“ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி!” | “ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி!” , ரஜினி, சந்தானம், சந்தானம் பேட்டி, லிங்கா, அனுஷ்கா, ஆர்யா, நயன்தாரா, உதயநிதி, சிம்பு

வெளியிடப்பட்ட நேரம்: 20:33 (19/10/2014)

கடைசி தொடர்பு:20:33 (19/10/2014)

“ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி!”

'' 'சூப்பர் ஸ்டாரை இப்போ பார்க்கிறப்ப 'தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் பார்த்த மாதிரி இருக்கார். ஒவ்வொரு நாளும் செம வெரைட்டி காஸ்ட்யூமில் வந்து நிப்பார்.  'அப்படியே ஒரு குர்தா போட்டீங்கனா, நேரா டெல்லிக்குப் போயிடலாம்ணே’னு நான் சொல்வேன். 'யே... நீ சும்மாவே இருக்க மாட்டியா?’னு அதட்டிட்டு 'ஹாஹாஹா’னு சிரிப்பார். உலகம் ஆரம்பிச்சதுல இருந்து நேத்து நடந்த விஷயம் வரைக்கும் எல்லாமே பேசுவார். எனக்கென்னவோ ரஜினி சாரோட நடிக்கிறப்ப ஆர்யா, ஜீவாகூட நடிக்கிற மாதிரி ஒரு ஃப்ரெண்ட்லி ஃபீலிங்!'' -  எதைப் பற்றி கேட்டாலும், ஏதோ ஒரு புள்ளியில் 'லிங்கா’ அனுபவம் பகிர்கிறார் சந்தானம்.

'' 'லிங்கா’ ஷூட்டிங் ஸ்பாட் காமெடிகளை வெச்சே செம ஸ்கிரிப்ட் பண்ணலாம். கர்நாடக மாநிலம் சிமோகாவில் ஷூட்டிங். பெங்களூருல இருந்து தினமும் ஆயிரம் ரசிகர்களாவது கிளம்பி வந்து, நாங்க தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிர்ப்புறம் உட்கார்ந்துப்பாங்க. எவ்வளவு நேரம் ஆனாலும் ரஜினி சாரை தூரத்தில் இருந்தாவது பார்த்துட்டுத்தான் போவாங்க. ஒருநாள் காலையில் பார்த்தா, திடீர்னு என் ரூம் முன்னாடி ரஜினி சார் நின்னுட்டு இருக்கார். 'என்னண்ணே அதுக்குள்ள பக்காவா ரெடி ஆகிட்டீங்க?’னு விசாரிச்சுட்டே பக்கத்துல போனா, அது ரஜினி இல்லை; அவரை மாதிரியே மேக்கப் பண்ணிட்டு வந்த ரஜினி ரசிகன். பேச்சு, ஸ்டைல் எல்லாம் அப்படியே அச்சு அசல் ரஜினி. நான் ஷாக்காக, ரஜினி சார் என்னைவிட அதிர்ச்சியாக, அதைப் பார்த்து டூப்ளிகேட் ரஜினி சிரிக்க... ஒரே அல்லோலகல்லோலம்தான்!''

''ரஜினிகிட்ட இருந்து என்ன நல்ல விஷயங்கள் கத்துக்கிட்டீங்க?''

''ஆன்மிகம் பத்தி பேசினா, நேரம் போறதே தெரியாது. மனசுக்குள்ள ரொம்ப நாளா குடாய்ஞ்சுட்டு இருக்கிற விஷயங்களைப் பத்தி அவர்கிட்ட பேசுவேன். 'இதுக்கு இதுதான் தீர்வு, உபாயம்’னு எந்தக் கேள்விக்கும் லாஜிக்கலா சரியான பதிலைச் சொல்வார். ஒரு தடவை, 'அசைவம் சாப்பிட்டா தப்பு, மது குடிச்சா தப்புனு சொல்றாங்களே... உண்மையில்  தப்புன்னா என்னண்ணே?’னு கேட்டேன். 'கண்ணா... வாழ்க்கையில் எதுவுமே தப்பு கிடையாது. நீ எந்த ஒரு விஷயத்தைப் பண்ண பிறகு, 'சே... என்னடா இப்படிப் பண்ணிட்டோமே?’னு யோசிச்சு வருத்தப்படுறியோ, அப்போ அது தப்பு. அதைத் தவிர மத்த எல்லாமே கரெக்ட்’னு சொன்னார்.  'நாம நினைக்கிறது எல்லாமே தப்பாவே இருக்கேண்ணே’னு கேட்டேன். 'அப்ப எல்லாமே நீ தப்பாதான் நினைக்கிற’னு  சிரிச்சார். இப்படி சீரியஸ் விவாதங்கள் கலகல காமெடியாவும் முடியும்!''

''கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் இப்போதானே நடிக்கிறீங்க... 'கேக்கிறவன் கேனையனா இருந்தா கேரம்போர்டைக் கண்டுபிடிச்சது கே.எஸ்.ரவிகுமார்னு சொல்லுவியா?’னு 'ஓ.கே ஓ.கே’ல நீங்க அடிச்ச பன்ச், பத்தி அவர் என்ன சொன்னார்?''

''அவரை 'மாஸ்டர் டைரக்டர்’னு  ஏன் சொல்றாங்கனு, வேலை பார்க்கும்போதுதான் தெரியுது! நிலவரம் எத்தனை கலவரமா இருந்தாலும், சட்சட்னு முடிவு எடுத்து வேலையை முடிச்சிடுவார். செம சீரியஸ் மூட்ல வேலை நடந்துட்டு இருக்கும்போது, நாம ஏதாவது ஒண்ணு சொன்னா, எல்லாரும் வெடிச்சு சிரிப்பாங்க. உடனே ரவி சார், 'டேய்... வேலை செய்ய விடுறா’ம்பார். அவர் என்னைவிட ஜாலியான ஆள். ஆனா, வேலைனு வந்துட்டா சூப்பர் ஸ்டார்ல இருந்து லைட்மேன் வரைக்கும் எல்லாரோட நேரத்துக்கும் மதிப்பு கொடுப்பார். பழகப் பழக என்னோட ரொம்ப செட் ஆகிட்டார். ஒருநாள் திடீர்னு, 'உன்னை இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டேன்டா’னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு.

திடீர்னு ஒருநாள் அந்த கேரம்போர்டு வசனத்தை ஞாபகப்படுத்தி, 'ஏன்டா சம்பந்தமே இல்லாம என்னை இழுத்துக் கலாய்ச்ச?’னு கேட்டார். 'இல்ல சார்... 'கே’னாவுக்கு 'கே’னா ரைமிங். 'கே.ஆர்.விஜயா’னு பேசலாம்னா, அவங்க ஃபீல்டுலயே இல்லை. நீங்கதான் கரன்ட்ல இருக்கீங்க. அதான்’னு சொன்னேன். சிரிச்சுட்டார்!''  

'' 'ஹீரோ’ அறிமுகத்துல நல்ல பேர் வாங்கிட்டீங்க. உங்க 'ஹீரோ ஃப்ரெண்ட்ஸ்’லாம் என்ன சொன்னாங்க?''

'' 'கிளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் காமெடி வெச்சிருக்கலாமே. ரசிகர்கள் உன்கிட்ட அதுதானே எதிர்பார்ப்பாங்க. எதுக்கு கீழ விழுந்து, அடி வாங்கி ரத்த மேக்கப்லாம் போட்டுக்கிட்டு’னு சொன்னார் சிம்பு. அதையே ஜாலியா சொன்னான் ஆர்யா. 'மச்சான் எப்பவும் வல்லவனுக்கு ஃபுல், ஆஃப், குவார்ட்டர்தான் ஆயுதம்னு சொல்லி நடிப்ப. இதுல எதுக்கு ஓவர் எமோஷன்? ஜாலி, கேலிதானே நம்ம பாலிசி. அதை விட்டுட்டு அடிவாங்குற மாதிரி நடிச்சு... நமக்கு எதுக்கு மச்சான் அதெல்லாம்?’னான். 'ரசிகர்கள் படத்தில் வித்தியாசமான சந்தானத்தைப் பார்த்தோம்னு பாராட்டுறாங்க மச்சான்’னேன். 'ஒவ்வொரு ரசிகரும் உன்கிட்ட வந்து அப்படிச் சொன்னாங்களா?’னு விரட்டி விரட்டி வரட்டி தட்டிட்டான். 'ஏங்க... இவ்வளவு நாளா என் டான்ஸுக்கு நீங்கதான் சரியான உடான்ஸா இருந்தீங்க. இப்ப நீங்களே வெறித்தனமா வெரைட்டியா ஆடி வெச்சிருக்கீங்களே... இனி நான் எப்படிங்க உங்ககூட சேர்ந்து ஆடுறது?’னு சொன்னார் உதயநிதி!''

''ஹீரோயின்களும் கமென்ட் பண்ணியிருப்பாங்களே!''

'' 'அந்தச் செல்லக்குட்டி, பட்டுக்குட்டி பாட்டுல காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல், நடன அசைவுகள்னு எல்லாமே ஹீரோ லுக்குல இருந்துச்சு’னு சொன்னாங்க நயன்தாரா.  'படத்தில் நான் ஹீரோதாங்க... ஹீரோ, ஹீரோ லுக்லதானே இருப்பார்’னு சொன்னேன். 'அப்படி இல்லைங்க... ஹீரோ மெட்டீரியல் ஆகிட்டீங்கனு சொன்னேன்’னாங்க. 'மெட்டீரியல், சுத்தியல்னு ஏதோ ஸ்பேர் பார்ட்ஸ் மாதிரி சொல்றீங்க’னு திரும்பவும் கவுன்ட்டர் தந்தேன். 'இப்ப உங்களை நான் பாராட்டணுமா... வேண்டாமா?’னு காண்டாகிட்டாங்க. அனுஷ்காவும் நிறைய விஷ் பண்ணிட்டு, 'அடுத்த படம் நாம பண்ணலாம். நல்ல கதை இருந்தா சொல்லுங்க’ன்னாங்க. 'அடுத்து ராஜேஷ் டைரக்ஷன்ல ஆர்யாகூட படம் பண்றேன். அதுல எனக்கு ஹீரோயின் தேடுறாங்க. நீங்க பண்றீங்களா?’னு உடனே கேட்டுட்டேன். 'அனுஷ்காவை ஜோடியா கமிட் பண்ணாத்தான் நான் படத்தில் நடிப்பேன்’னு சொல்லிடுங்க. நடிச்சிடுவோம்’னாங்க. அப்போ 'லிங்கா’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரஜினியைப் பார்க்க வந்திருந்தார் இயக்குநர் ராஜேஷ். அவர்கிட்ட, 'சார், எனக்கு ஹீரோ யின் கிடைச்சுட்டாங்க. இவங்கதான்’னு அனுஷ்காவை அறிமுகப்படுத்தினேன். டரியல் ஆகிட்டார்!''

''அனுஷ்கா ஹீரோயினா... வாழ்த்துகள். 'லொள்ளு சபா’ டீமோட டச்ல இருக்கீங்களா?''

''தாய் வீட்டை மறக்க முடியுமா! 'நண்பேண்டா’வுல நம்ம மனோகர் நடிக்கிறார். உதயநிதி ஹீரோங்கிறதால அவரை இம்ப்ரஸ் பண்றதா நினைச்சு, 'நான் ஆரம்ப காலத்தில் இருந்தே டி.எம்.கே-ல இருக்கேம்பா’னு கையைச் சுத்திட்டே சொன்னார். சட்டுனு ஃப்ளாஷ் அடிக்க உதயநிதிகிட்ட கண்ணடிச்சிட்டு, 'ஒரு நிகழ்ச்சிக்கு 100 உடன்பிறப்புகளைக் கூட்டிட்டு வந்து எல்லார் முதுகுலயும் உதயசூரியன் சின்னத்தைப் பச்சை குத்தப்போறதா பேசிட்டு இருந்தீங்கள்ல... அதுல அண்ணனையும் சேர்த்துக்கங்க பிரதர்’னேன். நிஜமாவே பச்சை குத்திடுவாங்களோங்கிற பயத்துல, ரெண்டு நாள் ஸ்பாட்டுக்கே வரலை மனோகர்.

அப்புறம் ஒருநாள் ராத்திரி ஷூட்டிங். மனோகர் மயக்கம் போட்டு ரோட்ல விழணும். ரோட்ல படுத்தவர், தூங்கிட்டாரா என்னன்னுகூடத் தெரியலை. நாங்க அடுத்த சீன் எடுக்க பக்கத்துத் தெருவுக்குப் போயிட்டோம். ஆனா, அவர் படுத்தே கிடந்திருக்கார். தெருவுல அநாதையாப் படுத்துக்கிடந்த அவரைப் பார்த்துட்டு, 'பார்றா... டி.வி-ல வர்றவர் குடிச்சிட்டு ரோட்ல படுத்துக்கிடக்குறார்’னு ரெண்டு பேர் எழுப்பிவிட்ருக்காங்க. இப்படி ஒருத்தர் பக்கத்துல இருந்தா, நம்ம சந்தோஷத்துக்கும் உற்சாகத்துக்கும் கேக்கவா வேணும்!''

 

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்