அந்த பாலுமகேந்திரா ‘கிளிக்...’ - ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுச்சு | அந்த பாலுமகேந்திரா ‘கிளிக்...’ - ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுச்சு அப்பாவுடன் கடைசி இரவு... பழைய கார்கள் பிடிக்குதே!,விஜய் சேதுபதி, விஜய், சூர்யா, ஶ்ரீஜா, விஜய் சேதுபதி பேட்டி

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (19/10/2014)

கடைசி தொடர்பு:13:30 (19/10/2014)

அந்த பாலுமகேந்திரா ‘கிளிக்...’ - ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுச்சு

அப்பாவுடன் கடைசி இரவு... பழைய கார்கள் பிடிக்குதே!

விஜய் சேதுபதி 'இதுவரை சொல்லாத’ ஷேரிங்ஸ்....

முதல் வேலை!

''காலேஜ்ல படிச்சுட்டு இருக்கும்போதே மூணு வேலைகள் பார்த்தேன். அண்ணா நகர் ஹைஸ்டைல் ரெடிமேட் ஷோரூமில் சேல்ஸ்மேன், ராத்திரி கோடம்பாக்கம் ஃபாஸ்ட்புட் கடையில் சப்ளையர், அப்புறம் ஒரு ஆடிட்டர் ஆபீஸில் அசிஸ்டன்ட்... நடுவுல ஒரு கார் கம்பெனியில் சர்வே வேலை வந்துச்சு. ஒரு சர்வே ஃபார்ம் நிரப்பிக் கொடுத்தா... 100 ரூபாய். 10 ஃபார்ம் நிரப்பினா 1,000 ரூபாய். ஒரே நாள்ல சொளையா 1,000 ரூபாய் சம்பாதிச்சுடலாமேனு தோணுச்சு. ஆனா, ஒரு ஃபார்ம் நிரப்புறதுக்குள்ள நான் பட்டபாடு இருக்கே... ஃபார்ம்ல 50 கேள்விகள் இருக்கும். கார் வெச்சிருக்கிறவங்ககிட்ட அவங்க கார் நம்பர், குடும்ப உறுப்பினர்கள், சம்பளம், சராசரி மாச டிராவல், பெட்ரோலுக்கு பட்ஜெட்னு ஏகப்பட்ட விவரங்கள் கேட்கணும். கேள்விகளைப் பொறுமையா காதுகொடுத்துக் கேட்டாலும் யாரும் அவ்வளவு தகவல் தரத் தயாரா இல்லை. டார்ச்சராகி வேலையை விட்டுட்டேன். அப்புறம் ரெடிமேட் கிச்சன் கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேலை பார்த்தேன். அது கொஞ்ச நாள் ஓடுச்சு!''

ஒரு கடிதம்!

''2000-ல் துபாய்க்கு வேலைக்குப் போனேன். அப்பா காளிமுத்து, அம்மா சரஸ்வதி, தங்கச்சி ஜெயஸ்ரீ எல்லோரையும் விட்டுப் பிரிஞ்சிருந்தது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. சம்பளப் பணத்தை டி.டி எடுத்து வீட்டுக்கு அனுப்புவேன். அப்படி அனுப்பின ஒரு கவரில் ஏழு பக்கத்துக்கு ஒரு கடிதம் எழுதிவெச்சேன். நான் எழுதின முதல் கடிதம் அது. 'துபாய் எப்படி இருக்கு, நம்ம ஊருக்கும் துபாய்க்கும் என்ன வித்தியாசம்னு ஆரம்பிச்சு, உங்களைப் பிரிஞ்சிருக்கிறது வேதனையா இருக்கு’னு செம ஃபீலிங்ஸ் லெட்டர். அதுல என் தங்கச்சி மேல எனக்கு இருக்கிற பிரியமும் பாசமும் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரியும்!''

எத்தனை காதல்கள்?

''நாலாம் வகுப்பில் தொடங்கி வரிசையா பலரைக் காதலிச்சிருக்கேன். 10-வது படிக்கும்போது காலேஜ் படிச்ச ஒரு அக்காவைக் காதலிச்சேன். ஆனா, அதெல்லாம் காமெடி. அப்புறம் வேலைபார்த்துட்டு இருந்தப்பதான் என் மனைவி ஜெஸ்ஸியைச் சந்திச்சேன். காதலிச்சோம்... கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!''

எது பொக்கிஷம்?

''சின்மா சான்ஸ் தேடி அலைஞ்சுட்டு இருந்த காலம். 'அனல் காற்று’னு ஒரு படம் எடுக்கப்போறதா பாலுமகேந்திரா சார் ஒரு பேட்டியில் சொன்னார். நானும் 'அட்டகத்தி’ தினேஷ§ம் அதில் நடிக்க வாய்ப்பு கேட்டு அவரைப் போய்ப் பார்த்தோம். 'உங்க கண்ணு நல்லா இருக்கு விஜய். உங்களை ஒரு போட்டோ எடுக்கிறேன்... நாளைக்கு வாங்க’னு சொன்னார். மறுநாள் போனப்ப, எங்க ரெண்டு பேரையும் போட்டோ எடுத்தார். அதில் ஒரு காப்பியை என்கிட்ட கொடுத்துட்டு, 'நான்  இப்போ படம் எடுக்கலை. ஆரம்பிக்கும்போது உங்களைக் கூப்பிடுறேன்’னு சொல்லி அனுப்பிட்டார். என்னை பாலுமகேந்திரா சார் எடுத்த அந்தப் புகைப்படம் என் லைஃப்டைம் பொக்கிஷம்!''

மறக்க முடியாத நாள்!

''2009, டிசம்பர் 24. 'ராவனம்’னு ஒரு குறும்படம் நடிச்சுட்டு இருந்தேன். கார்த்திக் சுப்புராஜ்தான் இயக்குநர். போலீஸ் அனுமதி எல்லாம் வாங்கி மாம்பலம் சப்வேயில் ஷூட்டிங் போயிட்டு இருந்துச்சு. அது கடைசி நாள் ஷூட். ராத்திரி 12 மணிக்கு  அம்மாகிட்ட இருந்து போன்... 'அப்பா உடம்பு ஜில்லுனு ஐஸ் மாதிரி ஆயிருச்சுடா’னு சொன்னாங்க. ஷூட்டிங் முடிச்சுட்டுப் போயிடலாம்னு முயற்சி பண்றேன்.... முடியலை. ஒரு எக்ஸ்பிரஷனும் வரலை. 'ஸாரி கார்த்தி... முடியலை’னு சொல்லிட்டு, கிளம்பி வீட்டுக்குப் போயிட்டேன். ராத்திரி முழுக்க ரொம்ப சிரமப்பட்ட அப்பா காலையில் இறந்துட்டார். என் லைஃப்ல கொடுமையான இரவு அது. சரியா ஒரு வருஷம் கழிச்சு 2010, டிசம்பர் 24... 'தென்மேற்கு பருவக்காற்று’ படம் ரிலீஸ் ஆச்சு. 'நல்லா நடிச்சிருக்கான் பையன்’னு பாராட்டும், '2011-ம் ஆண்டின் சிறந்த அறிமுக நடிகருக்கான விகடன் விருது’ம் கிடைச்சது. என் சினிமா கேரியர் ஆரம்பிச்சது. ஆனா, நான் ஹீரோ ஆனதைப் பார்க்கத்தான் அப்பா இல்லை!''

மறக்க நினைக்கும் சம்பவம்!

வெற்றிக்கு எல்லாத்தையும் மறக்கடிக்கிற சக்தி உண்டுதான்... ஆனா, சில அவமானங்களைத் தவிர! ஒரு இயக்குநர், 'இவர்தான் ஹீரோ’னு ஒரு கேமராமேன்கிட்ட அறிமுகப்படுத்திட்டுப் போயிட்டார். 'கறுப்பா இருந்தாலே போதும்... ஹீரோ ஆகிடலாம்னு நினைச்சு வந்துட்டியா? நீயெல்லாம் ஹீரோ ஆக முடியாது’னு முகத்துல அடிச்ச மாதிரி பேசினார். 'ஏன் அப்படிப் பேசினார்?’னு இன்னைக்கு வரை எனக்குத் தெரியலை. உடனே, 'உன் கண் முன்னாடி நான் ஹீரோவாகிக் காட்டுறேன்’னு சபதம் போடலை. வேலையை மட்டும் சின்சியரா பார்த்துட்டே இருந்தேன். நான் ஹீரோ ஆகிட்டேன். அந்த கேமராமேன் சார் இப்போ என்ன செய்றார்னு தெரியலை!''

மிஸ் பண்ணும் நபர்!

''அப்பாதான்! பையன்ல இருந்து ஆம்பளையா மாறுற பருவத்தில் கிருதா மீசை வெச்சுக்கிட்டு, 'எப்படி இருக்கேன்... பார்த்தியா?’னு அவர் முன்னாடி நின்னேன். 'டேய்... சூப்பர்டா’னு பாராட்டினார். 'இப்படியும் இருக்கலாம்’னு ஒரு கதை எழுதினேன். 'நல்லா எழுதியிருக்கேடா’னு தட்டிக்கொடுத்தார். நான் எது  செஞ்சாலும் வஞ்சமே இல்லாம பாராட்டுவார் சார் மனுஷன். என் முதல் ரசிகன் சார் அவர். என்னை எப்பவுமே ஹீரோவாப் பார்த்த என் முதல் ஹீரோ சார்!''

அது ஏன் பழைய கார்களையே பயன்படுத்து கிறீர்கள்?

''அது என்னமோ தெரியலை... பழைய கார்கள்தான் பிடிச்சிருக்கு. என் மனைவிக்கு புது கார்தான் பரிசா வாங்கிக் கொடுத்தேன். ஆனா, எனக்குப் பழைய கார்கள்தான் செட் ஆகுது. அதுல ஒரு ஆன்மா, கேரக்டர் இருக்குனு தோணுது. ரெண்டு கண்கள், வாய்னு பழைய கார்களோட பேனல் கிட்டத்தட்ட மனுஷ முகம்போல, ஏதோ நம்மளைப் பார்த்துச் சிரிக்கும். அதைத்தான் கேரக்டர்னு சொல்றேன். அது எனக்குப் பிடிச்சிருக்கு. 1970-ம் ஆண்டு மாடல் பென்ஸ் கார் தேடினேன்; கிடைக்கவே இல்லை. 1990-ம் ஆண்டு மாடல் பென்ஸ் வாங்கி ரெடி பண்ணி இப்ப ஓட்டிட்டு இருக்கேன். 70-களில் வந்த ஜாவா பைக் இப்ப என்கிட்ட இருக்கு!''

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்!

'முதல் மரியாதை’ படத்தில் வரும் 'வெட்டி வேரு வாசம்’. அப்புறம் 'ஹேராம்’ல 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’!

கனவிலும் பயமுறுத்துவது?

''டான்ஸ்! ஒன்றரை வருஷம் சரவணன் மாஸ்டர்கிட்ட டான்ஸ் கிளாஸ் போனேன். பேட்ச்ல நல்லா டான்ஸ் ஆடுறவங்களை விட்டுட்டு, என்னை மாதிரி ஆடத் தெரியாதவங்களை ஃபோக்கஸ் பண்ணி பயிற்சி கொடுத்தார். ரொம்ப சின்சியர் மாஸ்டர். ஆனா அவரே, 'ஏன் சார் பணத்தை இப்படி வீணாக்குறீங்க?’னு சொல்லி என்னை அனுப்பிட்டார். டான்ஸ் கத்துக்கணும்!''

கெட்ட பழக்கம்!

''சிகரெட்! ரொம்ப மோசமான பழக்கம். கண்டிப்பா விடணும். நிறையக் குறைச்சுட்டேன்; சீக்கிரமே விட்ருவேன்!''

படம் இயக்குவீர்களா?  

''ஆசை இருக்கு; தைரியம் இல்லை!''

யாருக்கு கதை சொல்வீங்க?

''என் பசங்க சூர்யா, ஸ்ரீஜாகிட்ட. அவங்க குழந்தையா இருக்கும்போது எப்படிக் குட்டியா இருந்தாங்க, கண்ணு எப்படி இருந்துச்சு, எப்படிப் பார்ப்பாங்க, என்னல்லாம் சேட்டை பண்ணுவாங்கனு இதுவரை 100 தடவையாச்சும் சொல்லியிருப்பேன். ஒவ்வொரு தடவையும் சலிக்காமக் கேட்பாங்க. அப்போ அவங்க முகங்களைப் பார்க்கணுமே... உய்யய்யய்யய்யோ நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் சார்!''

- டி.அருள் எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன், ஓவியங்கள்: ஸ்யாம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close