Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என் இனிய கதைநாயகிகள்! - 10 ''ஆண் எனும் பாறையை சிலையாக்குபவள் பெண்!'' திரையுலக பிரம்மாக்களின் ரீவைண்ட் தொடர்

குடும்ப பந்தங்களின் சிறப்பு, அன்பு, தியாகம் இவற்றை எடுத்துச் சொல்லும் படங்களை இயக்கவே மிகவும் பிடிக்கும். குடும்பங்களுக்கு பலமே பெண்கள்தான். என் எல்லா திரைப்படங்களிலும் கதைநாயகிகள்தான் கதைக்கு ஜீவன். அந்த வகையில், என் முதல் படமான 'புதுவசந்தம்’, தோழி என்ற உறவின் தூய்மையை போற்றுதற்கு உரியதாக எடுத்துச் சொல்லும் திரைப்படைப்பு. தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருது உட்பட, பல விருதுகளையும் பாராட்டுகளையும் என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது, 'புது வசந்தம்’.

90-களில், இன்று போல ஆண் - பெண் நட்பு சாத்தியமில்லாதது. நானும், என் நண்பர்களும் அறை எடுத்துத் தங்கியிருந்த அந்தக் காலத்தில், எனக்கு ஓர் ஆசை எழுந்தது. பாலினத்தைக் கடந்த நட்பாக, நண்பன் போல, தோழியும் கிடைக்கப்பெற்றால் எப்படி இருக்கும்? அவளும் நம்முடன் தங்கி, வறுமையைப் பகிர்ந்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சண்டை போட்டு... நினைக்கவே அழகாக இருந்தது. 'அதையெல்லாம் இந்தச் சமூகம் ஏத்துக்காது, தப்பா பேசும்’ என்றார்கள். 'சரி, நாலு ஆண்களின் நட்புலகில் வந்து இணையும் ஒரு பெண், அவர்களுக்கிடையில் மலரும் பரிசுத்தமான அன்பு, நண்பர்களை ஜெயிக்க வைக்கும் தோழியின் உறுதுணை... இப்படி ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும்?’ என்ற சிந்தனையில் உருவானதுதான், 'புது வசந்தம்’.

படத்தில் 'கௌரி’ பாத்திரத்தில் சித்தாரா நடித்திருப்பார். முரளி, ஆனந்த்பாபு, ராஜா, சார்லி இவர்களின் நட்புக்கூட்டில் ஒரு பறவையாக இணைவாள் 'கௌரி’. ஒரு கட்டத்தில் 'கௌரி’யின் காதலன், அவளை சந்தேகப்பட, 'காதலோட புனிதம் தெரியாத உன்கூட வாழறதை விட, நட்போட புனிதம் தெரிஞ்ச அவங்களோட வாழறதே மேல்!’ என்று, நண்பர்களின் இசைப் பயணத்துக்கு துணையாக நிற்பாள்.

ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்களுக்கு இடையேயான அந்த நட்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஊசி முனை அளவுகூட தடம் புரளாத ஆண் - பெண் நட்பு என்று விமர்சனங்கள் பாராட்டியபோது, ஆனந்தக் கண்ணீரில் நனைந்தேன். என் 'கௌரி’, ஆணும் பெண்ணும் கண்ணியமாக நட்புக்கொள்ள முடியும் என்பதற்கு, முன்னுதாரணமானவள்.

'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ 'ராதா’ (ரோஜா), திருட்டுத் தொழிலை கையில் எடுத்து, வாழ்க்கையின் போக்குத் தெரியாமல் இருக்கும் 'செல்வத்தை’ (கார்த்திக்) திருத்தி, அவனையே தன் வாழ்க்கைத் துணையாக ஏற்பாள். படத்தில் வரும் 'ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்’ பாடல், அப்போது பயங்கர ஹிட். க்ளைமாக்ஸில், 'செல்வத்தை’ விழா மேடைக்கு அழைக்கும் 'ராதா’, 'நான் விரும்பிய ஒருவர் (அஜித்), என்னை பிடிச்சிருக்கானு சொல்லவே மூணு மாசம் அவகாசம் கேட்டார். ஆனா, 'செல்வம்’ என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவர். நான் இந்த உயரத்துக்கு வரக் காரணம் செல்வம். அவர் என்னை விரும்புறார்னு தெரிஞ்ச பிறகு, அவரைத்தான் கணவரா தேர்ந்தெடுப்பேன்’னு சொல்லுவா. மனதைப் புரிந்து கொண்டவருக்கு வழித்துணையாக இருக்க முடிவெடுக்கும் ராதா, நன்றி மறவாதவள்... அன்பின் பிரதிநிதி!

'பிரியமான தோழி’ படத்தில் நாயகன் மாதவனின் தோழியாக வரும் ஸ்ரீதேவியைவிட, அவர் மனைவியாக நடித்த ஜோதிகாவின் கதாபாத்திர வார்ப்பு மீது எனக்கு மரியாதை அதிகம். 'நந்தினி’யாக நடித்த ஜோதிகா, தன் கணவருக்கும் அவர் தோழிக்குமான நட்பை மற்றவர்கள் தவறாகப் பேசுவதையெல்லாம் கண்டுகொள்ளாமல், துளியும் சந்தேகப்படாமல் இருப்பாள். ஒரு கட்டத்தில் அந்தத் தோழி விடுதியில் தங்கும் சூழ்நிலை வரும்போது, 'இவ இனி அனாதை இல்ல’ என்று கைபிடித்து தன் வீட்டுக்கு அழைத்து வருவார். வேறொரு பெண்ணிடம் பேசினால்கூட சந்தேகப்பட்டு விவாகரத்து வரை செல்லும் சில பெண்களுக்கு மத்தியில், கணவன் - மனைவி இடையே இருக்க வேண்டிய நம்பிக்கைக்கு 'நந்தினி’ உதாரணம்.

'சூரியவம்சம்’ படத்தின் 'நந்தினி'யை (தேவயானி) யாரும் மறக்க முடியாது. 'தேறாதவன்' என்று குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்படுவார் 'சின்னராசு' (சரத்குமார்). அவரை செதுக்கி, தொழிலதிபராக்கி, தானும் கலெக்டராக உயர்வாள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், வறுமையை தானும் ஏற்று, பிறந்த வீட்டை எதிர்பார்க்காமல், கணவனை ஜெயிக்க வைத்து. தானும் ஜெயித்த 'நந்தினி’, 'எங்களுக்கு என்னத்த செஞ்சீங்க..?’ என்று பிறந்த, புகுந்த வீட்டில் கேட்கும் பெண்கள் உள்வாங்க வேண்டியவள்.

மீபத்தில் வந்த என் திரைப்படம், 'நினைத்தது யாரோ’. நிமிஷா, நாயகி 'கவிதா’வாக நடித்திருப்பார். நான் படைத்ததில் நானே பிரமித்த கதாபாத்திரம், கவிதா. உதவி இயக்குநராக இருக்கும் ஒருவனை 'கவிதா’ காதலிப்பாள். காதலன், தான் செய்யாத தவறுக்கு சிறைக்குப் போக நேரிட, 'கவிதா’வின் சம்மதம் இல்லாமல் வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிடும். காதலன், குற்றவாளி இல்லைஎன நிரூபணமாகி விடுதலையாகும்போது, 'கவிதா’வின் திருமணச் செய்தி அறிந்து, குடிக்கு அடிமையாகிவிடுவான்.

தன் காதலனின் நிலையை அறிந்த 'கவிதா’, கணவனின் அனுமதியோடு சென்னை வந்து, விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டதாக பொய் சொல்லி, முன்னாள் காதலனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, அவனுக்கு எல்லா வகையிலும் நல்ல தோழியாக இருந்து, அவனை ஊர் மெச்சும் இயக்குநராக உயர்த்து வாள். முடிவில் 'கவிதா’வை அவன் மணக்க விருப்பம் தெரிவிக்கும்போது, உண்மையைச் சொல்லி, 'என்னை முழுதாக நம்பி, உன் வாழ்க்கையை மாற்ற வாய்ப்பளித்த என் கணவரோடு வாழவே நான் விரும்புகிறேன்’ என்று சொல்லி, கணவனோடு இணைவாள்.

'கவிதா’ போல, கணவனிடம் அனுமதி வாங்கும் சூழல் நம் சமுதாயத்தில் இல்லைதான். ஆனால், ஏதோ ஒரு வகையில் நம் மனதில் தங்கியிருந்தவர்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதையே 'கவிதா’ அழுத்தமாக பதிவுசெய்வாள்.

படத்தில், 'இந்தப் பாறையை சிலையாய் வடித்த என் தோழிக்கும் அவள் கணவனுக்கும் இந்தத் திரைப்படம் சமர்ப்பணம்!’ என காதலன் இயக்கிய படம் முடியும். பெண்கள், ஆண்களை எல்லா ரூபத்திலும் சிலையாய் வடித்துக்கொண்டிருப்பவர்கள். பெண்மையைப் போற்றுவோம்!

 

இயக்குநர் விக்ரமன், படங்கள்: ப.சரவணகுமார், ஞானம்

சந்திப்பு: பொன்.விமலா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்