“லஷ்மி ராமகிருஷ்ணனே பாராட்டினார்!” | “லஷ்மி ராமகிருஷ்ணனே பாராட்டினார்!”, மதுரை ராமர் பேட்டி , லட்சுமி ராமகிருஷ்ணன், மதுரை ராமர், சொல்வதெல்லாம் உண்மை, விஜய் டிவி, சொல்வதெல்லாம் பொய்

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (07/11/2014)

கடைசி தொடர்பு:11:55 (07/11/2014)

“லஷ்மி ராமகிருஷ்ணனே பாராட்டினார்!”

விஜய் டி.வியின் 'அது இது எது?’ நிகழ்ச்சியில் 'என்னம்மா இப்படிப் பண்றீங் களேம்மா? போலீஸைக் கூப்பிடுவேன்’ என்ற வசனங்களால் அமர்க்களப்படுத்திவிட்டார் மதுரை ராமர். சமூக வலைதளங்களிலும் இந்த வசனத்தின் பெயரில் ஃபேஸ்புக் பக்கங்களை ஆரம்பித்து, இதே வசனத்தை பலவிதமாகப் பயன்படுத்தி கலாய்க்கிறார்கள். மதுரையில் இருந்த ராமரிடம் 'என்ன பாஸ் இப்படி பண்ணிட்டீங்களே?’ என கேட்டால்,

''உண்மையிலேயே இந்த வசனம் இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு நினைக்கவே இல்லைங்க. 16 வயசுல இந்த ஃபீல்டுக்கு வந்தேன். மேடை, டி.வினு கிட்டத்தட்ட 20 வருடங்களா காமெடி நிகழ்ச்சிகள் பண்ணிக்கிட்டு இருக்கேன்.  இதுவரை கிடைக்காத அங்கீகாரம் இந்த வசனம் மூலமா கிடைச்சிருக்கிறது சந்தோஷமா இருக்கு.  

மதுரை பக்கத்துல மேலூர்தான் சொந்த ஊர். சின்ன வயசுல இருந்தே அடுத்தவங்களை இமிடேட் பண்ணி நடிக்கிறது, நடிகர் நடிகைகள் மாதிரி மிமிக்ரி பண்றதுனு சொந்தக்காரங்ககிட்ட அதகளம் பண்ணுவேன். 'எதுக்குடா இதெல்லாம்’னு உதாசீனப்படுத்தாம, 'சூப்பரா பண்றேப்பா’னு உற்சாகப்படுத்தினாங்க. ஸ்கூல்ல, காலேஜ்ல என்னோட நிகழ்ச்சிகள் பொறி பறக்கும். பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் சாரோட 'ஹியூமர் கிளப்’ல சேர்ந்தேன். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில இருக்கிற நோயாளிகளை சந்தோஷப்படுத்துறதுக்கு காமெடி நிகழ்ச்சிகள் நடத்துவோம். 'நியூ காமெடி பாய்ஸ்’னு ஒரு குரூப் ஆரம்பிச்சு நிறைய மேடை நிகழ்ச்சிகள் பண்ணினோம். அப்புறம் விஜய் டி.வியின் 'கலக்கப்போவது யாரு?’ல ஆரம்பிச்சு, 'அது இது எது?’ வரை நிறைய நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன்'' என்றவர் 'என்னமா இப்படி பண்றீங்களேமா?’வின் அதகளத்தை ஆரம்பித்தார்.

''ஆக்சுவலா என்னோட மனைவி 'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை ரெகுலரா பார்ப்பாங்க. அந்த நேரத்தில் சேனலை மாத்தணும்னு ரிமோட்டைக் கையில எடுத்தா, அன்னைக்கு சோறு கிடைக்காது. அந்த அளவுக்கு தீவிரமான ரசிகை. அப்போதான் 'இந்த நிகழ்ச்சியை ஏன் காமெடியா பண்ணக் கூடாது?’னு தோணுச்சு. பண்ணிட்டேன். தவிர ஊர்ல குழந்தைக்கு சோறு ஊட்டுற அம்மாக்கள் எல்லாம் என்னை காட்டி 'அதோ அவர்தான் போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவாரு... சாப்பிடு’னு கலாய்க்கிறாங்க. இந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு சிவகார்த்திகேயன் 'பின்னிட்டீங்க அண்ணே’னு பாராட்டினார். 'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்துற லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடமே பாராட்டினது இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. இந்த பாராட்டுகளுக்கெல்லாம் என்கூட நடிச்சவங்களுக்கும் பெரிய பங்கு இருக்கு. அடுத்து சினிமாவிலேயும் நடிக்கணும்னு ஆசை'' என்றார் மதுரை ராமர்!

கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்