ஆசையா காக்கிச் சட்டை... ஆரம்பம் ஆக்‌ஷன் வேட்டை! சிவா வெர்ஷன் 2.0 | ஆசையா காக்கிச் சட்டை... ஆரம்பம் ஆக்‌ஷன் வேட்டை! சிவா வெர்ஷன் 2.0 , சிவகார்த்திகேயன், ஶ்ரீதிவ்யா, துரை செந்தில்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன் பேட்டி

வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (29/10/2014)

கடைசி தொடர்பு:21:13 (29/10/2014)

ஆசையா காக்கிச் சட்டை... ஆரம்பம் ஆக்‌ஷன் வேட்டை! சிவா வெர்ஷன் 2.0

''மதிமாறன், கிரைம் பிராஞ்ச் போலீஸ் ஆபீஸர், மூணு வில்லனுங்க... தன் பையன் என்னைக்காவது ஒருநாள் 'அலெக்ஸ்பாண்டியன்’ மாதிரி, 'துரைசிங்கம்’ மாதிரி அதிரடி போலீஸா வருவான்னு நினைச்சுட்டு இருக்கிற அம்மா... 'காக்கிச் சட்டை’னு டைட்டில்... போலீஸ் ஸ்டோரி ஃபீல் வருதுங்களா!'' - படத்தின் ஸ்டில்களை ஸ்லைடரில் ஓடவிட்டபடி ஆர்வமாகக் கேட்கிறார் சிவகார்த்திகேயன். ஜாலி கலாட்டா சேட்டைகளில் இருந்து ஆக்ஷன் வேட்டைக்கு 'காக்கிச் சட்டை’ படம் மூலம் புரமோஷன் ஆகிறார் நம்ம சினா.கானா!

''டைட்டில் டு டைட்டில் காமெடிதானே உங்க ப்ளஸ். திடுக்னு ஒரே படத்தில் ஆக்ஷனுக்கு மாறிட்டீங்க?''

''காமெடி இல்லாம படம் பண்றது கஷ்டம். ஆனா, 'காக்கிச் சட்டை’ படத்தோட காதல் போர்ஷனில் மட்டும் காமெடி இருக்கும். 'போலீஸ்னா இப்படித்தான் இருக்கணும்’னு நினைக்கிற பையன், போலீஸ் வேலையில் ஆர்வமா சேர்றான். அவனைச் சுத்தி நடக்கிற விஷயங்கள்தான் கதை. இயக்குநர் துரை செந்தில்குமார் 'போலீஸ் ஸ்டோரி’னு ஒன்லைன் சொன்னதும் பயந்துட்டேன். '10 பேரை ஒரே சமயத்தில் அடிச்சுத் துவைக்கிற ஆள் இல்லை. பாசிட்டிவ் நம்பிக்கைகள், அடுத்தடுத்த லட்சியங்கள்னு எல்லார் வாழ்க்கையிலும் இருக்கிற விஷயங்கள்தான் கதை’னு விளக்கினார். காதல், காமெடி, சீனியர் ஆபீஸரோடு ஜாலி கேலினு படத்தில் 60 சதவிகிதம் காமெடிதான்!''

''போலீஸ் கேரக்டருக்குனு ஸ்பெஷலா ஏதாச்சும் மெனக்கெட்டீங்களா?''

'' 'மான் கராத்தே’ முடிச்சப்ப என் எடை  வெறும் 67 கிலோதான். அப்பதான் இந்தப் படத்துக்காக யூனிஃபார்ம் போட்டுப் பார்த்தோம். 'கரெக்டா இருக்கு’னு இயக்குநர் சொல்லிட்டார். ஆனா, 'ஐ.பி.எஸ் ஆகணும்னு சின்ன வயசுல ஆசைப்பட்டிருக்கேன். அது சினிமாவில்தான் நடக்குது. ஆசைப்பட்ட போலீஸ் யூனிஃபார்மை முதல்முறையா போடுறேன். எனக்குப் பிடிச்ச மாதிரி போட்டுக்குறேனே’னு கேட்டுக்கிட்டேன். அதுவும் என் அப்பா நேர்மையான போலீஸ். அதனால இந்த கேரக்டர் மேல ஒரு சென்ட்டிமென்ட். 'சாமி’ விக்ரம் சார் போல பாடி பில்ட் பண்ணணும்னு நினைக்கலை; ஆனா, ஃபிட்டா இருக்கணும்னு தோணுச்சு. அதே சமயம் எடையை  ஏத்துறதுக்காக ஷூட்டிங்கைத் தள்ளிவைக்கிற அளவுக்கும் நேரம் இல்லை. 'காதல், காமெடி, பாட்டுனு மத்த போர்ஷன்களைப் படம் பிடிப்போம். போலீஸ் போர்ஷனுக்கு மட்டும் ஒரு மாசமாச்சும் டைம் கொடுங்க’னு கேட்டு வாங்கிட்டேன். ஆனா, எனக்கு சாமான்யத்துல சதை போடாது. கண்டதையும் சாப்பிட்டும், ஜிம்முக்குப் போயும் நாலைஞ்சு கிலோதான் எடை ஏறுச்சு. அப்புறம்தான் யூனிஃபார்ம் மாட்டினேன். ஆனா, 'ஐ’ படத்துக்காக விக்ரம் சார் பண்ணியிருக்கிறதைப் பார்த்த பிறகு, இதெல்லாம் ஒரு கெட்டப் சேஞ்ச்னு வெளியே சொல்லவே கூடாது. ஆனா, நாம பேசுறதுக்கு வேற என்ன விஷயம் இருக்கு... சொல்லுங்க? அதான் நாலைஞ்சு கிலோவுக்கே இப்படிலாம் பில்ட்அப் பண்ண வேண்டியிருக்கு. ஸாரி விக்ரம் சார்!''

''சூரி, சதீஷ்னு இல்லாம பிரபு, இமான் அண்ணாச்சினு வேற செட்டப் பிடிச்சிருக்கீங்க!''

''படத்தில் பிரபு சார் எனக்கு சீனியர் ஆபீஸர். ரெண்டு பேருக்கும் நடுவில் ரகளையும் ரணகளமுமா இருக்கும். அட... அதை விடுங்க. பிரபு சாருக்கு ஷூட்டிங் இருக்குன்னாலே, நாங்க குஷியாகிடுவோம். காரணம், அவர் வீட்டுச் சாப்பாடு! ஞாயிற்றுக்கிழமைனா பிரபு சார் வீட்ல இருந்து பிரியாணி வரும். ஒருதடவை அந்தப் பிரியாணியைச் சாப்பிட்ட பிறகு, ஞாயிற்றுக்கிழமைகளில் பிரபு சாருக்கு ஷூட்டிங் இருக்கிற மாதிரியே ஷெட்யூல் போடச் சொன்னோம். 'சார்... பிரியாணி சூப்பர்’னு ஒருதடவை அவர்கிட்ட சொல்லிட்டேன். 'அப்படியா... இன்னொரு ஹாட் பாக்ஸில் பார்சல் பண்ணி சிவா தம்பி வீட்டுக்கு அனுப்பிடுங்க’னுட்டார். நான் டைரக்டர்கிட்ட கண்டிப்பா சொல்லிட்டேன்... 'சார், டூயட் உள்பட படம் முழுக்க என்கூட பிரபு சார் இருக்கிற மாதிரி பண்ணிடுங்க’னு!  சாப்பிடுறப்ப அவர் வயிறு நிறையுதோ இல்லையோ... எங்க எல்லாருக்கும் வயிறு நிறைஞ்சுடும். ரொம்பப் பாசக்கார மனுஷன்.

இமான் அண்ணாச்சியோட காமெடிக்கு கேக்கவா வேணும்! 'சார்... பிரியாணித் தட்டை கீழே வைப்பேனாங்கிறான். ஆளும் மண்டையும் பாத்தியா?’னு ஒரே அதகளம்!''

'' 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஹிட் ராசிதான் ஸ்ரீதிவ்யாவைத் திரும்பவும் ஜோடி ஆக்கிருச்சா?''

''அப்படியும் வெச்சுக்கலாம்; அந்த ஹிட் ராசியை ஓவர்டேக் பண்ணும் முயற்சினும் வெச்சுக்கலாம். படத்தில் அவங்க கேரக்டருக்கு என்ன பேர் வைக்கிறதுனு ரொம்ப யோசிச்சு  யோசிச்சு, கடைசியில் அட்டகாசமா, ஆசமா, ஆரவாரமா... 'திவ்யா’னே பேர் வெச்சுட்டோம்ல!''

''உங்க சினிமா ஃப்ரெண்ட்ஸ் பயங்கரமா பார்ட்டி பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, உங்களை அங்கே பார்க்க முடியிறது இல்லையே?''

''தம், தண்ணி எல்லாம் காலேஜில் இருந்தே எனக்குப் பழக்கம் இல்லை. ஆனா, நாம நடிக்கிற படத்தில் அது மிஸ் ஆகாம வந்திருது. நல்லவேளை, இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லை. பார்ட்டிக்குப் போய் தேமேனு உட்கார்ந்து இருக்க போரடிக்குது. அது பத்தாதுனு, 'உண்மையிலேயே குடிக்க மாட்டீங்களா? பொய் சொல்லாதீங்க...’னு குவியிற கேள்விகளுக்குப் பதில் சொல்றது இன்னொரு தர்மசங்கடம். அதுக்காக தம், தண்ணி தொடவே கூடாதுனு முடிவு எடுத்து, அதைக் கடைப்பிடிக்கிற அளவுக்கு நான் உத்தமன் இல்லை. அதெல்லாம் தப்பு, சரிங்றதைவிட அது மேல விருப்பம் இல்லாமலேயே போயிருச்சு. காலேஜில் என் ஃப்ரெண்ட்ஸ் கேங்கில் இருந்த ஏªழுட்டு பேரில் யாருமே தண்ணி, தம் அடிச்சது இல்லை. நான் அடிக்காததுக்கு அவங்களும், அவங்க அடிக்காததுக்கு நானும் காரணமா இருக்கலாம்!''

        

''உங்க குரு தனுஷ்கூட மனஸ்தாபம், ரெண்டு பேரும் பேசிக்கிறது இல்லைனு சொல்றாங்களே... உண்மையா?''

'' 'எதிர்நீச்சல்’ படம் ரிலீஸுக்கு ரெண்டு நாள் முன்னாடி தனுஷ் சார் தயாரிப்பில் கமிட்டான படம்தான் 'காக்கிச் சட்டை’. 'எதிர்நீச்சல்’ சமயத்துலேயே எனக்குன்னு இருந்த வியாபாரத்தை மீறி செலவு பண்ணியிருந்தார் தனுஷ் சார். இதுலையும் அப்படித்தான். அவர்கூட எனக்கு என்ன மனஸ்தாபம் இருக்கப்போகுது? 'சார், நிறையப் பேர் நமக்குள்ள சண்டையானு கேக்குறாங்க’னு சொன்னேன். 'அப்படித்தான் கேப்பாங்க. அவங்களுக்குப் பதில் சொல்லிட்டே இருந்தா நாம வேலை பாக்க முடியாது’னு சொன்னார். 'இல்லை சார்... ஏதாவது மறுத்துச் சொல்லிடலாம்.  தப்பா நினைச்சுட்டு இருக்கப் போறாங்க’னு நான் சொன்னா... 'நாம யாருனு நமக்குத் தெரியும். அது போதும். தவிர, நீங்க சொன்னாலும் அதை உடனே நம்பிடுவாங்களாக்கும்’னு கேட்டுட்டுச் சிரிச்சார். 'ஆமாம்ல’னு தோணுச்சு. தெளிவாகிட்டேன். 'நாம ஒரு ஹீரோ... நமக்கும் ஒரு வியாபாரம் இருக்கு’னுலாம் நான் யோசிக்கிறதே கிடையாது. என்னைக்கும் எனக்கு தனுஷ் சார் பெருசுதான்!''

''சினிமா கேரியரில் முக்கியமான கட்டத்தில் இருக்கீங்க. அடுத்து எந்தெந்த இயக்குநர்கள் படங்களில் நடிக்கணும்னு ஆசை?''

''எந்தப் பெரிய இயக்குநர் படங்கள்னாலும் ரெடி. வாழ்நாள் லட்சியம்னா அது ஷங்கர் சார், முருகதாஸ் சார் படங்களில் நடிக்கணும் கிறதுதான். ஆனா, அவங்க எங்கேயோ உச்சியில் இருக்காங்க. நான் கீழ இருந்து அண்ணாந்து பார்த்துட்டு இருக்கேன். அவங்க என்னைக் கூப்பிடணும்னா, அவங்க கண்ணுக்குத் தெரியிற மாதிரி ஏதாவது பண்ணணும். அதுக்கு ஏத்த படங்கள், திறமை, மனசு, உடம்புனு எல்லா விஷயங்களையும் பெட்டர் பண்ணிட்டே இருக்கணும். இதுதான் இப்போதைக்கு என் கனவு. அதை நனவாக்க ஓடிட்டே இருக்கேன்!''

''தீபாவளிக்கு என்ன விசேஷம்?''

''பாப்பா ஆராதனா பிறந்த நாள்தான். இந்தத் தீபாவளி அன்னைக்குத்தான் அவங்களுக்கு முதல் பிறந்த நாள். காலையில் தீபாவளி, சாயங்காலம் பிறந்த நாள் கொண்டாட்டம். 'எவ்வளவு நல்ல பொண்ணா இருக்கா? பிறந்த நாளுக்குனு தனி டிரெஸ், அது, இதுனு செலவு வைக்கலை என் செல்லம். திருச்சியில் அம்மா, அக்கா குடும்பத்தோடு தீபாவளியைக் கொண்டாடப்போறோம். அப்புறம் நாம நடிக்கிறதை வீட்ல இப்ப ரொம்ப சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க. நடிக்கிற படத்தைப் பத்தி ஆரம்பத்தில் வீட்ல பேசக்கூட முடியாது. இப்ப, 'படத்தில் என்ன கதை? புதுசா என்ன பண்ணப்போறீங்க?’னுலாம் கேக்குறாங்க. அந்த ஆச்சர்யமும் ஆராதனாவின் குறும்புமா... வாழ்க்கை ரொம்ப அழகுங்க!''

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்