'லவ் பண்ணுங்க, நல்லா டிரஸ் பண்ணுங்க'! | 'லவ் பண்ணுங்க, நல்லா டிரஸ் பண்ணுங்க'! , சூர்ய பிரபாகர், ஓம் சாந்தி ஓம், ஶ்ரீகாந்த்

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (26/11/2014)

கடைசி தொடர்பு:15:15 (26/11/2014)

'லவ் பண்ணுங்க, நல்லா டிரஸ் பண்ணுங்க'!


''சினிமாங்கிறது பிளாஸ்டிக் ஆர்ட். அந்த கலைக்குள்ள என் படைப்பும் அர்த்தமுள்ளதா இருக்கும்" சினேகமாய் சிரிக்கிறார் சூர்ய பிராபகர். கதிர், எஸ்.ஜே.சூர்யா, எம். ராஜேஷிடம் சினிமா கற்றவர். 'ஓம் சாந்தி ஓம்' படத்தின் மூலம் அறிமுக இயக்குநராகப் புதுத்தடம் பதிக்கிறார்.

‘‘பாலிவுட் ஸ்டைல்ல டைட்டில் இருக்கே? 'ஓம் சாந்தி ஓம்' எப்படி இருக்கும்?’’
‘‘அடுத்தவங்களுக்காக வாழ்ற வாழ்க்கைதான் அர்த்தமுள்ள வாழ்க்கைன்னு ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கார். அதான் படத்தோட ஒன்லைன். எல்.கே.ஜி படிக்குற பையன், காலேஜ் ஸ்டூடண்ட், நடுத்தர வயதுப் பெண்மணி, 60 வயது மூத்தவர், ஸ்ரீரங்கத்துல இருக்கும் தனியார் ஊழியர்னு அஞ்சு பேருக்கும் ஒரு பிரச்னை வருது. அந்த பிரச்னையை ஹீரோ எப்படி தீர்க்கிறார்ங்கிறதுதான் கதை. இப்படி ஓடி ஓடிப் போய் உதவி செய்ற ஹீரோவோட கேரக்டரே அவர் காதலுக்கு எதிரியாகிடுது. பிரிஞ்சு போற காதலி எப்படி மீண்டும் ஹீரோவைத் தேடி வர்றாங்கன்னு சுவாரஸ்யம் குறையாம சொல்லியிருக்கேன். காதல், அன்பு, மனிதநேயம், சமூக அக்கறைன்னு படம் முழுக்க மென்மையான உணர்வுகள் கூடவே வரும். மொழிகள் கடந்தும் நிலைச்சு நிற்குறது அன்பும் மனிதநேயமும்தான்னு இந்தப் படத்துல அழுத்தமா சொல்லியிருக்கேன். ’’‘‘இப்போ இருக்குற டிரெண்டுக்கு இந்த மென்மையான உணர்வுகளை சொல்றது சரியா இருக்குமா?’’
‘‘எப்பவுமே மென்மையான உணர்வுகளை எல்லாரும் மதிப்பாங்க. சினிமாவுல எப்பவும் டிரெண்ட்டுன்னு ஒரு விஷயம் இல்லை. நாம சொல்ல வர்ற விஷயத்தை சரியா சொன்னா போதும். மக்கள் அதை நிச்சயம் ஏத்துப்பாங்க. காமெடி, கமர்ஷியல்னு சில படங்கள் ஜெயிச்சுட்டா எல்லாப் படங்களும் ஜெயிக்குறதா நெனைக்குறோம். அது அப்படி இல்லை. விஷூவல் ட்ரீட்மென்ட் நல்லா இருந்தா மக்கள் நிச்சயம் கொண்டாடுவாங்க. இன்னைக்கு வீட்ல ஆரம்பிச்சு நாடு வரைக்கும் உதவி தேவைப்படாதவங்க யாருமே இருக்க முடியாது. அம்மான்னு சொல்ற மாதிரி உதவியும் இன்னைக்கு பொதுவானது. காந்தியும், கோட்ஷேவும் கூட உதவி செய்திருக்காங்க. காந்தி நெறைய பேருக்கு உதவி செய்திருக்கலாம். அதே சமயம் அவரும் தேவைப்பட்ட உதவியை வாங்கியிருக்கார். எல்லாருக்குமே இங்கே உதவி தேவைப்படுது. தீர்க்க முடியாத, நிறைவேற்ற முடியாத பல பிரச்னைகளுக்கு உதவி எந்த அளவுக்கு முக்கியமா இருக்குன்னு ஒவ்வொருத்தரையும் உணர வைக்கத்தான் இந்தப்படம். ’’

‘‘ஸ்ரீகாந்துக்கு இப்போ ஒரு ஹிட் ரொம்ப தேவையாச்சே. எப்படி பண்ணியிருக்கார்?’’
‘‘ஹூண்டாய் கம்பெனியில வேலை செய்ற சேல்ஸ் எக்ஸிகியூடிவ் கேரக்டர்ல நடிச்சிருக்கார் ஸ்ரீகாந்த். கதையைக் கேட்டதும் ரொம்பவே சந்தோஷப்பட்டார். 'இந்த மாதிரி ஒரு கதைக்காகத்தான் காத்திருந்தேன்'னு தன்னோட ரெண்டு படங்களையும் தள்ளி வெச்சிட்டு நடிக்க ஆர்வமா முன்வந்தார். ஆறு வயசுல  இருந்து அறுபது வயசு பெரியவங்க வரைக்கும் ஸ்ரீகாந்தைப் பிடிக்கும். இப்படி ஒரு பேரன், மகன், அங்கிள், அண்ணன் இருந்தா நல்லா இருக்குமேன்னு ஒவ்வொருத்தரும் நினைப்பாங்க. ஸ்ரீகாந்த் ஸ்க்ரீன்ல பண்ற ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் தனக்குப் பண்றதாவே மக்கள் நினைப்பாங்க.  இதயப்பூர்வமான பிரச்னைகளைத் தீர்க்க ரொம்ப எளிய வழியும் இருக்கேன்னு ஆச்சர்யப்படுற மாதிரி ஒரு தீர்வை படத்துல சொல்லியிருக்கேன்.  வழக்கமான ஸ்ரீகாந்த் மாடுலேஷன், டயலாக் இல்லாம வித்தியாசமான ஃபெர்பாமன்ஸ்ல பின்னி இருக்கார்.  ஸ்ரீகாந்த்  படம்னு மீறி பெரிய சர்ப்ரைஸ் , ஃப்ரெஷ் லுக் இருக்கும். ஸ்ரீகாந்த் கவுன் டவுன் ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு தைரியமா சொல்லலாம். நிச்சயம் இந்தப் படத்துக்கு பிறகு ஸ்ரீகாந்துக்கு பெரிய பிரேக் கிடைக்கும். ’’

 ‘‘படத்துல வேற என்ன எதிர்பார்க்கலாம்?’’
‘‘ ஹீரோயின் நீலம் உப்பாத்யாயா  மினியேச்சர் காஜல் மாதிரி இருப்பாங்க. எனர்ஜிடிக்கான பாம்பே பொண்ணு. படத்தோட முதல் பாட்டு ஹீரோயின் அறிமுகத்தைப் பசங்க நல்லா என்ஜாய் பண்ணுவாங்க. கடல்ல நடிச்ச பைஜூ படம் முழுக்க காமெடியனா ஜொலிப்பார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் குத்துப்பாட்டுக்கு ஆடுறதைப் பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது.  இதுல சின்னதா ஒரு ட்விஸ்ட் இருக்கு. வயசுல கம்மியா இருக்குற ஸ்ரீகாந்த் தான் வவ்வால் பாண்டியனுக்கு அப்பா. இதுல எதையும் சொல்லி மழுப்பலை. அது என்ன ட்விஸ்ட்னு தியேட்டருக்கு வந்து தெரிஞ்சுக்குங்க. ‘புத்தி  உள்ளவனை உடல் பலத்தால அடிக்கணும். உடல் பலம் உள்ளவனை புத்தியால அடிக்கணும்‘ , ‘மத்தவங்க கஷ்டத்தைப் பார்த்து கண்ணீர் விடுறதை விட கண்ணீரைத் துடைக்குவனுக்குதான் மரியாதை அதிகம்.’ ‘இந்த உலகத்துல உதவின்னு கேட்டு வர்றவனுக்கு உதவி செஞ்சதால் கெட்டுப்போனவன் யாரும் இல்லை.’ ‘அவங்க எப்பவும் அப்படிதான், நாங்க எப்பவுமே இப்படிதான்’ வசனங்கள் உங்களை யோசிக்க வைக்கும். டெக்னிக்கலா சவுண்டான படம் இது. திரைக்கதை நாலைஞ்சு முறை புரட்டிப் பார்த்து, ரசிகர்களுக்குப் புரியணும்னு லீனியர்ல சொல்லியிருக்கேன்.’’ ‘‘உங்க குருநாதர்களிடம்  இருந்து என்ன கத்துக்கிட்டீங்க?’’ 
‘‘கதிர் சார்கிட்ட இருந்து ஃப்ரேமிங், பாடலுக்கான விஷூவல்ஸ் கத்துக்கிட்டேன். கதிர் சார் ஆர்டிஸ்ட்கிட்ட வேலை வாங்குற விதமே தனி ஸ்டைல். எப்பவுமே க்ளோஸ் ஃப்ரெண்டாதான் அசிஸ்டன்ட் கிட்ட பழகுவார். ‘நெறைய பொண்ணுங்களைக் கவனிங்க, லவ் பண்ணுங்க, நல்லா டிரஸ் பண்ணுங்க’ன்னு சொல்வார். சுப்பிரமணிய சிவா சின்சியாரிட்டி நமக்கும் தொத்திக்கும். தூங்காம, கொள்ளாம வேலையே பழியாக் கிடப்பார். எஸ்.ஜே.சூர்யா கிட்ட வேலை செய்தபோதுதான் ஸ்க்ரிப்ட் பக்கம் மோல்ட் ஆனேன். ஆடியன்ஸை இம்ப்ரெஸ் பண்ணா போதும்னு நெனைச்ச நான், லாஜிக் ரொம்ப ரொம்ப முக்கியம்னு எஸ்.ஜே சூர்யாகிட்ட தான் கத்துக்கிட்டேன். ராஜேஷ் எப்பவும் நல்ல நண்பராதான் பழகுவார். ஹியூமரை எப்படி சரியா சொல்லலாம்னு ராஜேஷ் கிட்ட மட்டும்தான் கத்துக்க முடியும்’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்