ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

ஒரு பொண்ணு... ஒரு பையன்... ரெண்டு கல்யாணம்!

''24 வயசுதான் ஆகுது. அதுக்குள்ள ரெண்டு தடவை கல்யாணம் ஆகியிருக்கு தெரியுமா? ஏன் இப்படி ஷாக் ஆகுறீங்க. பொறுமையா கேளுங்க’’ என 'ம்ம்ம்' கொட்ட வைக்கும் பாலசரவணனை உங்களுக்குத் தெரிகிறதா?
'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் பீடையாக நடித்துக் கலக்கினாரே அவரேதான். கையில் அரை டஜன் படங்களுடன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் டார்லிங் படத்தில் ஜி.வி பிரகாஷுடன் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கப் போகிறார் பாலசரவணன். 
அவருடன் ஒரு ஜாலிப் பேச்சு...


''மதுரை பக்கத்துல இருக்குற பரவைதான் சொந்த ஊரு. சுமாரா படிக்குற பையனுக்கு இன்ஜினீயரிங் காலேஜ்ல சீட் கிடைச்சா என்ன பண்ணுவான்? அதோட விளைவு 24 அரியர்.அப்புறம் எப்படியோ 8 வருஷத்துக்குப் பிறகு காப்பியடிச்சாவது அந்த அரியரை பாஸ் பண்ணினேன். காலேஜ் படிச்ச சமயத்துல என் தோழியோட தோழிக்கும் எனக்கும் ஒரு மோதல் ஃபிரண்ட்ஷிப் ஆரம்பிச்சுது. ரொம்ப நாளா அந்த தோழியை பாக்காமலே பழகிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் அவங்கள ஒரு காபி ஷாப்ல சந்திச்சேன். பாத்ததும் கட்டுனா இவங்களதான் கட்டணும்னு முடிவு பண்ணி,'கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?'னு கேட்டேன். அவங்களுக்கும் என்னை பிடிச்சுப் போக, எங்க வீட்ல இதைப் பத்தி சொன்னேன். அவங்களுக்கும் பொண்ணை பிடிச்சுப் போச்சு. ஆனா,பொண்ணு வீட்டுல உள்ளவங்க ஒப்புக்கல. 

 


ராத்திரியோட ராத்திரியா பொண்ணை கடத்திட்டு வந்துடுனு எங்க வீட்டுலயே ஐடியா கொடுத்தாங்க. அப்புறம் என்ன... கூட்டிட்டு வந்து, சொந்தபந்தம் எல்லாரும் சாட்சியா வெச்சு தாலிக் கட்டியாச்சு. பிறகு, அவங்க வீட்டுலயும் ஓகே சொல்ல... திரும்பவும் இன்னொரு தரம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்''என்று சொல்லி சிரித்துத் தீர்க்கிறார் பாலசரவணன்.


தொடர்ந்து தன் கிராஃப் பற்றிப் பேசியவர், 'விஜய் டி.வி-யில வந்த கனா காணும் காலங்கள் ஆடிஷன்ல செலக்ட் ஆனதுதான் சினிமாவுக்கான என்னோட முதல்படி. அதுக்கப்புறம் பண்ணையாரும் பத்மினியும் ஷார்ட் பிலிம்ல நடிச்சு, குட்டிப் புலி படத்துல வாய்ப்பு கிடச்சுனு படிப்படியா முன்னேறினேன். பண்ணையாரும் பத்மினியும் திரைப்படமா எடுத்தப்ப, நான் நடிச்ச பீடை கேரக்டர் எனக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துச்சு. 'நீ பீடையா'னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, நான் பீடையெல்லாம் கிடையாதுங்க... நிஜத்துல ரொம்ப ராசியான ஆள். அதனாலதான் இப்ப, டார்லிங் படத்துல ஜி.வி பிரகாஷ் சாரோட நடிச்சுருக்கேன். இது எவ்வளவு பெருமையான விஷயம். எத்னையோ வெற்றிப் படங்கள்ல இசையமைச்சு இருக்கார். ஆனா, கொஞ்சமும் பந்தா காட்ட மாட்டார். என்கூட ரொம்ப நல்லா பழகுவார். என்னை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போக நிறைய ஐடியா சொல்லுவார். இந்த வருஷம் பொங்கல் சூப்பரா இருக்கும்ல!''
&கண்களில் எதிர்பார்ப்பு மின்ன கேட்கிறார் பாலசரவணன்!


-பொன்.விமலா-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!