ஸ்டார்ட்...கேமரா... மியூசிக்! | ஸ்டார்ட்...கேமரா... மியூசிக்!'தென் மேற்கு பருவக்காற்று’, 'பரதேசி’, 'தாரை தப்பட்டை’ , ஒளிப்பதிவாளர் செழியன். உலக சினிமா , 'தி மியூசிக் ஸ்கூல்’, இசைப் பள்ளி , செழியன், செழியன் பேட்டி,

வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (24/10/2014)

கடைசி தொடர்பு:13:04 (24/10/2014)

ஸ்டார்ட்...கேமரா... மியூசிக்!

'தென் மேற்கு பருவக்காற்று’, 'பரதேசி’, அடுத்து பாலா இயக்கும் 'தாரை தப்பட்டை’ உள்ளிட்ட  படங்களின் ஒளிப்பதிவாளர் செழியன். உலக சினிமா பற்றி் எழுதியவர், சிறுகதைப் போட்டிகளில் பரிசும் வென்றவர் என்று செழியனுக்குப் பலமுகங்கள். இப்போது 'தி மியூசிக் ஸ்கூல்’ என்ற பெயரில் இசைப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். இசை பற்றி 10 புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.

'என் சொந்த ஊர் சிவகங்கை. குடும்பத்தில் எல்லோரும் ஆசிரியர்கள். தவிர அப்பா, சுவரில் வரையும் ஓவியர். அம்மா முறைப்படி இசை படித்தவர். அப்பாவும் பாடுவார். எங்கள் வீட்டில் புல்புல்தாரா என்ற இசைக்கருவியை என் சின்ன வயசில் இருந்தே பார்த்திருக்கேன். நான் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் டிகிரி படித்தேன். அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகும் ஆசையில் சென்னை வந்து, முடியாமல் மீண்டும் ஊருக்கே போனேன். அங்கே போட்டோகிராஃபி கற்றுக்கொண்டேன்.

அப்போதெல்லாம் ஃபிலிம் ரோலை மதுரையில் வந்து பிரின்ட் போடுவோம். உடனே கிடைக்காது. மூணு, நாலு மணி நேரம் ஆகும். அதுவரைக்கும்  சும்மா மதுரையைச் சுத்தி வருவேன். அப்படி ஒரு முறை ஷாஜகான் கனி என்பவரை மேன்ஷனில் பார்க்கப் போயிருந்தேன். அப்போ அவர் ரூம் பக்கத்துல இருந்து ஆர்மோனியம் சத்தம் கேட்டது. ஷாஜகான் கனிகிட்ட கேட்டப்போ அங்க நூர் பாஷா என்ற ஒரு இசை ஆசிரியர் இருக்கார்னு சொன்னார்.

நான் அந்த இசை ஆசிரியரிடம் போய் இசை கத்துக்கணும்னு சொன்னேன். அவர் 'ஓர் ஆர்மோனியப் பெட்டி வாங்கிட்டு வா’னு சொன்னார். அப்போ அதோட விலை எனக்குப் பெரிய தொகை. வாங்க முடியாத நிலைமையைச் சொன்னேன். அப்போ அவர் சொன்ன வாசகம் சிலிர்ப்பானது. 'வித்தையைக் கைகாட்டின கடவுள் கருவியை ஒளிச்சுவைக்க மாட்டான். உனக்குக் கிடைக்கும். இப்போ இதை வாசி''னு அவரோட ஆர்மோனியத்தை வாசிக்கச் சொன்னார்.

இந்த விஷயம் ஷாஜஹான் கனிக்குத் தெரியாது. கொஞ்ச நாள் கழிச்சு என்னைக் கூப்பிட்ட கனி, 'என் வீட்டுல ஓர் ஆர்மோனியம் இருக்கு. வேணும்னா எடுத்துக்க’னு சொன்னார். நூர் பாஷா சொன்ன வார்த்தை இவ்வளவு சீக்கிரம் பலிக்குதேனு எனக்கு ஆச்சர்யம்.

நான் சந்தோஷமா அதைக் கொண்டுபோய் வீட்டுல வச்சு பிரிச்சு வார்னிஷ் பெயின்ட் எல்லாம் அடிச்சு மறுபடியும் இணைத்து ரெடி பண்ணினேன். என் குரு நூர் பாஷா முன்னால் வாசிக்கப் போனால், ஆர்மோனியத்தில் இருந்து சத்தமே வரலை. அவர் வாசிச்சும் சத்தம் வரலை. எனக்கு பயங்கர ஷாக்.

'ஆர்மோனியத்துக்கும் ஆன்மா இருக்கும் போல, பிரிச்சுப் போட்டா போயிடுமோ?’னு எனக்கு ஓர் உணர்வு வந்தது. நடந்த விஷயங்களை அப்படியே ஹார்மோனியம் என்ற பேர்ல ஒரு கதையா எழுதினேன். இந்தியாவின் எல்லா மொழிகளில் இருந்து வருடம் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து  சிறந்த சிறுகதைக்கான பரிசு வழங்கும் டெல்லியைச் சேர்ந்த கதா என்ற அமைப்பு, அந்தக் கதையை அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்தது.

என் இசை ஆர்வத்தைப் பார்த்த நூர் பாஷா என்னை லண்டன் டிரினிட்டி ஸ்கூல் இசை தேர்வு முதல் கிரேட் எழுதச் சொன்னார். நானும் விண்ணப்பிக்கப் போனேன். அதில் மொத்தம் எட்டு கிரேடு. முதல் கிரேடுக்கு ஃபீஸ் 2,000 ரூபாய். மூணாவது கிரேடுக்கு 2,300, அஞ்சாவது கிரேடுக்கு 2,600 னு போட்டு இருந்தது. 600 ரூபாய் அதிகம் கட்டினா, நேரிடையா அஞ்சாவது கிரேடு எழுதலாம்னு அப்ளை பண்ணிட்டேன். ஆக்சுவலா அப்படி பண்ணக் கூடாது.

என்ன ஆச்சர்யம்னா எடுத்த உடனே அஞ்சாவது கிரேடு எழுதின நான் பாஸ் பண்ணிட்டேன். நூர் பாஷாகிட்ட போய் சொன்னப்போ பாராட்டினார். அதன் பிறகு இசை என் கூடவே வந்தது.  

மறுபடியும் சென்னை வந்து வேறுவேறு பாதைகளில் பயணித்து கேமராமேன் ஆகிட்டேன். ஆனாலும் இசை மீதான ஆர்வமும் தாகமும் இருந்தது. அதனால்தான் இசைக்குறிப்புகள் பற்றிப் பத்து பாகங்கள் எழுதி முடிச்சேன்.

ஆனால் எனக்கு இசையமைப்பாளர் ஆகும் எண்ணம் இல்லை. அதுக்குப் பதிலா இசை கத்துக்கொடுக்க ஒரு பள்ளி ஆரம்பிச்சிட்டேன். அதை என் மனைவி நிர்வகிக்கப்போறாங்க. அவங்களும் இசை படிச்சு இருக்காங்க. மேலும் சென்னை சாலிகிராமம் கரியப்பா பள்ளியில் உள்ள பத்து மாணவிகளுக்கு இலவசமா இசை கத்துத்தரவும் போறேன். சந்தோஷமா இருக்கு' என்கிறார் செழியன்.

எங்களுக்கும் சந்தோஷம்தான். வாழ்த்துகள் செழியன்!

சு.செ.குமரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்