Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அமீர்கான் மாதிரி வருவான் விஜய் சேதுபதி!”

''எந்தக் கதைக்கும் நிலம்தான் அடிப்படை.  நிலத்தில் இருந்து கதையைப் பிரிக்க முடியாது. அந்த மண்ணின் மணமும் குணமும் நிரம்பியிருந்தா, அதுதான் உலகத் தரம்!'' - மிகச் சுருக்கமாக தன் சினிமாக்களின் அடிப்படை சொல்கிறார் இயக்குநர்  சீனுராமசாமி. 'தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நிலத்தையும், 'நீர்ப்பறவை’ படத்தில் கடலையும் திரைக்கதையில் உலவவிட்டவர், இப்போது 'இடம் பொருள் ஏவல்’ படத்துக்காக மலையையும் மலைசார்ந்த பகுதிகளையும்             குறிவைத்திருக்கிறார்.

''தலைப்பிலேயே சின்னதா கதை சொல்லிடுறீங்களே...''

''கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்கணும்ல. பொதுவா எந்த நல்ல  எழுத்தாளரைச் சந்திச்சாலும், 'பிரமாதமான கதை இருந்தா சொல்லுங்க. படம் பண்ணலாம்’னு கேட்பேன். அப்படி எஸ்.ராமகிருஷ்ணன்கிட்டயும் கேட்டேன். நான் எதிர்பார்க்கவே இல்லை... என் ரசனைக்கு ஏத்தமாதிரி, 'என்னால் இயக்க முடியும்’னு நம்பிக்கை தரக்கூடிய ஒரு கதையைச் சொன்னார். உடனே திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பிச்சு, கிடுகிடுனு படத்தை  ஆரம்பிச்சுட்டோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் பெருநகரத்தைவிட்டுத் தப்பி ஓடுறான் ஒருத்தன்; சிறு நகரத்தில் எந்தத் தப்பும் செய்யாம துரத்தப்படுறான் இன்னொருத்தன். அவங்க சந்திக்கிற ஒரு புள்ளிதான் படம். இந்தக் கதைக்கு 'இடம் பொருள் ஏவல்’தான் ரொம்பப் பொருத்தமான தலைப்பு!''  

''விஜய் சேதுபதிக்கு 'தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் ஹீரோவா முதல் அறிமுகம் கொடுத்தீங்க. இப்போ அவர் வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?''

'' 'தென்மேற்குப் பருவக்காற்று’ படப்பிடிப்பு உடனே ஆரம்பிக்க வேண்டிய நெருக்கடி.  அப்ப ஒருநாள் என் அலுவலகம் வந்த விஜய் சேதுபதி அவன் நடிச்ச ஒரு குறும்பட டி.வி.டி-யைக் கொடுத்தான். எதுவுமே பேசாம, என் கண்களை மட்டுமே பார்த்தான். அந்தக் கண்களில் ஒரு நிஜம் இருந்தது. அந்த நிஜம் இப்போ வரை அவனிடம் இருக்கு. அப்ப அந்தக் குறும்படத்தை நான் பார்க்கக்கூட இல்லை. படப்பிடிப்புக்கு மூணு நாட்கள் மட்டுமே இருக்கும்போது விஜய் சேதுபதிதான் என் ஹீரோனு முடிவு பண்ணேன். ஷூட்டிங் தொடங்கின ரெண்டாவது நாளில் அவன் நடிப்பில் அசுரன்னு புரிஞ்சது. படத்தோட ஸ்கிரிப்ட்டைப் படிக்கக் குடுத்துட்டேன். ஒரு மணி நேரம் கதை சம்பந்தமா அவன்கூட விவாதிச்சேன். அவன் மைண்டுல ஸ்கிரிப்ட் முழுக்க ஏறிடுச்சு. '10-வது சீன்ல’னு ஆரம்பிச்சாலே, வசனம் சொல்ல ஆரம்பிச்சுடுவான். அதெல்லாம் இப்போ எனக்கே மறந்துபோச்சு. 'சார்... இப்படிலாம் இருந்தோம்ல’னு சேதுதான் எனக்கு ஞாபகப்படுத்தினான். அப்ப என் மேல மரியாதையோட இருப்பான். இப்ப அன்போடு இருக்கான்.

திடீர்னு ஒருநாள், 'சார்... 'விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன்’னு சொன்னான். 'அமீர்கான் மாதிரி வருவடா’னு சொல்லி வாழ்த்தினேன். இப்ப 'இடம் பொருள் ஏவல்’ கதை முடிவு ஆனதும் சேதுவுக்கு ஒரு போன்தான் அடிச்சேன். 'நீங்க எனக்கு கதை சொல்லணுமா? வாங்க சார்... ஷூட்டிங் போகலாம்’னு சொன்னான். விஜய் சேதுபதி என் மூத்த பிள்ளை. வேற என்ன சொல்ல!''

''விஜய் சேதுபதி... விஷ்ணு ரெண்டு பேர்ல யார் ஹீரோ, யார் வில்லன்?''  

''ஒருத்தருக்கொருத்தர் நடிப்பதில் காட்டுற அக்கறையைப் பார்த்தா, பரஸ்பரம் ரெண்டு பேருமே அவங்கவங்களுக்கு வில்லன்தான். சில காட்சிகளில் விஷ்ணுவும் அசரடிக்கிறான். இவங்க ரெண்டு பேர்ல யார் பேர் வாங்கப் போறாங்கனு நானே எதிர்பார்ப்போடு காத்துட்டு இருக்கேன். ரெண்டு பேரையும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்; என் ஸ்க்ரிப்ட்டும் விட்டுக்கொடுக்காது!''

''அதிசயமா இசைக்கு யுவன்-வைரமுத்து கூட்டணி பிடிச்சுட்டீங்க. பாடல்களில் என்ன விசேஷம்?''

''நான் யுவன் ஷங்கர் ராஜா ரசிகன். அவர் இந்தப் படத்துக்கு மியூசிக் பண்ணா நல்லா இருக்கும்னு தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, போஸ்கிட்ட சொன்னேன். 'தாராளமாக் கேட்டுப்பாருங்க’னு சொன்னாங்க. யுவன்கிட்ட கதை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. 'வைரமுத்து பாட்டு எழுதினா நல்லா இருக்கும்’னு சொன்னேன். சின்னதா யோசிச்சார்... 'அவருக்கு சம்மதம்னா, எனக்கு ஓ.கே. ஆனா, அவர் ஒப்புக்குவாரானு தெரியலையே’னு சொன்னார். 'நிச்சயமா எழுதுவார்’னு சொல்லிட்டு, 'யுவன் இசையமைக்கிறார். நீங்க பாட்டு எழுதுவீங்களா?’னு கவிஞரிடம் கேட்டேன். 'தாராளமா எழுதலாமே’னு சொன்னார். ரெண்டு பேரும் ரெண்டு தடவை சந்திச்சாங்க. அப்புறம் யுவன் டியூன் கொடுத்தார். வைரமுத்து எழுதினார்.

'அத்துவானக் காட்டுக்கு
தப்பிவந்த ஆட்டுக்கு
தாய் மடி அமைஞ்சதடா...
கல்லிருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொண்ணு வாய்த்ததடா...’னு
படக் கதையை நாலு வரில அடக்கிட்டார் கவிஞர். அந்தப் பாட்டை யுவனே பாடினார். அழகா அமைஞ்சிருக்கு ஆல்பம்!''

- க.நாகப்பன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்