''அது 'கத்தி' அல்ல... காப்பி!''

''தமிழகத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் நீர்வளத்தைப் பார்த்து, பன்னாட்டு நிறுவனம் ஒன்று குளிர்பானம் தயாரிக்கும் கம்பெனியை அமைக்க வருகிறது. கிராம மக்கள் மற்றும் விவசாயக் கூலிகளுக்கு கம்பெனி கட்டுமானக் காலங்களில் வேலையும் நல்ல சம்பளமும் தருவதாகவும், நிலம் தருபவர்களுக்கு நல்ல விலையும் தருவதாகவும் உறுதியளிக்கிறது. ஆனால், அந்த கிராமத்துப் பெரியவரும், அந்த கிராமத்து இளைஞர் ஒருவரும் நிலத்தைத் தர முடியாது என்று சொல்லிவிடுகின்றனர். அந்த நிறுவனம் இவர்களைத் தாக்க முயல, கிராம மக்கள் ஒன்றிணைந்து தடுக்கின்றனர்.

 

மக்களின் ஒற்றுமையைக் கண்டு, பின்வாங்கும் நிறுவனம், அந்த ஊரில் இருக்கும் ஏற்றத்தாழ்வு, முரண்பாடு, மனிதர்களுக்குள் இருக்கும் விரிசல் போன்றவற்றை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, நிலம் கையகப்படுத்தும் முயற்சியைத் தொடர்கிறது. கிராமத்துப் பெரியவரின் உள்ளூர் எதிரி தனது நிலத்தை குளிர்பான கம்பெனிக்கு விற்கிறான். அவனுக்கு மிகப்பெரிய தொகை கொடுக்கப்படுகிறது. அந்தத் தொகையைப் பார்த்து, ஊர் மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர். அந்த நேரத்தில், நிறைய பணம் கிடைத்தால் வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற அனிமேஷன் படம் கிராம மக்களுக்கு போட்டுக் காட்டப்படுகிறது. அதை நம்பி பெரும்பாலான மக்கள் நிலத்தைக் கொடுக்க சம்மதிக்கின்றனர். மறுநாள் புல்டோசர் வந்து, வாங்கிய நிலத்தை தோண்ட ஆரம்பிக்கிறது. அப்போது  அங்கு கிடைக்கும் தங்களுடைய மூதாதையர்களின் எலும்புக்கூடுகளைப் பார்த்து மக்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர். அப்போது அந்த நிறுவனத்துக்கும் மக்களுக்கும் இடையில் தகராறு ஏற்படுகிறது. மக்களுக்கு ஆதரவாக அந்த இளைஞனும், பெரியவரும் இறங்குகின்றனர். போலீஸ் வருகிறது, இளைஞனை கைது செய்கிறது. நிலம் கொடுத்த மக்களுக்கு வேறு இடமும் நிலமும் தருவதாகச் சொன்ன நிறுவனம், அவர்களை ஒரு முகாமில் அடைக்கிறது. நிறுவனத்தின் கழிவுகளால் அங்கு தொற்றுநோய் பரவி, தங்கியிருக்கும் கிராம மக்களில் 20 பேர் மரணமடைகின்றனர்.

அப்போது சிறையில் இருந்து திரும்பிய இளைஞன், மக்களின் அவலநிலையைக் கண்டு கம்பெனிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறான். இந்த நேரத்தில் கம்பெனியின் உற்பத்திக் கோளாறைச் சரிசெய்ய கம்பெனியின் உரிமையாளரும் ஆராய்ச்சியாளர்களும் வருகின்றனர். அவர்களை மக்கள் தடுக்கின்றனர். போலீஸ் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. அதில் ஒன்பது பேர் இறந்துவிடுகின்றனர். ஆனால், அவர்களின் உடல்களை எரிக்காமல், எப்போது தங்களின் நிலம் தங்களுக்குக் கிடைக்கிறதோ அன்றுதான் இவர்களின் உடலை தகனம் செய்வோம் என்று அந்த இளைஞனும், பெரியவரும் சபதம் எடுக்கின்றனர்.

இளைஞனைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவுகிறது நிறுவனம். அதனால் நாயகன் தலைமறைவாகிவிடுகிறான். அப்போது கம்பெனி முதலாளி ஊருக்குள் வருகிறார். அவரை எதிர்த்து, கிராம மக்கள் தங்களை நிர்வாணமாக்கி பாதி மணலில் புதைத்துக்கொண்டு போராடுகின்றனர். இதனால் அவர்களைக் போலீஸ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது. அப்போது மக்கள், நீதிபதிகளிடம் தங்கள் பிரச்னையைச் சொல்ல, நாயகனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும், அவர் தாராளமாக நீதிமன்றத்துக்கு வரலாம் என்று உத்தரவிடுகின்றனர். இதையடுத்து நாயகன் கம்பெனியின் சதிகளை முறியடித்து நீதிமன்றம் வருகிறான். அப்போது, தீர்ப்பளிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. தன் வாதத்தை எடுத்து வைக்கும் நாயகன், 'கம்பெனி நிலத்துக்குத்தான் பணம் கொடுத்தது. அந்த நிலத்துக்கு அடியில் இருந்த இயற்கை வளத்துக்கு அல்ல. இயற்கை வளங்களின் மதிப்புக்கான பணத்தை, அவர் எங்களுக்குக்கூட அல்ல, இந்த நாட்டுக்குக் கொடுக்கட்டும், நாங்கள் நிலத்தை இலவசமாகவே தருகிறோம்’ என்று சொல்கிறார். இதை நிறுவனம் ஏற்க மறுத்து வெளியேறுகிறது. மக்கள் அனைவரும் நாயகன் மற்றும் ஊர்ப் பெரியவருடன் சேர்ந்து கிராமத்துக்குத் திரும்புகின்றனர். இதுதான் நான் எழுதிய 'மூத்தகுடி’ படத்தின் கதை. இதில் சிறு சிறு மாற்றம் செய்து 'கத்தி’ என்ற பெயரில் படமெடுத்துவிட்டார்கள்'' என்று நீதிமன்றத்துக்குப் போனார் மீஞ்சூர் கோபி.

என்னுடைய கதை இதுதான் என்று, நீதிமன்றத்தில் கோபி கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்த மனுவில் உள்ள கதைக்கும் 'கத்தி’ படத்துக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை என்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

அவரிடம் தொடந்து பேசியபோது, ''கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று நிறுவனம் தொடங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை வைத்தும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை மனதில் வைத்தும்,  'மூத்தகுடி’ என்ற தலைப்பில் இந்தக் கதையை எழுதினேன். அதை தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் சொன்னேன். அப்போது ஜெகன் என்பவர் எங்களுடன் இருந்தார். மூன்று மணி நேரம் நான் அந்தக் கதையை சொல்லி முடித்ததும், தற்போது என்னால் இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரிக்க முடியாது என்று விஸ்வாஸ் சுந்தர் சொல்லிவிட்டார். ஆனால், அப்போது அவருடன் இருந்த ஜெகன், இந்தக் கதை அற்புதமாக உள்ளது என்றும் இதைத் திரைப்படமாகத் தயாரிக்க இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் முருகதாஸிடம் சொல்லி, தான் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். சொன்னபடியே என்னை இயக்குநர் முருகதாஸிடம் அழைத்துப்போனார். கதையைக் கேட்டு என்னைப் பாராட்டிய முருகதாஸ், 'அஜித்தை வைத்து இந்தப் படத்தைத் தயாரிக்கலாம். ஆனால், இதை இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக மாற்ற வேண்டும்’ என்று சொன்னார். அதையும் செய்து கொடுத்தேன்.

கதையை மெருகேற்றும் வேலைகள் மட்டும் ஒன்றரை வருடங்களாக நடைபெற்றன. ஆனால், அதன் பிறகு திடீரென அந்த வேலையை நிறுத்திவிட்டு தன்னால் இந்தத் திரைப்படத்தை இப்போது தயாரிக்க முடியாது என்று சொல்லி முருகதாஸ் ஒதுங்கிக்கொண்டார். திடீரென நடிகர் விஜய்யை வைத்து அவர் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'கத்தி’ திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.  அதற்கு கொல்கத்தாவில் வைத்து பூஜை போட்டனர். அப்போது எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. ஏனென்றால், நான் இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக 'மூத்தகுடி’ கதையை மாற்றியபோது, அதில் ஒரு ஹீரோ கொல்கத்தாவில் இருந்து தப்பி வருவதுபோல்தான் அமைத்திருந்தேன். உடனே, இதுபற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது, 'கத்தி’ திரைப்படத்தின் கதை, என்னுடைய 'மூத்தகுடி’யின் கதைதான் என்பது தெரியவந்தது. நான் இதுபற்றி, அவர்களிடம் கேட்டபோது, 'அது உங்களுடைய கதை அல்ல. இந்தப் படம் முடிந்ததும், நிச்சயம் நீங்கள், அந்தக் கதையை அஜித்தை வைத்து இயக்குவீர்கள்’ என்று சொல்லி வந்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. வேறு வழியில்லாமல்தான் நீதிமன்றத்துக்குப் போனேன். அங்கே இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். அதன் பிறகுதான் தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்'' என்று வேதனையோடு சொல்லி முடித்தார்.

'கத்தி’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் என்ன சொல்கிறார்? ''கோபி என்பவரை நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை. 'கத்தி’ படத்தின் கதையை, நான் என் மனதில் உருவாக்கி, அதற்கு வடிவம் கொடுத்து, படமாக எடுத்து முடிக்க நான் பட்ட சிரமங்கள் எனக்குத்தான் தெரியும். கடந்த 10 மாதங்களாக இந்தப் படத்தை வைத்து எழுந்த பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளால் எனக்கு பெரிய மனஉளைச்சல். ஆனால், ரசிகர்கள் அதை வெற்றிப் படமாக்கியபோது அந்த வலி எனக்கு மறந்துவிட்டது. கோபியைப் போன்றவர்கள் வந்து, கதைக்கு உரிமை கொண்டாடக் காரணம், பணம்தான்! இப்படி வருபவர்களுக்கு எல்லாம் நான் கொடுத்துப் பழகிவிட்டால், அதன் பிறகு அதற்கு முடிவே இருக்காது. சொன்னால் நம்பமாட்டீர்கள், 'கத்தி’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய நாங்கள் இன்னும் முடிவே எடுக்கவில்லை. அதற்குள் ஒரு தெலுங்குக்காரர், இது என்னுடைய கதை என்று சொல்லி வருகிறார். அதனால்தான் நீதிமன்றத்தின் மூலமே இந்தப் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். கோபி என்பவர் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடியாகிவிட்டது. இனி எந்தப் பிரச்னை வந்தாலும், அதையும் சட்டப்படியே சந்திப்பேன்'' என்று நிதானமாகச் சொன்னார்.

ஊருக்கு புத்திமதி சொல்பவர்கள், முதலில் சொந்த புத்தியை வைத்து படம் எடுக்கட்டும்.

  - ஜோ.ஸ்டாலின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!