புலி... மான்... புல்லுக்கட்டு! | புலி... மான்... புல்லுக்கட்டு!, ஆர்யா பேட்டி, ஆர்யா, விஷால், த்ரிஷா, ரஜினி, நயன்தாரா, சர்வம், நான் கடவுள்

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (17/10/2014)

கடைசி தொடர்பு:20:40 (17/10/2014)

புலி... மான்... புல்லுக்கட்டு!

'தாறுமாறு கேள்வி... தடதட பதில்... ஓ.கே-வா?’ என வாட்ஸ்அப்பினால், 'தம்ஸ் அப்’ ஐகான் அனுப்புகிறார் ஆர்யா. அசோக் நகர் வீட்டில், இரண்டு கார்கள், ஏழு ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் போர்டிகோவை அடைத்திருக்கின்றன. 'மீகாமன்’ படத்துக்காக திமுதிமுவென உடம்பை ஏற்றியிருந்தவர், இப்போது 'சைஸ் ஜீரோ’வுக்கு மெலிந்துவிட்டார்!

''ஃபிட்னெஸ் டிப்ஸ்!''

''24 மணி நேரமும் உங்களுக்காக உழைக்கிற உடம்புக்கு தினம் ஒரு மணி நேரம் ஒதுக்குங்க. வாக்கிங், ஜாக்கிங், யோகா, ஜிம்னு உங்க வேலை நேரத்துக்குத் தகுந்த ஏதோ ஒரு உடற்பயிற்சி பண்ணுங்க. நான் நிறைய சைக்கிளிங் பண்ணுவேன். அதிகாலை 3 மணிக்குக் கிளம்பி ஈ.சி.ஆர்-ல           60 கிலோமீட்டர் வரைக்கும் சைக்கிள் ஓட்டுவேன். எப்போவாச்சும் கார்த்தியும் ஜீவாவும் சேர்ந்து சைக்கிளிங் வருவாங்க. 'டெய்லி வாங்கப்பா’னு சொன்னா, போத்திக்கிட்டுப் படுத்துடுறாங்க பசங்க!''

''அம்மாவுக்கு நல்ல பிள்ளையா இருக்கிறது எப்படி?''

''அம்மாவுக்கு என்ன நல்ல பிள்ளை... கெட்ட பிள்ளை? எப்படி இருந்தாலும் ஒரு அம்மாவுக்கு தன் பிள்ளை நல்ல பிள்ளைதான். என் அம்மா ரொம்பப் பாசமானவங்க. நான் ஷூட்டிங்னு வெளியூர் கிளம்பினா, அழ ஆரம்பிச்சுடுவாங்க. 'ஒரு வாரத்துல வந்திருவேன். இதுக்குப்போய் அழறியே...’னு சொன்னா, கண்ணீரைத் தவிர வேற பதில் வராது. அஞ்சு வருஷம்,              10 படங்கள் நடிச்ச பிறகும் இது நிக்கலை. 'நான் கடவுள்’ படத்துக்காக தாடி வளர்த்துட்டு நடிச்சப்ப, 'என் புள்ளை இப்படிக் கஷ்டப்படுதே’னு எப்போ பார்த்தாலும் அழுகை. அதனாலேயே அவங்ககிட்ட சொல்லிக்காம ரகசியமா ஷூட்டிங் போயிட்டு வருவேன். அம்மான்னா அன்பு பாஸ்!''

''வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷம்?''

''2004, ஏப்ரல் 10-ல் நடந்த ஒரு சம்பவம். சினிமா ஆசையில் ஐ.டி வேலையையும், அமெரிக்கா போகும் வாய்ப்பையும் விட்டுட்டேன். 'உள்ளம் கேட்குமே’ படத்தில் நடிச்சுட்டு இருந்தேன். பல காரணங்களால் படத்தோட ஷூட்டிங் இழுத்துட்டே போச்சு. நடிக்க வந்து நாலு வருஷங்கள் ஆச்சு. நண்பர்கள்லாம், 'அமெரிக்கா வாடா’னு கூப்பிட்டாங்க. நான் கிளம்பிப் போயிட்டா, மொத்த ஷூட்டிங்கும் அம்பேல். லைலா, ஷாம், பூஜானு எல்லாருக்கும் அது பெரிய அடி. அதே சமயம் என்னை நம்பித்தான் என் குடும்பம் இருந்துச்சு. ஆனா, எந்த வருத்தத்தையும் காமிச்சுக்காம, திட்டாம என் செலவுக்குப் பணம் கொடுத்துட்டு இருந்தாங்க. 'நடிச்ச படம் ரிலீஸ் ஆகுமா, எப்போ ரிலீஸ் ஆகும், ரிலீஸ் ஆனாலும் ஓடுமா, அடுத்த பட வாய்ப்பு கிடைக்குமா?’னு மனசுக்குள்ள ஆயிரத்தெட்டு கேள்விகள். எதுக்குமே என்கிட்ட பதில் இல்லை. அப்போதான் 'அறிந்தும் அறியாமலும்’ பட வாய்ப்பு கிடைச்சது. படத்தை கடகடனு முடிச்சு ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிச்சாங்க. அப்படின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. சத்யம் தியேட்டரில் போய் உட்கார்ந்தேன். நிகழ்ச்சி ஆரம்பிக்கவும், 'தீப்பிடிக்க... தீப்பிடிக்க முத்தம் கொடுடா...’ பாடலை ஸ்கிரீன் பண்ணாங்க. என்னை நானே முதல்முறையா ஸ்க்ரீன்ல பார்க்கிறேன். சந்தோஷம், அழுகைனு ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்!''

''முதல் சம்பளம் எவ்வளவு?''

''300 ரூபாய். காலேஜ் படிச்சுட்டு இருக்கும்போதே, ஃபேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் போவேன். நான் ரொம்ப சுமாரான மாடல். அதனால 300 ரூபாய்தான் கொடுப்பாங்க. பெரிய மாடல்களுக்கு 1,000 ரூபாய். அப்போ ஸ்ரீகாந்த் என் சீனியர். அவர் காலேஜ் பியூட்டி. டான்ஸ், நாடகம்னு காலேஜ் கல்ச்சுரல் டீமுக்கு அவர்தான் கேப்டன். அதனால அவரைச் சுத்தி பொண்ணுங்களா இருக்கும். நான் ஃபுட்பால், கிரிக்கெட்னு ஸ்போர்ட்ஸ் டீம் கேப்டன். என்னைச் சுத்தி ஒரே பசங்களா இருப்பாங்க. அவரைப் பார்க்கும்போதெல்லாம் 'மனுஷன் வாழ்றான்யா’னு வெறுப்பா இருக்கும். ஆனா, விளம்பரத்துல நடிக்கணும்னு திரிஞ்ச என்னை, அவர்தான் சினிமா பக்கம் திருப்பிவிட்டார். நன்றி நண்பா!''

''சினிமா நண்பர்களிடம் ஈகோ இல்லாம இருக்கீங்க... எப்படி?''

''எப்ப ஈகோ ஆரம்பிக்குதோ, அப்பவே பிரேக் பண்ணிடணும். நான் உடைக்கச் சொல்றது நட்பை இல்லை... ஈகோவை!

ஒரு லைவ் நிகழ்ச்சியில் பேர் சொல்லாம நான் ஒருத்தரைப் பத்தி பேசினேன். 'கார்த்தியைப் பத்திதான் நான் பேசினேன்’னு தப்பா நியூஸ் பரவிருச்சு. இது எனக்குத் தெரியாது. கார்த்திக்கு தகவல் போயிருக்கு. அவர் உடனே கோபப்பட்டிருக்கலாம்; என்கூடப் பேசாம இருந்திருக்கலாம். ஆனா, அவர் செம கூல். உடனே எனக்கு போன் பண்ணி, 'என்ன மச்சான்... நான் உன்கிட்ட எதுவும் தப்பா பிஹேவ் பண்ணிட்டேனா?’னு கேட்டார். என்ன விஷயம்னு கேட்டு, 'அய்யோ... அது உங்களைச் சொல்லலை’னு நடந்ததைச் சொன்னேன். பிரச்னை முடிஞ்சது. 'எதுவா இருந்தாலும் அவங்ககிட்டயே கேட்டுருவோம்’னு அந்த ஒரு நொடி நட்புக்கு மரியாதை கொடுக்கிற குணம் இருந்துச்சே... அப்படி நட்பு இருந்தா, ஈகோவுக்கு வேலையே இல்லை!''

''சமயத்துல அவங்க பட புரமோஷனுக்கே வர மாட்டாங்க நயன்தாரா, த்ரிஷா. அவங்களை ஒரே மேடைக்குக் கூட்டிட்டு வர்ற அளவுக்கு உங்க ஃப்ரெண்ட்ஷிப்ல அப்படியென்ன ஸ்பெஷல்?''

''நட்பில் ரொம்ப சிக்கல் உண்டாக்கிக்காம, மனசுல இருக்கிறதை வெளிப்படையா சொல்லிட்டா போதும். நாம பேசுறது ஒண்ணு, மனசுல நினைக்கிறது ஒண்ணுனு இருந்தா ஒரு பாயின்ட்ல, 'ஓ..! இவன் இதைத்தான் ட்ரை பண்றான்’னு யாருக்கும் தெரிஞ்சிரும். என்கிட்டதான் அந்தப் பிரச்னையே இல்லையே!''

''கோபமாக இருக்கும் தோழியை எப்படிச் சமாதானம் பண்றது?''

''கோபமான பொண்ணையா? அதுக்கு மதம் பிடிச்ச யானையைக்கூட அடக்கிரலாம். நான் ரெண்டு மணி நேரத்துக்கு அந்தப் பக்கமே தலைவெச்சுப் படுக்க மாட்டேன். நாம ஏதோ பேசப்போய் அது சொதப்பி, அவங்க இன்னும் எகிற ஆரம்பிச்சிருவாங்க. நெருப்பு அணையுற வரைக்கும் அமைதியா இருங்க!''

''சினிமா நண்பர்கள் வட்டாரத்துல யாரை ரொம்பக் கிண்டல் பண்ணுவீங்க?''

''எங்க குரூப்ல விஷால்தான் பயங்கர கருத்து பார்ட்டி. சென்னை கிரிக்கெட் டீமுக்கு அவர்தானே கேப்டன். கிரவுண்ட்ல அநியாயம் பண்ணுவான். எதிர் டீம்ல ஒரு விக்கெட் விழுந்திருச்சுன்னா, எல்லாரும் ஒண்ணா கூடி வட்டமா நின்னு உற்சாகப்படுத்திக்கணும்ல... அப்போ, 'நாமல்லாம் புலி. எதிர் அணில இருந்து மான் வருது. அதைப் பாய்ஞ்சு வேட்டையாடணும். டார்கெட் மிஸ் ஆகக் கூடாது’னு பிசினஸ் கிளாஸ்ல ப்ளான் பேசுற மாதிரி என்னென்னமோ சொல்வான். அவன் அவ்ளோ சீரியஸா பேசும்போது காமெடி பண்ணக் கூடாதுனு சிரிப்பை அடக்கிட்டு அமைதியா இருப்போம். போட்டி முடிஞ்சதும், 'என்ன புலி... அது ஆண் மானா, பெண் மானா... புல்லுக்கட்டு போட்டு கவர் பண்ணியா? வேட்டை எப்படி?’னு மரணக் கலாய் கலாய்ச்சுருவோம்!''

''மறக்க முடியாத பாராட்டு?''

'' 'நான் கடவுள்’ ரிலீஸ் சமயம். 'சர்வம்’ பட பாட்டுக்காக குஜராத் மாநில எல்லையில் ஷூட்டிங் போயிட்டு இருக்கு. அங்கே செல்போன் சிக்னல் சரியா கிடைக்கலை. ஒரு லேண்ட்-லைன் நம்பர்ல இருந்து போன் வந்துட்டே இருக்கு. ஷூட் முடிச்சிட்டு திரும்பக் கூப்பிட்டா, 'இது ரஜினி சார் வீட்டு நம்பர்’னு பதில் வருது. 'பசங்க காமெடி பண்றாங்களோ’னு சந்தேகம். 10 நிமிஷம் கழிச்சு, ரஜினி சார் லைனுக்கு வந்தார். 'ஆர்யா, நான் ரஜினி பேசுறேன்... படம் பார்த்தேன். நல்லா பண்ணிருந்தீங்க. சென்னைக்கு வந்ததும் அவசியம் வீட்டுக்கு வாங்க’னு சொல்லி கட் பண்ணிட்டார். அவர் வீட்டுக்குப் போனா, பாபா, காசி, அகோரி பத்திலாம் அவ்வளவு டீட்டெய்லாப் பேசினார். மறக்க முடியாத பாராட்டு!''

- எஸ்.கலீல்ராஜா, படங்கள்: சு.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்