வருவாரா.. அவர் வருவாரா?

தீபாவளி, திருவிழா, பொங்கல் மாதிரி ஒவ்வொரு வருடமும் 'ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்வியும் வந்துகொண்டுதான் இருக்கிறது. 'இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்’ என அரசியல் கட்சிகள் முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ, கடந்த சில வாரங்களாக 'ரஜினி எங்களுக்குத்தான்’ என காங்கிரஸும், பா.ஜ.கவும் இழுத்துப் பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சரி... 'ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?’ என அவருடைய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பேசி, 'ரஜினி ரசிகர்கள்’ என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் பேசியது அப்படியே!

ஜி.கார்த்திகேயன், திருநெல்வேலி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றத்தின் துணைச் செயலாளர்.

''என்னைப் பொறுத்தவரை தலைவரோட உடல்நலமும், மனஅமைதியும் ரொம்ப முக்கியம். தேவையில்லாம அரசியலில் அடியெடுத்து வெச்சுட்டு, இந்த இரண்டையும் இழந்து அவர் நிற்கிறதை நான் விரும்பலை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மத்தபடி தலைவர் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தா, கண்டிப்பா அதுவே என்னோட பாதையாகவும் இருக்கும். அரசியல் வேணாம்னு ஆன்மிகத்துக்குப் போனா, நானும் ஆன்மிகத்துல இறங்குவேன். ரஜினியோட முரட்டுத்தனமான ரசிகன் நான். அவர் அரசியலுக்கு வரணும்னு நான் கட்டாயப்படுத்த மாட்டேன். வந்தாலும், தடுக்க மாட்டேன்'' என்றவர், 'ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்’ என்பதையும் சொல்கிறார்.

'' 'லிங்கா’ படத்தோட ஷூட்டிங் பார்க்கப் போயிருந்தேன். தலைவர் தங்கியிருக்கிற ஹோட்டலுக்கு வெளியே ஏகப்பட்ட ரசிகர்கள் நிற்கிறாங்க. அவருடன் ஒரு போட்டோ எடுத்துட மாட்டோமானு கூட்டத்துல முட்டி மோதிக்கிட்டு இருந்தாங்க. இதைவெச்சுப் பார்க்கும்போது, அவர் அரசியலுக்கு வந்தா ஆட்சியைப் பிடிக்கிறதுக்கு 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கு. தனிப்பட்ட முறையில் கட்சி ஆரம்பிக்காம வேறு ஒரு கட்சியில் இணைந்து, அந்த கட்சியின் 'கிங் மேக்கரா’ இருந்தா முழு வாய்ப்பும் இருக்கு. அதனால் தலைவர் அரசியலுக்கு வந்தா, தனியா கட்சி ஆரம்பிக்க மாட்டார்ங்கிறது என்னோட ஆணித்தரமான கருத்து'' என்றார்.

கே.உலகநாதன், கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர்.

''தி.கவுல இருந்து அ.தி.மு.க. வரை தமிழ் நாட்டுல எந்த திராவிடக் கட்சிகளும் இருக்கக் கூடாது. திராவிடக் கட்சிகளால் தமிழ்நாட்டு மக்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிக்கிடக்குறாங்க. இவங்ககிட்ட இருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்கிறதுக்காக கண்டிப்பா தலைவர் அரசியலுக்கு வரணும். அவர் தேசிய அரசியல் பார்வை உள்ளவர். நல்ல ஆன்மிகவாதி. நேர்மையான மனிதர். கண்டிப்பா அவர் அரசியலுக்கு வந்தா, வித்தியாசமா ஆட்சி செய்வார். அவர் தனிக் கட்சிதான் ஆரம்பிக்கணும்கிறதுதான் எல்லா ரசிகர்களோட ஒருமித்த குரல். இதோ, கடந்த சில வாரமா 'ரஜினி அரசியலுக்கு வருகிறார்’னு பத்திரிக்கைகள் செய்தி போடவும், விடாம என்னோட செல்போன் ரிங் ஆகிட்டே இருக்கு. எல்லோரும் சொல்ற வார்த்தை, ரஜினி அரசியலுக்கு வரணும்கிறதுதான்'

கோ.தாயுமானவன், திருவாரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்.

''தமிழ்நாடு இன்னைக்கு அசாதாரணமான அரசியல் சூழலில் இருக்கு. செய்த தவறுக்கு தண்டனையாக ஜெயலலிதா ஜெயில்ல இருக்கார். 'எரியிற வீட்டுல புடுங்கினது லாபம்’கிறது எங்கள் தலைவரோட மனநிலை இல்லை. ஜெயலலிதாவின் சிறைத் தண்டனையை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக்கிட்டு அவர் அரசியலுக்கு வர்ற ஆள் கிடையாது. இது என்னுடைய பார்வையில் தலைவரின் மனநிலை. அதேசமயம் அவர் அரசியலுக்கு வந்தா 'சிங்கம் சிங்கிளாதான் வரும்’. தவிர, வேறு கட்சிகள்ல தன்னை இணைச்சுக்கிட்டாலும் நதிநீர் இணைப்பு, கச்சத்தீவை இந்தியாவுடன் இணைத்தல், மீனவர்களுக்கான பாதுகாப்பு என்று தமிழர்களின் தலையாயத் தேவைகளை கோரிக்கையாக வைத்தே இணைவார். தலைவர் எந்த முடிவை எடுத்தாலும் நாங்க ஏற்றுக்கொள்ள ரெடியா இருக்கோம்'' என்றார்.

மூணு பேரு மூணு விதமாப் பேசுறாங்களே!

கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!