“அஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்!” கௌதம் சர்ப்ரைஸ் | “அஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்!” கௌதம் சர்ப்ரைஸ் , அஜித், கௌதம் மேனன், அனுஷ்கா, த்ரிஷா, கௌதம் மேனன்

வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (29/10/2014)

கடைசி தொடர்பு:20:32 (29/10/2014)

“அஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்!” கௌதம் சர்ப்ரைஸ்

'' 'ஒரு வெள்ளிக் கொலுசுபோல
 இந்தப் பூமி சிணுங்கும் கீழ...
அணியாத வைரம்போல
அந்த வானம் மினுங்கும் மேல...’

இப்படி ஒரு பாட்டுக்கு ஃபீல் பண்ணி, அஜித் சார் ஆடுவாருனு நீங்க கற்பனை பண்ணியிருப்பீங்களா? கவிஞர் தாமரையின் இந்த வரிகள் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. 'இந்தப் பாடல், படத்தில் என் ஒட்டுமொத்த கேரக்டரையும் சொல்லுது கௌதம்’னு ரசிச்சு சிரிச்சார். நானும் அதான் சொல்றேன்... இது வழக்கமான அஜித் படம் இல்லை'' - அவ்ளோ பெரிய கண்களால் சிரிக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அஜித்தின் 55-வது படத்தை மாஸ் கிளாசிக்காக இயக்கும் பூரிப்புடன் பேசத் தொடங்கினார்...

''சுருக்கமா சொல்லணும்னா, ஹீரோ தன் திருமண பந்தத்தில் அடியெடுத்துவைக்கும் 28-வது வயசுல ஆரம்பிச்சு, 38-வது வயசு வரைக்குமான 10 வருடப் பயணம்தான் படம். அதுக்கு மூணு, நாலு லுக் தேவைப்பட்டுச்சு. 'கறுகறு முடி வேணும்... சால்ட் அண்டு பெப்பர் லுக் வேணும்’னு நான் எதுவும் அவர்கிட்ட சொல்லலை. ஆனா, ஸ்கிரிப்ட் கேட்டுட்டு அவரே அந்தந்த லுக்கில் வந்து ஆச்சர்யப்படுத்தினார். ஒரு ஆக்ஷன் ப்ளாக். அதுக்காக ஒரு மாசம் வொர்க் பண்ணிட்டு வந்து, 'இது ஓ.கே-வா, ஓ.கே-வா?’னு கேட்டுக் கேட்டு திருப்தியான பிறகே ஷூட் வந்தார். வழக்கமா அஜித்தோடு டிராவல் பண்றவங்க, 'இந்தப் படத்தில் ஒட்டுமொத்தமா நீங்க புதுசா இருக்கீங்க’னு சொன்னாங்களாம். அவரோட ரசிகர்களும் அதே ரியாக்ஷன் கொடுத்தா, இந்தப் படம் அடுத்தடுத்த பாகங்கள் போகும்!''

''அந்த அளவுக்கு அஜித்கிட்ட என்ன சேஞ்ச்-ஓவர் பண்ணீங்க?''

''இதுதான்னு நானா எதுவும் பண்ணச் சொல்லலை. ஆனா, 'ஷூட்டிங் போகலாம்’னு முடிவு எடுத்த நாளில் இருந்து அவரே ஏதேதோ கத்துட்டிருந்தார். 'நான் பாக்ஸிங் கத்துக்கிறேன் கௌதம்’னு ஒருநாள் சொன்னார். 'ஸ்கிரிப்ட்ல அப்படி ஒரு மூட் இருக்கு. பயன்படும்’னு சொன்னேன். திடீர்னு பார்த்தா, 'கிடார் கத்துட்டிருக்கேன். ஒரு பாட்டுல கிடார் வாசிச்சா நல்லா இருக்கும்ல’னு கேட்டார். ஆக்ஷன் ப்ளாக் போறதுக்கு முன்னாடி, ஜிம் போய் ஸ்லிம் ஆகி வந்தார். இது எதுவுமே படத்துக்குத் தேவைப்படலை. ஆனா, இருந்தா நல்லா இருக்கும்னு அவருக்கே தோணிருக்கு. என்ன பண்ணணுமோ, அதை பெர்ஃபெக்ட்டா பண்ணிட்டார்!''

''அனுஷ்கா-த்ரிஷா... ரெண்டு பேருமே சீனியர்ஸ். எப்படி செட் ஆனாங்க?''

''முதலில் அனுஷ்காவை ஃபிக்ஸ் பண்ணிட்டோம். அப்புறம் இன்னொரு கேரக்டருக்கு த்ரிஷா இருந்தா நல்லா இருக்கும்னு, அவங்ககிட்ட கேட்டேன். 'ஏற்கெனவே அனுஷ்கா இருக்காங்களே... அவங்களைத் தாண்டி, எனக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்?’னு கேட்டாங்க. நியாயமான கேள்வி. ஆனாலும், என் பதிலை எதிர்பார்க்காம, 'நடிக்கிறேன்’னு சொன்னாங்க. த்ரிஷாவின் அந்தத் தயக்கத்தை அனுஷ்காகிட்ட சொன்னேன். 'ஒண்ணும் பிரச்னை இல்லை கௌதம். நான் அவங்க ரோல் எடுத்துக்கிறேன்’னு சொன்னாங்க. இதை த்ரிஷாவிடம் சொன்னப்போ, 'அவங்க இப்படிச் சொல்வாங்கனு எனக்குத் தெரியும். அனுஷ்கா மனசளவில் அவ்வளவு நல்லவங்க. எனக்குப் பிரச்னை இல்லை. நீங்க சொன்ன கேரக்டர்லயே நான் நடிக்கிறேன்’னாங்க. இப்போ அவங்க ரெண்டு பேருக்கும் ஈக்குவல் ஸ்பேஸ் கொடுக்கிற பொறுப்பு என் கையில். இதை அஜித்கிட்ட சொன்னா, 'அதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் சமாளிச்சிடுவீங்க’னு சிரிக்கிறார்!''

''அருண் விஜய்க்கு என்ன ரோல்?''

''படத்துல அவர் ரோல் 'நல்லது பண்ணுமா, நெகட்டிவா இருக்குமா, அஜித்துக்கு நண்பனா..?’ எதுவும் கேட்காதீங்க. ஆனா, ஒரு ஹிட் ஹீரோவா பேர் வாங்கின பிறகு இப்படி ஒரு கேரக்டர் பண்ண அவர் ஒப்புக்கிட்டது பெரிய விஷயம். 'உடம்பை அட்டகாசமா வெச்சிருக்கீங்க... தினமும் ஜிம்முக்குப் போகணும்னு உங்களைப் பார்க்கிறப்பலாம் தோணுது. யூ ஆர் மை மோட்டிவேஷன்’னு அருண்கிட்ட  அஜித் சொன்னார். அந்த அளவுக்கு அருண் உடம்பை டோன் பண்ணிவெச்சிருக்கார். இப்போ ஷூட்டிங்ல ஆக்ஷன் போர்ஷனுக்கு முன்னாடி ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு டம்பிள்ஸ் தூக்கிட்டு இருக்காங்க!''

''ஓப்பனிங் ஸாங், பன்ச் லைன்... இதெல்லாம் சொன்னா அஜித் ரசிகர்கள் சந்தோஷப்படுவாங்களே...''

''ஒரு விஷயம் க்ளியரா சொல்லிடுறேன். இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனா, அவர் படத்தின் வழக்கமான விஷயங்கள் இதில் இருக்காது. 'நல்ல ஸ்கிரிப்ட் கௌதம். எனக்காக சில விஷயங்கள் சேர்க்கணும்னு யோசிச்சு அதை டிஸ்டர்ப் பண்ண வேணாம்’னு அஜித் சொல்லிட்டே இருப்பார். அதனால, ஒரு  நல்ல சினிமாங்கிற எதிர்பார்ப்போடு வந்தால் போதும். லாரி பறக்கும், மெஷின் கன் வெடிக்கும்னு நினைக்காதீங்க. அதெல்லாம் அவர் ஏற்கெனவே நிறையப் படங்களில் பண்ணிட்டார்.

சும்மா ஒரு சாம்பிள் சொல்றேனே... ஹீரோயின்கிட்ட பேசுறப்ப அஜித் இப்படிச் சொல்வார்... 'ஒவ்வொரு அம்மாவும் தன் பிள்ளை எப்படி இருந்தாலும் 'அழகு’னுதான் சொல்வாங்க. சிலசமயம் பொய்னு தெரிஞ்சும்கூட சொல்வாங்க. ஆனா, என் அம்மா அப்படிச் சொன்னது உண்மை’! - கமர்ஷியல் படத்துக்கு நடுவுல இப்படி ஏகப்பட்ட ரொமான்ஸ், எமோஷன்ஸ் இருக்கும்!''

''ஒரு இடைவேளைக்கு அப்புறம் கௌதம்- ஹாரிஸ்-தாமரைனு ஹிட் மியூசிக் கூட்டணி ஒண்ணுசேர்ந்திருக்கே?''

''அஞ்சு பாட்டு. ஒவ்வொண்ணும் ஆல்டைம்  ஹிட்ஸா இருக்கணும்னு பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கோம்.

'மழை வரப்போகுது
துளிகளும் தூறுது...
நனையாமல் என்ன செய்வேன்?
மதுரமும் ஊறுது
மலர்வனம் மூடுது...
தொலையாமல் எங்கே போவேன்..?’ இப்படிலாம் போகும் மெலடி டூயட்!''

''நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா அஜித் மெட்டீரியல் இல்லாத, ஒரு அஜித் சினிமானு தோணுது. இதுல எப்படி அவரை கமிட் பண்ணீங்க?''

''முழுக் கதையும் சொல்லாமல்தான்! என் ஸ்கிரிப்ட்வொர்க் கொஞ்சம் வித்தியாசம். 'மின்னலே’ தொடங்கி 'நீதானே என் பொன்வசந்தம்’ வரை ஸ்க்ரிப்ட் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிச்சிருவேன். ஆனா, கிளைமாக்ஸ் மட்டும் ஃபிக்ஸ் பண்ணிக்க மாட்டேன். ஷூட்டிங் போயிருவோம். ஆனா, கிளைமாக்ஸ் நினைப்பு மனசுல ஓடிட்டே இருக்கும். ஷூட்டிங் போகப் போக ஆர்ட்டிஸ்ட்டின் ஈடுபாடு, காட்சிகளின் மேக்கிங் எல்லாம் சேர்ந்து ஒரு கிளைமாக்ஸை மனசுல ஃபிக்ஸ் பண்ணும். அதை கடைசியா ஷூட் பண்ணுவேன். 'காக்க காக்க’, 'வாரணம் ஆயிரம்’னு என் எல்லா படங்களுக்கும் இந்த ஃபார்முலாதான்.

அப்படி அஜித் சாருக்கும் இந்தப் பட கிளைமாக்ஸ் இன்னும் தெரியாது. அது இல்லாமல்தான் அவருக்கு கதை சொன்னேன். 'முதல் பாதி சூப்பர். இரண்டாவது பாதி அரை மணி நேரமும் பிரமாதம். ஷூட்டிங் போயிடலாம்’னு படத்துக்குள்ள வந்துட்டார். 'ஜி... இன்னும் நீங்க கிளைமாக்ஸ் சொல்லலை. அவ்வளவு ரகசியமா வெச்சிருக்கீங்களா?’னு இப்பக்கூட அஜித் சார் கேட்டார். சீக்கிரம் அவர்கிட்ட கிளைமாக்ஸ் சொல்லணும்!'' - அட்டகாசமாகச் சிரிக்கிறார் கௌதம்.

- ம.கா. செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்