“லவ் யூ மாமா!” | “லவ் யூ மாமா!”, ரஞ்சித், மெட்ராஸ், ஓவியம், ரஞ்சித் பேட்டி, வடசென்னை, அனிதா, ஓவியக் கல்லூரி மாணவர்

வெளியிடப்பட்ட நேரம்: 20:07 (30/10/2014)

கடைசி தொடர்பு:20:07 (30/10/2014)

“லவ் யூ மாமா!”

லுவாக வட சென்னை வாழ்க்கை பேசிய 'மெட்ராஸ்’ படம், செம கெத்து. படத்தின் நுணுக்கமான அரசியல் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ... அதே அளவுக்கு காதல் அத்தியாயங்களும் வசீகரித்தன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் சின்னஞ்சிறு அறைகளில் பகிரப்படும் காதலில் அவ்வளவு அன்பு.  

''எல்லாம் ஒரிஜினல். எங்க வாழ்க்கையில், எங்களைச் சுத்தி உள்ளவங்க வாழ்க்கையில் நடந்தது. 'மெட்ராஸ்’ படத்தின் லவ் சீனில் வர்ற பல டயலாக், அனிதா என்கிட்ட பேசினதுதான்'' - தாடி வருடிச் சிரிக்கிறார் படத்தின் இயக்குநர் ரஞ்சித். இவரும், இவரது மனைவி அனிதாவும் ஓவியர்கள்; சென்னை ஓவியக் கல்லூரி மாணவர்கள்.

''ஓவியக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்காக ஒரே ஹாலில் உட்கார்ந்து வரைஞ்சுட்டிருந்தோம். அப்போதான் அனிதாவை முதலில் பார்த்தேன். பார்த்ததுமே காதல். ஆனா எனக்கு ஸீட் கிடைச்சிடுச்சு; அனிதாவுக்குக் கிடைக்கலை. அடுத்த வருஷம் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிசல்ட் ஒட்டினதும் ஓடிப்போய்ப் பார்த்தேன். அனிதா பேர் இருந்துச்சு. பார்த்தா, அது வேற அனிதா. செம மொக்கை. ஆனா, மூணு மாசம் கழிச்சுப் பார்த்தா, காலேஜில் அனிதா நிக்குது. பயங்கர சந்தோஷம். ஆனா, அனிதாவுக்கு என்னை ஞாபகமே இல்லை. 'அதே ஹால்ல எக்ஸாம் எழுதின இன்னொரு பையன் பேர்தான் ஞாபகம் இருக்கு. 'உங்க பேர் என்ன?’னு கேட்ருச்சு. ரெண்டாவது மொக்கை. இப்படி வாழ்க்கை முழுக்க ஒரே மொக்கைதான். அதனாலயே என் படங்கள் 'அட்டகத்தி’, 'மெட்ராஸ்’ ரெண்டுலயுமே ஆண்கள் மொக்கை வாங்குவாங்க; அழுவாங்க. ஏன்னா அதுதான் யதார்த்தம்; உண்மை!'' என்று தன் படங்களைப் போலவே அரசியலைப் பேச்சின் இயல்பிலேயே இணைக்கிறார் ரஞ்சித்.

''ஆவடி பக்கம் கரளப்பாக்கம் கிராமம்தான் என் ஊர். வீட்டு வாசலில் ஒரு பஞ்சு மரம் நிக்கும். எங்க ஆயா, 'வீட்டாண்ட பஞ்சு மரம் இருக்கிறது நல்லது இல்லை. அதை வெட்டிடுறா’னு எங்க அப்பாகிட்ட சொல்லிட்டே இருக்கும். குடிச்சுட்டு வந்ததுமே அவருக்கு அது ஞாபகம் வந்துடும். உடனே அரிவாளை எடுத்துக்கினு அதை வெட்டுறேன்னு போய் நிப்பார். இதைத்தான் 'அட்டகத்தி’யில் சீனா வெச்சேன். அந்த அறியாமைதானே வாழ்க்கையின் ரசனை'' என்கிற ரஞ்சித்தை காதல் பேச்சுக்கு இழுத்து வருகிறார் அனிதா.

''கொஞ்ச நாள் ஃப்ரெண்டா இருந்தோம். அப்புறம் காதலிக்கலாம்னு எனக்கே தோணுச்சு. நேராப் போயி, 'உன்னை லவ் பண்ணட்டுமா?’னு அனிதாகிட்ட கேட்டேன். ' 'நீ லவ் பண்றே’னு நினைச்சுக்கிட்டு உன் பின்னாடியே நான் சுத்திட்டு இருப்பேன். ரொம்ப நாள் சுத்தவிட்டு, 'அப்படி எல்லாம் இல்லை’னு நீ சொல்லி... எதுக்கு டைம் வேஸ்ட். அதான் உன்னை லவ் பண்ணவா, வேணாமானு நீயே சொல்லு’னு கேட்டேன். முதலில் வேண்டாம்னுதான் சொன்னாங்க. கொஞ்ச நாள் கழிச்சு, 'சரி பண்ணிக்கோ’னு சொல்லிட்டாங்க. சினிமாவில் முயற்சிசெஞ்சுட்டு இருக்கும்போது இவங்களோட சப்போர்ட்தான் என்னைக் காப்பாத்துச்சு. மாசம் அஞ்சாயிரம் கொடுத்து செலவுக்கு வெச்சுக்கச் சொல்லினு... அது பெரிய கதை. இப்பவும் சினிமா பந்தா உட்டுக்கினு மாறிடக் கூடாதுனு ரெண்டு பேருமே கவனமா இருக்கோம். அனிதா கூடுதல் கவனமா இருக்காங்க!'' - மென்மையாகச் சிரிக்கிறார் ரஞ்சித்.

'மெட்ராஸ்’ படம் வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன்பாக அனிதா தன் ஃபேஸ்புக் பக்கத்தில், 'என் மாமா படம் ரிலீஸ் ஆக இன்னும் நாலு நாள், இன்னும் மூணு நாள்’ என கவுன்ட்டவுன் போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார்.

''நான் அப்படித்தான் இவரைக் கூப்பிடுவேன். 'மெட்ராஸ்’ படத்திலும் ஹீரோயின் ஹீரோவை 'மாமா’னுதான் கூப்பிடுவாங்க. நான் பேசுற பல டயலாக் அந்தப் படத்தில் இருக்கு. எனக்கு இவர் எடுக்கிற படங்கள், பேசுற அரசியல் எல்லாமே பிடிக்கும். ஏன்னா, நான் பொறந்து வளர்ந்ததும் இதே சென்னை, கொளத்தூர்தான்!'' என்கிற அனிதா-ரஞ்சித் தம்பதிகளுக்கு 'மகிழினி’ என்ற மகள்.

''எங்க ரெண்டு பேரையும் இணைச்சது ஓவியக் கல்லூரிதான். அதே கல்லூரிதான் எனக்கு அரசியலையும் கத்துக்கொடுத்துச்சு. எங்க மாஸ்டர் ஓவியர் சந்ரு, 'எனக்கு சிவனை சிலை செய்யுறதும், பன்னியை சிலை செய்யுறதும் ஒண்ணுதான். சிவன் சிலைங்கிறதால தவம் இருந்து செய்யப்போறது இல்லை. பன்னி சிலைங்கிறதால இளக்காரமா செய்யப்போறது இல்லை. கலைஞனா எனக்கு ரெண்டும் ஒண்ணுதான்’னு சொன்னது இன்னைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கு. சினிமாவும் அப்படியான ஒரு கலைதான். அந்த சினிமாவை இன்னும் மக்களுக்கான சினிமாவா மாத்தணும். அடுத்து இன்னொரு பெரிய படத்துக்குத் தயார் ஆகிட்டிருக்கேன். நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு வெளியில், பேசாத ஒரு விஷயத்தைப் பேசப் போறேன்!''

நீ கலக்கு ரூட்டு தல!

- பாரதி தம்பி, படம்: சு.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close