிய கேப்.

ஆரம்பத்துல வேலைக்குப் போனேன்ல... அப்பவே சண்முகப்ரியானு என்னோட வேலை பார்த்தவங்க மேல லவ்ஸ் ஆகிடுச்சு. ஏழு வருஷக் காதல். இனி சினிமால என்ன பண்ணப்போறோம்னு குழப்பமா இருந்துச்சு. 'சரி இப்போ கல்யாணம் பண்ணிப்போம்’னு சண்முகப்ரியாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

திடீர்னு ஒருநாள் ரஞ்சித் அண்ணன் கூப்பிட்டு 'மெட்ராஸ்’ அன்பு கேரக்டர் பத்தி சொன்னார். இத்தனைக்கும் அப்போ நான் நடிச்ச எந்தப் படத்தையும் அவர் பார்க்கலை. 'மெட்ராஸ்’ ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகுதான் 'மதயானைக் கூட்டம்’ ரிலீஸ் ஆச்சு. 'மெட்ராஸ்’ யூனிட்லயும் 'இவன் அந்த கேரக்டருக்கு செட் ஆவானா?’னு எல்லாருக்கும் சந்தேகம். ஆனா, ரஞ்சித் அண்ணன் என் மேல அவ்ளோ நம்பிக்கை வெச்சார். அந்த நம்பிக்கையைக் காப்பாத்தின திருப்தி இருக்கு.

'மெட்ராஸ்’ ஷூட்டிங் முழுக்க வட சென்னையில்தானே நடந்துச்சு... ஸ்பாட்டே களேபரமா இருக்கும். மாத்தி மாத்தி எல்லாரையும் கலாய்ச்சுப்போம். நார்த் மெட்ராஸ்ல 'மூஞ்சி’னு சொல்வாங்க. 'ஆங்... மூஞ்சப் பாரு’னு ஆரம்பிச்சு, 'மூஞ்சப் பேத்துருவேன்’னு எல்லா ஸ்லாங்லயும் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவாங்க. நாங்க மாரி கேரக்டரை, 'வாய்யா நாடக மூஞ்சி’னு சொல்வோம். அப்படியே ஒவ்வொரு கேரக்டருக்கும் பேர் வெச்சதுல, பன்ச் டயலாக் மூஞ்சி, பாராட்டுற மூஞ்சி, கோபக்கார மூஞ்சி, சிவப்பு சட்டை மூஞ்சினு ஒருத்தரையும் விட்டுவைக்கலை. இப்படி கலாட்டாவும் சேட்டையுமா படம் முடிச்சுட்டோம். ஆனா, ரிசல்ட் எப்படி இருக்கும்னு திக்திக்னு இருந்துச்சு.

ஃபர்ஸ்ட் ஷோ ரசிகர்கள் ரியாக்ஷன் பார்த்தப்பவே, அந்தத் திக்திக் மறைஞ்சு குஷி ஆகிட்டோம். முன்னாடி என்னைத் திட்டுனவங்க, கிண்டல் பண்ணவங்கலாம், 'சூப்பர்யா.... உன்னை சுமார் மூஞ்சினு நெனைச்சேன். மெர்சல் பண்ணிட்டே’னு பாராட்டுறாங்க. என் அப்பாவுக்குப் பெருமை தாங்கலை.

இந்தச் சந்தோஷத் தருணத்துக்காக என்னைப் பொறுமையா அடைகாத்துக் கொண்டுவந்தது சண்முகப்ரியாதான். வேலை இல்லாம நான் சும்மா இருந்தப்போ, அவங்க கொடுத்த ஆறுதல், நம்பிக்கை... அவ்வளவும் அன்பு!

நாலு மாசம் முன்னாடி பாப்பா பொறந்துச்சு. அதிதினு பேர் வெச்சிருக்கோம். பொண்ணு பொறந்த நேரம், வாழ்க்கையில பெரிய திருப்புமுனை உண்டாகியிருக்கு!'' தாடியைத் தடவியபடி சிரிக்கிறார் கலையரசன் டாடி!

- க.நாகப்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்