இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! | இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்!, விஞ்ஞானி , பார்த்தி, மீரா ஜாஸ்மின்

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (17/10/2014)

கடைசி தொடர்பு:18:50 (17/10/2014)

இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்!

அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில் பணியாற்றிய ஒரு விஞ்ஞானி,  ஒரு தமிழ்ப் படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் பெயர் பார்த்தி. படத்தின் பெயர் 'விஞ்ஞானி’

 

'' சொந்த ஊர் சேலம். சென்னையில் கல்லூரி படிப்பு, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றேன். அதன் பிறகு இந்திய அறிவியல் நிறுவனத்தில் உயர்கல்வி. தொடர்ந்து விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றேன். நான் எழுதிய சில ஆய்வுக் கட்டுரைகள் நாசாவைக்  கவர்ந்ததால், அவர்களாகவே என்னை அழைத்து பணியில் அமர்த்திக்கொண்டார்கள்.  நானும் என் குழுவினரும் ஓசோன் படலம் பருவநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகளில் இருந்தோம். புற விண்வெளியில் உயிரினம் வாழ்வது பற்றிய ஆய்விலும் பங்கு எடுத்துக்கிட்டேன்' என்று அறிமுகம் கொடுத்தார்.

''அவங்க ரீசன்டா கண்டுபிடிச்சதா பெருமைப் பட்டுக்கிற பல விஷயங்கள்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாடி எழுதப்பட்ட நம்ம தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. தாவரங்களுக்கு உயிர் இருக்குனு போன நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதா நவீன விஞ்ஞானம் சொல்லுது. ஆனா புல்லுக்கு ஓருயிர்னு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே தொல்காப்பியர் சொன்னது எப்படி? அப்போ அவங்க எல்லாம் அறிவியல்பூர்வமா அறிந்த உண்மைகளைத்தான் எழுதி இருக்காங்க. தெரிஞ்ச உண்மைகளை மீண்டும் புதுசா கேட்கிறதுல என்ன இருக்குனு முடிவு பண்ணி, அறிவியலைத் தொழில் துறையா மாற்றும் முடிவோடு நாசாவில் இருந்து விலகினேன். அப்புறம் அறிவியலின் அடிப்படையில் தொழில்கள் செய்ய விரும்பு வோருக்கு உதவி செஞ்சு, பல தொழில் நிறுவனங்கள் உருவாகக் காரணமா இருந்தேன். பயோடெக்னாலஜி துறையில் வர்த்தக ஆலோசகரா மாறினேன். சென்னை ஐ. ஐ. டியில் 2008ம் ஆண்டு அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும்  நிறுவனத்தை ஆரம்பிச்சேன்.''

''எல்லாம் சரி, எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?''

''சினிமா எனது சின்ன வயசுக் கனவு (உங்களுக்குமா?). நாசாவில் இருந்தபோதே அமெரிக்காவில் ஜூம்பா நடனம் கற்றுக்கொண்டேன். ஒரு நிலையில் பல அறிவியல் விஷயங்களை மக்கள் ரசிக்கிற மாதிரி, பொழுதுபோக்குத்தன்மையோட சினிமாவில் சொல்லணும்னு எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தில் ஒரு கதையைத் தயார் செய்தேன். நம்ம தாத்தாக்கள் நமக்கு இந்த பூமியை எவ்வளவு அற்புதமானதா கொடுத்துட்டுப் போனாங்க. ஆனா நம்ம பிள்ளை களுக்கும் பேரன்களுக்கும் நாம் அப்படிக் கொடுத்துட்டுப் போறோமா என்ற கேள்வியோடு எல்லாரு டைய மனசாட்சியையும் உலுக்கும் ஒரு விஷயத்தை எடுக்க முடிவு செஞ்சேன். அதை டாக்குமென்ட்ரியா சொல்லாம, சென்டிமென்ட்டுக்கு மீரா ஜாஸ்மின், காமெடிக்கு விவேக், கிளாமருக்கு சஞ்சனா சிங், சஸ்பென்ஸுக்கு தேவதர்ஷினி, போஸ் வெங்கட் இவர்களை எல்லாம்  சேர்த்து ஒரு சயின்டிஃபிக் த்ரில்லரா  இந்தப் படத்தை எடுத்து இருக்கேன்.

மிகுந்த அறிவும் கொஞ்சம் தலைக்கனமும்கொண்ட ஒரு விஞ்ஞானி உலகின் முக்கியமான ஒரு பிரச்னைக்குத் தீர்வு தேடி ஆராய்ச்சி செய்றான். அப்போ ஒரு தமிழ் ஆசிரியை அவனைத் திட்டமிட்டு திருமணம் செய்து கொள்கிறாள். அவன் ஆராய்ச்சியில் குறுக்கிடுகிறாள். அதன் மூலம் நடக்கும் அதிசய அறிவியல் விஷயங்கள்தான் இந்தப் படத்தின் கதை.''

''விஞ்ஞானி படம் எதைப் பத்தி ஆராய்ச்சி பண்ணுது?''

''இந்தக் கேள்விக்கு பதில் படத்துல இருக்கு. உலகின் ஒரு முக்கிய பிரச்னைக்கு தீர்வா இருக்கிற 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் உயிரை மீண்டும் தமிழ் மண்ணில் மீள் உருவாக்கம் செய்கிறது இந்தப் படம்'' என்கிறார் பார்த்தி.

கேட்க நல்லாத்தான் இருக்கு. பாக்கவும் நல்லா இருந்தா சரி!

சு.செ.குமரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்